search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை டிரைவர் மரணம்"

    • டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
    • சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் சதீஸ்வரன் (வயது 37). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    ஊருக்கு வந்திருந்த சதீஸ்வரன், இன்று காலையில் வீட்டில் டீ குடிக்கும் போது மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் அது வராததால், சதீஸ்வரனை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் 108 ஆம்புலஸ்சு மூலம் செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது அவரது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கூறுகையில், 108 ஆம்புலன்சு டிரைவரின் அலட்சியம் தான் சதீஸ்வரன் உயிரை பறித்து விட்டது. அவர் மயங்கியதும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தோம்.

    ஆனால் வரவில்லை. ஆட்டோவில் சென்ற போது, ஆம்புலன்சை நடுவழியில் பார்த்தோம். அதன் டிரைவர் பரிசோதித்து பார்த்து விட்டு, சதீஸ்வரனுக்கு நாடி துடிப்பு சரியாக இல்லை. வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்.

    அதன்படி வீட்டுக்கு வந்த நிலையில், சதீஸ்வரன் உடலில் அசைவுகள் காணப்பட்டன. எனவே மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது 108 ஆம்புலன்சு டிரைவர், எங்களை மறித்து சதீஸ்வரனை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதே சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் பிழைத்து இருப்பார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×