search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடனாநதி அணை"

    • களக்காடு, நாங்குநேரியில் சாரல் மழை பெய்தது.
    • குண்டாறு அணை பகுதியிலும் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் அதிகாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக இன்று காலை வரை பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறில் 5.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் 115.55 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 122 அடியை எட்டியுள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1167 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 70.59 அடியாக உள்ளது.

    இன்று காலை 8 மணிவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 96 மில்லி மீட்டர் அதாவது 9.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து பகுதியில் 82 மில்லி மீட்டர் 8.2 சென்டிமீட்டர், காக்காச்சி எஸ்டேட் பகுதியில் 6.8 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 14 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 33.18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர பகுதியை பொறுத்தவரை 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான காற்று வீசி வருகிறது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் விட்டு விட்டு சாரல் அடித்து வருகிறது. புறநகர் பகுதிகளில் சேரன்மகா தேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம், கூடங்குளம், பணகுடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அம்பை சுற்றுவட்டாரத்தில் 15 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. களக்காடு, நாங்குநேரியில் சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் 2 நாட்களாக வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதோடு, அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் கனமழை பெய்துள்ளது.

    அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் குண்டாறு அணை பகுதியிலும் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    ஏற்கனவே அந்த அணை நிரம்பி வழிந்து வரும் நிலையில், தற்போது கூடுதாலாக நீர் வெளியேறி வருகிறது. அடவி நயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 16 மில்லிமீட்டரும், ராமநதியில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 74 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 78.50 அடியாக உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 113 அடியை கடந்துள்ளது.

    ×