search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை காளான்கள்"

    • சுற்றுலாப் பயணிகளின் பைகளிளும் சோதனை.
    • போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை புறக்கணித்து விட்டு பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்.

    இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் மண் வீடு, ஏ பிரேம் ஹவுஸ், டூம் ஹவுஸ், டெண்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர். இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

    இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், போலீசார், சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்.

    மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கி வந்த ஏ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும்.

    எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும், டெண்ட் கூடாரம், டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    ×