search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்று மதத்தினருக்கு கட்டாய ஓய்வு"

    • திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாவது:-

    திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனம் செய்ய 20 முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப உதவியுடன் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாங்கள் ஒரு சிறப்பு ஆலோசனையை ஏற்பாடு செய்வோம்.

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை விடுவிப்போம். அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பது பற்றி விவாதிப்போம்.

    அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நகராட்சி அல்லது பிற துறைகளுக்கு மாற்ற பரிந்துரை செய்வோம். திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது. விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்துவோம்.

    லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய் கொள்முதல் செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைப்போம்.

    பல மாநிலங்களுக்கு சுற்றுலாத் துறையால் தினசரி ஒதுக்கப்பட்ட 4,000 தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.

    இந்த டிக்கெட்டுகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தியது விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 62,085 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21,335 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.3.78 கோடி காணிக்கை வசூல் ஆனது. சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×