search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை சபாநாயகர் தேர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
    • துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சட்ட விதிகளின்படி பாராளுமன்ற மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும். சபா நாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்த வேண்டிய முழு பொறுப்பும் துணை சபாநாயகருக்கு உண்டு என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை ஆளும் கட்சியும், துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளும் பெறும் வகையில் ஒருமித்த கருத்து இதுவரை மரபுபோல இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளால் கேட்க இயலவில்லை.

    பா.ஜ.க.வும் துணை சபாநாயகர் பதவிக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. அதற்கு பதில் சபையை நடத்துவதற்கு எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் பதவியை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாத் எம்.பி.யை களம் இறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பிரசாத் எம்.பி. அயோத்தி ராமர் கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கிறார். தலித் இனத்தை சேர்ந்தவரான இவரை துணை சபாநாயகர் தேர்வுக்கு முன்நிறுத்துவதன் மூலம் பா.ஜ.க.வுக்கு மிக கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். துணை சபாநாயகர் பதவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுக்கும் என்று முதலில் தகவல் வெளியானது.

    பிறகு துணை சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க.வே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. துணை சபாநாயகர் மூலம் முக்கிய முடிவுகளை எட்ட முடியும் என்பதால் பா.ஜ.க. தலைவர்கள் மிக தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பாமல் விட்டதுபோல இந்த தடவையும் கைவிட்டு விட பா.ஜ.க. தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற மக்களவையை வழிநடத்த 10 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை அமைத்து அறிவித்துள்ளார்.

    அந்த எம்.பி.க்கள் குழுவில் ஜெதாம்பிகை பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலிப்சைக்கியா (4 பேரும் பா.ஜ.க.), குமாரி செல்ஜா (காங்கிரஸ்), ஆ.ராசா (தி.மு.க.), ககோலி கோஸ் (திரிணாமுல் காங்கி ரஸ்), கிருஷ்ணபிரசாத் (தெலுங்குதேசம்), அவதேஸ் பிரசாத் (சமாஜ்வாடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    என்றாலும் துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×