search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கூடம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகரில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சொந்த வாகனங்களில் மது அருந்த வருவோர் திரும்பி செல்லவதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுபான கூடங்களுக்கு கோவை மாநகர போலீசார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 18 கார்களில் வந்தவர்கள் உள்பட 52 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பு தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பார்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்தி இருந்தால் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும் மதுக்கூட உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மது கூடத்திற்கு மது அருந்த வருவோர், கார் உள்ளிட்ட சொந்த வாகனத்தில் வந்தால் அவர் ஓட்டுநருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய பார் சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மது அருந்த பார்களுக்கு வருபவர்கள், வேறு போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனரா? என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

    பார்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய பார் நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மதுக்கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கையுடன் மதுக்கூட உரிமமும் ரத்து செய்யப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி முதல்முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    அதே தவறை 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

    இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×