search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி மழை"

    • சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
    • மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்கிறது. மேலும் அங்கு மேகமூட்டத்துடன் கடும்குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.


    இந்நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி , பர்லியார், கரும்பாலம், சின்னவண்டிச்சோலை, கேத்தி, காட்டேரி, சேலாஸ், வண்டிச்சோலை, எடப்பள்ளி, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை விட்டுவிட்டு மழை பெய்தது.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது.

    மேலும் குன்னூர் நூலக கட்டிட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் அங்குள்ள மின்கம்பம் சேதம் அடைந்ததுடன் மண்திட்டுகள் மழைநீரில் கரைந்து பஸ் நிலையத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக படிந்து பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதற்கிடையே குன்னூர் மார்க்கெட் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

    ஓட்டுபட்டறை முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல காந்திபுரம் பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டில் முன்புற தடுப்புசுவர் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தொடர்மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குறும்பாடி அருகே நள்ளிரவு ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர்.

    குன்னூர் தாலுகாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சப்-கலெக்டர் மேற்பார்வையில் தாசில்தார் தலைமையில் 10 பேர் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    குன்னூரில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அதிகாரிகள் குழுவினர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு சென்று, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்து வருகின்றனர்.

    குன்னூர் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தொடர்மழை, சிறிதுநேரம் வெயில், பின்னர் நீர்ப்பனி என காலநிலை அவ்வப்போது மாறி வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மலைப்பாதைகளில் செல்லும் வாகனஓட்டிகள் மரங்கள் மற்றும் மண் திட்டுகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. மேலும் ஒருசில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகர் பிரதான சாலையில் இருந்த மே பிளவர் மரம் காற்றில் சாய்ந்து அருகில் சென்ற மின்கம்பியின் மீது விழுந்ததில் அந்த மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது.


    தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் உடைந்து விழுந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. 

    • வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
    • தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது.

    குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொல கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

    இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜேசிபி எந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டியிலும் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர். 

    ×