search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்தும்பி குடைகள்"

    • விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
    • கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி ஒவ்வொறு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உடையாற்றுகிறார்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

    நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.

    மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பல பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது அவர் ஆந்திர மாநிலம் 'அரக்கு காபி', கேரள மாநிலம் 'கார்தும்பி குடைகள்' பற்றியும் பேசினார். 'கார்தும்பி குடைகள்' பற்றி பிரதமர் மோடி கூறியதாவது:-

    கேரள கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் குடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரளாவின் அட்டப்பாடியில் தயாராகும் 'கார்தும்பி குடைகள்' சிறப்பு வாய்ந்தவை. இந்த வண்ணமயமான குடைகளை கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

    இன்று இந்த குடைகளின் தேவை நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த குடைகள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. வத்தலக்கி கூட்டுறவு விவசாய சங்கத்தின் மேற்பார்வையில் 'கார் தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகின்றன. இந்த சமூகம் பெண் சக்தியால் இயக்கப்படுகிறது.

    பெண்களின் தலைமையின் கீழ் அட்டப்பாடி பழங்குடி சமூகம் முன்முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணத்தை உருகாக்கியுள்ளது. இவர்கள் குடைகளை மட்டும் விற்கவில்லை. அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்கின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    'மன் கி பாத்' நிகழ்ச்சியில் `கார் தும்பி குடைகள்' மற்றும் அதனை தயாரிக்கும் பழங்குடியின பெண்கள் பற்றி பிரதமர் மோடி பேசியிருப்பது கேரளாவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் `கார் தும்பி குடைகள்' தயாரித்துவரும் அட்டப்பாடி பழங்குடியின பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியை சேர்ந்த பழங்குடியின கிராம பெண்களால் 'கார்தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப சமூகம் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து 'கார் தும்பி குடைகள்' இந்த பருவமழையில் சந்தைக்கு வந்துள்ளன.

    சுமார் 50 முதல் 60 பழங்குடியின பெண்கள் `கார் தும்பி குடைகள்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு 20-30 குடைகளுக்கும், அவர்கள் தினமும் 600 முதல் 800 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தற்போது பல இ-காமர்ஸ் இணையதளங்களில் குடைகள் ரூ.350-390க்கு விற்கப்படுகின்றன.

    ×