search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94341"

    கவர்ச்சிகரமான போலி முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #LSpassesbill #unregulateddeposit #depositschemes
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் சஹாரா, சாரதா உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தும் மாதச்சீட்டுகளை நடத்தியும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவில் மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டன.

    இதுபோல் மேலும் நடைபெறாமல் இருப்பதற்காக போலி நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும், நிதி நிறுவனங்களுக்கான சட்டத்திட்டங்களை மிக கடுமையாக்கவும், மோசடி பேர்வழிகளுக்கு அதிகபட்சமான தண்டனை விதிக்கவும், பணம் செலுத்தி ஏமாந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வகை செய்யும் புதிய சட்ட மசோதா 18-7-2018 அன்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பாராளுமன்ற நிதித்துறை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    நிலைக்குழுவின் சில பரிந்துரைகளுக்கு பின்னர் இந்த மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு பின்னர் நிறைவேறியது.

    இந்த விவாதத்தின்மீது பேசிய மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் அரசின் உரிய அங்கீகாரம் பெறாத 978 நிதி வைப்பு திட்டங்கள் கண்டறியப்பட்டதாகவும், இவற்றில் 326 மோசடிகள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


    இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபாத்யாய் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், சாரதா போன்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மத்திய அரசு இதுவரை முறையான விசாரணை நடத்தவில்லை என்று குறிப்பிட்டார். ‘சிட் பன்ட்’ என்ற வார்த்தைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேறியது. #LSpassesbill #unregulateddeposit #depositschemes
    இந்தியாவின் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #leprosyground #groundfordivorce
    புதுடெல்லி:

    மலட்டுத்தன்மை மற்றும் தீராத நோய் பாதிப்புகள் ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.

    இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.

    அவ்வகையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் 1-7-2018 அன்று  நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் ஏதுமின்றி ஒருமனதாகநிறைவேறியது. எனவே, இனி தொழுநோயாளி என்று காரணம் காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து வழக்கு தொடர முடியாது.

    எனினும், ஏற்கனவே பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. #PersonalLawsAmendmentBill #RajyaSabha #leprosyground #groundfordivorce
    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்து பாஜக எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    பாராளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #AtalBihariVajpayee #VajpayeePortrait
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பிப்ரவரி 12-ம் தேதி படம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.



    அதன்படி, இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் பங்கேற்றனர்.

    நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் வாஜ்பாய். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானது குறிப்பிடத்தக்கது. #AtalBihariVajpayee #VajpayeePortrait

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். #ChandrababuNaidu #ChandrababuNaiduhungerstrike
    புதுடெல்லி:

    ஆந்திராவில் இருந்து சில மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டபோது, இதனால் ஆந்திராவுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரிகட்ட ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது. 

    ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் அலுவலகத்து பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். 

    இருப்பினும், தங்களுக்கான நீதி கிடைக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னர் அங்கம்வகித்த தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து விலகியது. மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.

    அதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றர்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

    டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

    இந்த உண்னாவிரதப் போராட்டத்துக்கு பின்னர் நாளை மறுநாள் (12-ம் தேதி) இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதியை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு மனு அளிப்பார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChandrababuNaidu #ChandrababuNaiduhungerstrike #hungerstrikeinDelhi #specialstatusforAP
    பாராளுமன்ற தேர்தல் பணியில் 15 லட்சம் பா.ஜனதா தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள் என்று முரளிதரராவ் கூறியுள்ளார். #Parliamentelection #BJP

    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதரராவ். இவர் அக்கட்சியின் பயிற்சி துறை பொறுப்பாளராகவும் பதவி வகிக்கிறார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பணிகளில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 1 லட்சம் கட்சி தொண்டர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக பணியாற்றினார்கள். அதன் பயனாக பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது.

    அதே பாணியில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பணியாற்ற இருக்கிறோம். அதற்காக 15 லட்சம் பா.ஜனதா தொண்டர்களுக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த தேர்தலைவிட 15 மடங்கு தீவிரமாக பணியாற்றுவார்கள்.

    2015-ம் ஆண்டில் இருந்து இதே பாணியில் பயிற்சி பெற்ற தொண்டர்கள் மூலம் தேர்தல் பணியாற்றி தொடர் வெற்றிகளை பெற்று இருக்கிறோம். அதே போன்று வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெறும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, “நன்கு பயிற்சி பெற்ற தொண்டர்களின் பணியின் மூலம் பல்வேறு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். சில மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கடும் போட்டி கொடுத்து இருக்கிறோம். சிறப்பாக செயலாற்றியுள்ளோம்.

    ராஜஸ்தானை பொறுத்த வரை பல பா.ஜனதா தலைவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளி இருந்தது. அதனால்தான் அங்கு சரிவு ஏற்பட்டது. அது சரி செய்யப்படும். தொண்டர்கள்தான் பா.ஜனதாவின் முதுகெலும்பு ஆவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Parliamentelection #BJP

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் கமி‌ஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமி‌ஷனர் அசோக் லாவாசா ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஒரு தொகுதி “காலியிடம்” என்று அறிவிக்கப்பட்டதும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 சட்டமன்ற தொகுதிகளும் 18.9.2017 அன்றே காலியானதாக அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் 25.10.2018 அன்றே அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதே போல் திருவாரூர், திருப்பரங்குன்றம்,ஓசூர், ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

    திருவாரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தேதியில் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன.

    ஆகவே இந்த தொகுதிகளுக்கு எல்லாம் உடனடியாக தேர்தலை நடத்தவில்லையென்றால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட கடமையை தேர்தல் ஆணையம் மீறுவதாக அமைந்து விடும்.

    வருகிற ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் வயிலாக அறிந்து கொண்டேன். ஆகவே மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    அவ்வாறு 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலுடன் இந்த சட்ட மன்ற தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவது வாக்காளர்களுக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கவும், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சவுகரியமாகவும் இருக்கும்.

    மேலும் அரசு கஜானாவிற்கு மற்றுமொரு தேர்தல் செலவு ஏற்படாமல் தவிர்க்கும். தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதனால் பயனடையும்.

    மக்களவைத் தேர்தலுக்கும், இந்த 21 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்தான் என்பதால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கோருவதில் நியாயம் இருக்கிறது.

    ஆகவே, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 21 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் நடைபெறவிருக்கின்ற 17-வது மக்களவை தேர்தலின் போதே இடைத்தேர்தலை நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதே போல் ஓசூர் தொகுதியை காலியிடமாக அறிவிக்கக் கோரி தமிழக கவர்னர், தலைமை தேர்தல் கமி‌ஷனர், சட்டசபை சபாநாயகர் ஆகியோருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணரெட்டிக்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை, சிறப்பு நீதிமன்றம் பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவித்து கலவரம் செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8-ன் கீழ் அவர் வகித்து வரும் சட்டமன்ற பதவி தானாகவே காலியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் “சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்பிற்கு” தடை பிறப்பிக்கவில்லை,

    அவர் காவல்துறையிடம் சரண்டர் ஆவதற்கு கால அவகாசத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

    எனவே ஓசூர் சட்டமன்ற தொகுதியை காலியானதாக அறிவித்து அதற்கு வழக்கமாக வெளியிட வேண்டிய அரசிதழ் அறிவிப்பை வெளியிடவும், தேர்தல் ஆணையத்திற்கு ஓசூர் தொகுதி காலியாகி விட்டது என்று அறிவிக்கவும் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    அதே போல் தேர்தல் ஆணையமும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஆகவே ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிட்டு, அத்தகவலை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அனுப்புமாறு தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவருக்கு கவர்னர் உத்தரவிட்டு அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க.வின் 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்காமல் அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப் பேரவைத் தலைவர் தெரிவித்து, தேர்தல் ஆணையமும் உடனே நடவடிக்கைகளை மேற்கொண்டதை கவர்னருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இதில் சட்டப்பேரவைத் தலைவர் அமைதிகாப்பது ஒருதலைப்பட்சமானது, ஓரவஞ்சகமானது பாரபட்சமானது. இதில் கவர்னர் உடனடியாக தலையிட்டு அறிவுறுத்த வேண்டும்.

    கடிதத்தை கனிமொழி எம்.பி., தலைமையில் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் இன்று, புதுடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று அளித்தனர்.

    இதே போல் தி.மு.க. கொறடா சக்கரபாணி, துணைக் கொறடா பிச்சாண்டி ஆகியோர் இன்று காலை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்தனர். #MKStalin

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என தெரிவித்துள்ளார். #Loksabha #PMModi #BJP
    புதுடெல்லி:

    மக்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். எனது அரசு நேர்மையான அரசு, இளைஞர்கள் நேர்மைக்கு தான் வாக்களிப்பார்கள். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்களை வரவேற்கிறேன். 

    விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் விமர்சனங்கள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை ஏற்க முடியாது.

    எனது அரசு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசு செய்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை பாஜக வழங்கி வருகிறது.



    வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடம் பிடித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. இரும்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது.  பொருளாதார அடிப்படையில் உலகளவில் இந்தியா 11-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது.

    நமது விமானப்படை வலுவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை. யாருடைய கட்டளையின் பேரில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ரத்து செய்ய சொல்கிறது?

    இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. மேலும், அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது.

    தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 50 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். #Loksabha #PMModi #BJP
    சாலை மற்றும் போக்குவரத்து துறை செய்த பணிகளுக்காக அத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மக்களவையில் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார். #SoniaGandhi #NitinGadkari
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மக்களவை இன்று கூடியது. கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் தற்போது செய்துவரும் பணிகள் தொடர்பாக விளக்கமான பதில் அளிக்கப்பட்டது.

    அப்போது பேசிய அத்துறையை சேர்ந்த மந்திரி நிதின் கட்கரி, அனைத்து தொகுதிகளிலும் எனது அமைச்சகம் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்று கட்சி எல்லையைத் தாண்டி அனைத்து எம்.பி.க்களும் பாராட்டியுள்ளனர் என குறிப்பிட்டார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.



    அப்போது அவையில் இருந்து எழுந்த மத்தியப்பிரதேச மாநில எம்.பி. கணேஷ் சிங், நிதின் கட்கரி அமைச்சகம் மேற்கொண்ட சிறப்பான பணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து, அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மேஜையை தட்டி நிதின் கட்கரிக்கு பாராட்டு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராட்டை தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினர். 

    ஏற்கனவே, சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. #SoniaGandhi #NitinGadkari
    கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நான்காவது நாளாக இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #AtalBihariVajpayee #Parliament #Portraittobeinstalled
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாஜ்பாய் படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #Parliament #Portraittobeinstalled
    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது நாளாக மாநிலங்களவை முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் (வயது 71) மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். 

    தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. உள்துறை மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர்.  உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கோரிக்கைகளை முன்வைத்து அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். 

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி துணை சபாநாயகர் ஹரிஷ்வன்ஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, நாளை காலை 11 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் தொடர்ந்து 3 நாட்கள் மாநிலங்களவை முடங்கி உள்ளது. 

    நாளை நடைபெற உள்ள கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும் என தெரிகிறது. விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    ×