search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி சிலைகள் பறிமுதல்"

    • 3 பேரும் திருச்சி வழியாக சிலைகளை சென்னைக்கு கொண்டு செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
    • மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சை:

    திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவினர் கடந்த 6-ந் தேதி தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 6 ஐம்பொன் சிலைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். 6 சிலைகளும் பழங்கால புராதானமிக்க சிலைகள் ஆகும். இதில் திரி புராந்தகர் சிலை 3 அடி உயரம் கொண்டது. வீணா தார தட்சிணாமூர்த்தி சிலை 2.75 அடி உயரம் உடையது. மேலும் 3.25 அடி உயர ரிஷபதேவர், தலா 2.75 அடி உயர 3 அம்மன் சிலைகள் என மொத்தம் 6 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரை ஓட்டி வந்த, சேலம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 42), மயிலாடுதுறை கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (64) , ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளீயானது.

    லட்சுமணன், 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது இந்த 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அதனை அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

    மேலும் இதுகுறித்து அவர் தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், லட்சுமணனின் மருமகனான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திரு முருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தனர்.

    3 பேரும் இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது.

    அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.

    இந்த வேளையில் இந்த சிலைகள் கிடைத்த விவரமும், சிலைகள் வெளி நாட்டுக்கு கடத்தப்படும் விவரமும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியதகவலாக கிடைத்தது. இதை தொடர்ந்து 3 பேரும் திருச்சி வழியாக சிலைகளை சென்னைக்கு கொண்டு செல்லும்போது போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

    இதை தொடர்ந்து ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதான 3 பேர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×