search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வத்தலக்குண்டு"

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கிருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், சபரிமலை உள்ளிட்ட கேரளாவுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடந்து செல்லும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.

    நேற்று இரவு சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக சோதனை நடத்த திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. செந்தில்குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் இரவு 2 மணியளவில் வத்தலக்குண்டு பஸ்நிலையம் வந்தனர். அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன.

    மேலும் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு காலையில் முதல் பஸ்சுக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ்நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றி கடைகளையும் அடைக்குமாறு தெரிவித்தனர். மேலும் பஸ் நிலைய நுழைவாயிலில் பேரிக்காடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி திறக்க அறிவுறுத்தினர். பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ள போதிலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் அன்பழகனின் தாய் முத்துலட்சுமி மட்டுமே இருந்தார். அவர் தனது மகனுக்கு கடந்த சில நாட்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டு நாங்கள் சொல்வதை கேட்காமல் இருந்து வருகிறார்.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டு நேற்று காலையில் தான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். சிறிது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வெளியே சென்று வருவதாக என்னிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு தற்போது வரை வரவில்லை. எனது உறவினர்கள் அவரை தேடி வருகிறோம் என்றார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரையில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மதுரையை சேர்ந்த வாலிபர் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×