search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கட்டை வீடு"

    • வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது.
    • 4 பக்கமும் மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயி.

    இயற்கை மீதும் இயற்கை சார்ந்த பொருட்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது நிலத்தில் இயற்கை சார்ந்த புதிய வீடு கட்ட திட்டமிட்டார்.

    அதன்படி சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரப்பலகைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க சிவசுப்பிரமணியன் திட்டமிட்டுள்ளார்.

    எனவே மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்திடம் சிவசுப்பிரமணியன் தனது ஆசையை கூறியுள்ளார். அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால் எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டினார்.

    இருப்பினும் சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோம சுந்தரத்தை ஊக்கப்படுத்தி உள்ளார்.

    இதனால் கடந்த 2021-ம் ஆண்டு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்கள், சிமெண்ட், மணல் கலவையை கொண்டு கட்டிய நிலையில், தொடர்ந்து அடித்தளத்திற்கு மேல் பகுதியில் 4 புறத்திலும் மற்றும் மேற்கூரை சேர்த்து முழுக்க முழுக்க மரப்பலகைகளை கொண்டு வீடு கட்டி உள்ளனர்.

    மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு சமையல் அறை ஆகிய அறைகளை இந்த வீடு கொண்டுள்ளது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரப் பலகைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தி உள்ளனர்.

    அதேபோல் கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலாம்பாக்ஸ் எனப்படும் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்படும். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும்.

    எனவே சோமசுந்தரம் வீட்டின் உறுதித்தன்மைக்காக 4 பக்கமும் மிக கனமான மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.

    மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு கபோர்டு அமைத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை சூழலோடு அமைந்துள்ள பரம்பு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் சிவசுப்பிரமணியன் அமைத்துள்ள வீடு பார்ப்போரை கவர்ந்து உள்ளது.

    இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், வெளிநாடு களில் இது போன்று மரக்கட்டை வீடுகள் அமைப் பது வழக்கம். தமிழ்நாட்டில் தென் தமிழக பகுதியில் இது போன்ற மரக்கட்டை வீட்டை எனக்கு தெரிந்தவரை யாரும் கட்டவில்லை.

    இங்கு நான் தான் முதலில் கட்டியுள்ளேன். செலவை பொறுத்தவரை 2-க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆகி உள்ளது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம். அனைவரும் இது போன்ற இயற்கை சார்ந்த மர வீடுகளுக்கு மாற வேண்டும் என்று கூறினார். 

    ×