search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு"

    • இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது.
    • மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

    நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இதேபோல் அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    கனமழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சாண்டிநல்லா பகுதியில் மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வாகனங்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்தன. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை நீடித்தது. இந்த மழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.

    தரைப்பாலம் நீரில் மூழ்கியதை அடுத்து, ஊட்டியில் இருந்து தெப்பக்காடு வழியாக கூடலூர் மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மேலும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை ஆற்றுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், பழங்குடியின மக்கள், சுற்றுலா பயணிகள் மாயாற்றின் அருகே செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் அந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. கற்கள், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மலைப்பாதையில் கிடந்த மண், கற்கள் அகற்றப்பட்டன. அதனை தொடர்ந்து போக்குவரத்தும் சீரானது.

    கூடலூர்-ஓவேலி சாலையில் ராக்லேன்ட் பகுதியில் மூங்கில்கள் சரிந்து அருகே இருந்த மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கூடலூர்-ஊட்டி சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியில் ராட்ச பாறை மற்றும் மரம் ஒன்று முறிந்து, சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றினர்.

    அவலாஞ்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்கிறது.

    இதன் காரணமாக அவலாஞ்சியில் வனத்துறை சார்பில் நடைபெறும் சூழல் சுற்றுலாவுக்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37, அப்பர் பவானியில் 24 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-372, அப்பர் பவானி-248, எமரால்டு-135, கூடலூர்-108, அப்பர் கூடலூர்-106, சேரங்கோடு-113, பந்தலூர்-92, ஓவேலி-88, பாடந்தொரை-85, தேவாலா, குந்தா-83, செருமுள்ளி-82, நடுவட்டம்-79, கிளைன்மார்கன்-59, ஊட்டி-53.

    ×