search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் தடை"

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18-ந்தேதி மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து பவானிசாகர் அணை மீது சென்று அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தற்போது பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    ×