search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணா சான்பாக்"

    • மேற்குவங்கத்தில் பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
    • தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்

    புதுடெல்லி:

    கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி சந்திரசூட், சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க சார்புநிலை காரணமாக பெண் டாக்டர்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். நாட்டில் நிலைமை மாறுவதற்கு தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என குறிப்பிட்டார். மேலும், மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு அருணா சான்பாக் வழக்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.

    இந்தியாவில் மருத்துவத் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்கு அருணா சான்பாக் வழக்கு ஆகும்.

    கடந்த 1967-ம் ஆண்டு 25 வயதான செவிலியர் அருணா சான்பாக், மும்பை கே.இ.எம். மருத்துவமனையில் உள்ள அறுவைசிகிச்சைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாய் என்பவருக்கும், அருணாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 1974-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.

    1973, நவம்பர் 27-ம் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் சோகன்லால் பார்த்தா வால்மிகி என்பவர் அருணாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்தார். இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன.

    சுமார் 40 ஆண்டுக்கு மேலாக அருணா சான்பாக் அதே நிலையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் அருணா சான்பாக்கை கே.இ.எம். மருத்துவமனையின் ஊழியர்களே கவனித்து வந்தனர்.

    இதற்கிடையே 2011-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் பிங்கி விரானி என்பவர், அருணா சான்பாக்கை கருணை கொலை செய்ய வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நாடுமுழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், 2011, மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    அருணா சான்பாக் மூளைச்சாவு அடையவில்லை என்பதால் அவரை கருணை கொலை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    அதேசமயம், அருணாவின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது பாதுகாவலர்களோ கோரிக்கை விடுத்தால் கோர்ட் அனுமதியுடன் அருணாவிற்கான உயிர்காக்கும் கருவிகளை துண்டிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2015, மே 18-ம் தேதி நிமோனியா பாதிப்பால் அருணா சான்பாக் உயிரிழந்தார்.

    இதில் அருணா சான்பாக்கை தாக்கிய சோகன்லால் பார்த்தா வால்மிகி மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் 7 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின் சோகன்லால் பார்த்தா வால்மிகி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×