search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் வீடு கொள்ளை"

    • கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.
    • கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதியை குறி வைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவேற்காடு பகுதியில் என்ஜினீயர் ஒருவர் வீட்டில் முகமூடி கும்பல் 103 பவுன் நகையை கொள்ளையடித்து கைவரிசை காட்டி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், ஈ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    வெளிநாட்டில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில் அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அண்ணாநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ அதில் இருந்த 103 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனன் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நேரத்தை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    என்ஜினீயர் ஜனார்த்தனன் கடந்த 10 ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தார்.

    தற்போது மகளின் படிப்புக்காக கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் அயனம்பாக்கம் பகுதிக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். அவர் இருந்த வீட்டின் மேல் பகுதியில் வேறொருவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது தான் மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாக இல்லை. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்றது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.

    கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து செல்வது பதிவாகி உள்ளது.

    இரவு 7.45 மணிக்கு வீட்டுக்குள் செல்லும் கொள்ளையன் 8.15 மணிக்கு நகை-பணத்துடன் வெளியே செல்கிறான். அவனுடன் கூட்டாளிகள் மேலும் சிலரும் வந்திருக்கலாம். அவர்கள் வீட்டின் வெளி பகுதியில் நோட்டமிட்டு காத்திருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளி களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    என்ஜினீயர் வீட்டில் 103 பவுன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×