search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • 2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.
    • ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் நடைபெறுகிறது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை அடுத்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம் என்றும் அதுபோல் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் முடிந்தவுடன் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து சென்று விடுவார் என்று பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த வேண்டிய அரசு, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அதன் கோர முகத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எச்சரித்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த வேண்டிய அரசு, அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அதன் கோர முகத்தை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அடக்குமுறைகள் தொடர்ந்தால், அவர்களுக்கு ஆதரவாகவும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எச்சரித்திருக்கிறது.

    எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய தமிழக அரசே, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இதே மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்'' எனத் தீர்ப்பளித்தது.

    அதன்பிறகும் திருந்தாத தமிழக அரசு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    போராடிப் பெற்ற இரு உரிமைகளையும் தி.மு.க. அரசு, கொடூரமாக பறித்திருக்கிறது. இதை விட கொடிய சமூக அநீதியை எவரும் இழைக்க முடியாது. இதன் மூலம் தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
    • மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    * கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

    * மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    * மின் கட்டண உயர்வால் தமிழகத்தின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * காவிரி நீரை சேமித்து வைக்க தமிழக அரசிற்கு தெரியவில்லை என்று கூறினார்.

    • தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.
    • சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருக்கிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி விட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், அணை நிரம்பும் வகையில் காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    கர்நாடக அணைகளில் இருந்து கடந்த ஜூலை 16-ஆம் நாள் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் பின், அடுத்த இரு வாரங்களில் அணை நிரம்பும் சூழல் உருவாகும்; அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அதனால், குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாமல் தவித்த காவிரி பாசன மாவட்ட உழவர்கள், சம்பா சாகுபடியை தொடங்குவது குறித்து நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேட்டூர் அணை அடுத்த ஓரிரு நாட்களில் திறக்கப்படவுள்ள நிலையில், அதை பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் மிக அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் குறைந்தது 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குத் தேவையான உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் வேளான் துறை அலுவலகங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ போதிய அளவில் இருப்பு இல்லை. காவிரி பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாததால், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேருவதற்கும் வாய்ப்பில்லை. அதனால், தண்ணீர் திறந்து விட்டாலும் கூட போதிய பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படுவது சாத்தியமற்றதாகி விடும்.

    இவை அனைத்துக்கும் மேலாக சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கடந்த ஆண்டு சம்பா, குறுவை ஆகிய இரு பருவங்களிலும் நெல் சாகுபடி தோல்வியடைந்ததால், பெரும்பான்மையான உழவர்களிடம் பணம் இல்லை. இதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது.
    • தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முனைவர் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் 4 மாதங்களாகியும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்ச்சிக் கடிதம் இன்று வரை வழங்கப்படவில்லை.

    அதனால் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்பை தொடங்க முடியாமலும், உதவித்தொகை பெற முடியாமலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டி, மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தேர்ச்சிக் கடிதங்களை வழங்கி, அவர்கள் குறித்த காலத்தில் முனைவர் பட்டப்படிப்பில் சேருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
    • ஆணையத்தின் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடது புறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலதுபுறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.

    வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    • தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது. வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

    வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

    அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை.

    ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட. 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைகப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

    நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது.

    ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது. பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் & சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள். பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான் மீன் பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

    வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம் முடிவடைந்து ஜூன் 16-ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதன் பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை பா.ம.க. வலியுறுத்தியும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தமிழக முதல்வரோ, ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.
    • அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க 45-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து நிருபர்களை சந்தித்தார்.

    வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அதற்கேற்ப எல்லா மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் வன்னியர்களுக்கு மக்கள் தொகையில் 20 விழுக்காடு என்பதனால், அவர்களுக்கு 20 விழுக்காடு கொடுக்க வேண்டும். அதேபோல் வன்னியர்களுக்கு 18-ல் இருந்து 22 ஆக உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.

    தீர்மானம் நிறைவேற்றி 44 ஆண்டுகள் 11 ஆயிரம் கிராமங்களில் பரப்புரை செய்து மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை சொல்லி சர்வ விகிதாச்சாரங்களை பெற்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒரு நாள் சாலை மறியல் ஒரு நாள் ரெயில் மறியல் 7 நாள் தொடர் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி 10.5 என்ற அளவாவது இடஒதுக்கீடு கொடுங்கள் என்று சொன்னபோது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு வழங்கினார்கள். அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.

    45 ஆண்டு காலங்கள் ஆகியது. ஆனால் அந்த கோரிக்கை அப்படியே இருக்கிறது, அதனால் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டத்தை 7 நாள் சாலை மறியலை விட கடுமையாக செய்தால்தான் இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள இளைஞர்கள் ஆர்வமாக துடிப்போடு இருக்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டதை ஏமாற்றப்பட்டது யாரால் எதனால் என்று புரியாமல் இருந்தவர்களுக்கு நாங்கள் புரிய வைத்திருக்கிறோம்.

    அவர்கள் இப்பொழுது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த போராட்டம் மிகவும் கடுமையான போராட்டமாக இருக்கும். 45 ஆண்டு அடி எடுத்து வைக்கும் இந்த தினத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு ஒட்டுமொத்த சமுதாயமும் இந்த போராட்டத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ஆகையால் அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×