என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி"

    • சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
    • 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது.

    ஆந்திராவில் உள்ள சித்தூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

    இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, மா மரங்கள், பப்பாளி, சோளம், நெல் சேதமடைந்தது. ஸ்ரீகாகுளத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த சந்திப் என்பவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருப்பதி சம்சுக்தி நகரில் டிரான்ஸ்பார்மர் பழுது பார்த்துக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதே போல் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    • 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று மதியம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். அதன் விபரம் வருமாறு:-

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆர்டரின்பேரில் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தொழிலாளர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசாயன மாற்றம் காரணமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதில் அடுத்தடுத்து இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை.

    வெடி விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த அறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரை வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டாசு ஆலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 

    • மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. மேலும் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. நிம்ரிட்டா ரெயில் நிலையமும் சூறையாடப்பட்டது. ஜாங்கிபூர் பகுதியில் ஒரு கும்பல் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான கலிலுர் ரகுமான் அலுவலகத்தை சூறையாடியது.

    முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. வன்முறையில் 2 பேர் பலியானதாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார்.

    ஜாங்கிபூரி ல் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டம் பரவியது.

    மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சுமார் 500 பேர்) மேற்கு வங்காளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
    • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சி, மூலக்கழனி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு தீபாவளியையொட்டி உறவினரான திருநெல்வேலி மாவட்டம், திசையன் விளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) வந்து இருந்தார். கடந்த 14-ந் தேதி சந்திர சேகரனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து கடையில் இருந்த போது மதுகுடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேகரனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    • எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
    • குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).

    இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.

    இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
    • தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    மதுரை:

    மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.

    நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

    இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.

    ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.

    இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    • படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினீத் (வயது34). சி.பி.எம். உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர், எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தில் பணியாற்றி வந்தார். வினித் இன்று அதிகாலை தனது நண்பர் அக்ஷய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பள்ளிபுரம் பகுதியில் வந்த போது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வர்க்கலாவில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது. இதில் வினீத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் அக்ஷய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியில் பயணம் செய்தவர்கள் முந்திரிப் பருப்பு மூட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் பொரம்பலம் என்ற இடத்தில் இருந்து முந்திரி பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    லாரியில் டிரைவர் உட்பட 10 பேர் இருந்தனர். 2 மாவட்டங்களை இணைக்கும் சிலகவரி பகலு என்ற இடத்தில் லாரி சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

    லாரியில் பயணம் செய்தவர்கள் முந்திரிப் பருப்பு மூட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர்.

    விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் லாரிக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    லாரிக்கு அடியில் சிக்கிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (24). இவரது பாட்டி சரஸ்வதி (62).

    இந்த நிலையில் நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தனது பாட்டி சரஸ்வதியை ஜம்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார். அவரது பாட்டி சரஸ்வதி பின்னால் அமர்ந்து கொண்டு ஜம்பை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    இதை தொடர்ந்து உறவினர் வீட்டில் இருந்து துறையம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாட்டியுடன் நந்தகுமார் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் துறையம்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜம்பை கலுங்கு ஏரி அருகே உள்ள வளைவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு கார் நந்தகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நந்தகுமார் மற்றும் அவரின் பாட்டி சரஸ்வதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொருங்கியது.

    இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பவானி அருகே விபத்தில் பாட்டி, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்,
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ் (வயது 35). தொழிலாளி.

    இவருக்கு வசந்தி என்ற மனைவியும், மணிகண்டன் (17), ரகு (15) என்ற 2 மகன்களும் உள்ளனர். ரமேஷ் வழக்கம் போல் நேற்று காலை விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ரமேசுக்கு ஆஸ்பத்திரியில் நர்சுகள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். டாக்டர் உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், எனவே, ரமேசின் மரணத்துக்கு அங்கிருந்த டாக்டர் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு ஆஸ்பத்திரியை பா.ம.க. மற்றும் ரமேசின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது டாக்டர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ரமேஷின் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று விருத்தாசலம் நகர பா.ம.க. சார்பில் விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள தென்கோட்டை வீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இ.கே.சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரமேசுக்கு உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்களை கண்டித்தும், டாக்டர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் காரணமாக விருத்தாசலம்-சேலம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஷானிதா சில மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்துள்ளார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருமலை வேட்ட முக்குலட்சுமி நகரை சேர்ந்தவர் ஷானிதா. கலால்துறை அதிகாரியான இவர் திருவனந்தபுரத்தல் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்தார்.

    இந்தநிலையில் துறை தொடர்பாக தனக்கு வந்த ரகசிய புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஷானிதா சென்றிருக்கிறார். பட்டூர் பொது மருத்துவமனை சாலையில் சென்ற போது, அவரது இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதனால் ஷானிதா சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், அவரின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்னி ஷானிதா பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷானிதா சில மருத்துவ கல்லூரிகள் தொடர்பாக வந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார்.

    ஆகவே அவர் விபத்தில் தான் இறந்தாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷானிதாவுக்கு நசீர் என்ற கணவரும், முகம்மது பகத் என்ற மகனும், பைகா பாத்திமா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
    • உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).

    இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

    இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

    இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.

    குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    ×