search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவில் பல்லி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஓட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமானோர் சாப்பிட வருவதுண்டு.

    மார்த்தாண்டம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், தனது மகன் ரோகித்திடம் இரவு சாப்பாட்டுக்கு மாட்டு இறைச்சி பிரை வாங்கி வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர், அந்த ஓட்டலுக்குச் சென்று மாட்டு இறைச்சி பிரை வாங்கி வந்துள்ளார்.

    தொடர்ந்து வீட்டில் வைத்து பார்சலை பிரித்த போது, இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லி கிடந்துள்ளது. இதனை பார்த்து ரோகித்தும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ரோகித் புகார் செய்தார். அப்போது பல்லி கிடந்த இறைச்சியையும் அவர் காண்பித்தார்.

    அதனை பெற்றுக்கொண்ட போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் மற்றும் பணியாளர்கள், குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தனர்.


    இதில் சந்தேகம் இருந்ததால் இறைச்சியை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அந்த சம்பவம் மக்கள் மனதை விட்டு மறைவதற்குள் இறைச்சியில் பல்லி கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டல்களில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், அசைவ உணவு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×