search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி காவல்துறை தொடர்பான விழாவில் பங்கேற்க இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை நீண்ட காலமாக யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. தற்போது மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கும்.

    காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை. இது தொடர்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வலியுறுத்துவார்கள். மாநில அந்தஸ்து தொடர்பாக நான் டெல்லி செல்லவில்லை.

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவும், அதில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதனை அரசு ஏற்று நடக்கும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi #SpecialStatus
    புதுவையில் இருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு வருகிற 15-ந் தேதி முதல் புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. #puducherryAirport
    புதுச்சேரி:

    புதுவை விமான நிலையத்திலிருந்து தற்போது பெங்களூர் மற்றும் ஐதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் புதுவையில் இருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. ஏர் ஒடிஷா நிறுவனம் பயணித்திற்கான முன் பதிவையும் தற்போது தொடங்கியுள்ளது.

    அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுவை வந்தடையும். மீண்டும் மதியம் 1.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும்.



    அதேபோல், காலை 9.10 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு புதுவை வந்தடையும். #puducherryAirport
    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை காலை புதுவை வருகிறார்.
    புதுச்சேரி:

    துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக் கிழமை) காலை புதுவை வருகிறார்.

    காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் அவர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி, முதல்- அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பின் வெங்கையா நாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் லாஸ் பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

    புதுவைக்கு நாளை வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கிடையே 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    தளி 3 செ.மீ., தேன்கனிக்கோட்டை, கேளம்பாக்கம் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், மங்களாபுரம், நாமக்கல், தம்மம்பட்டி, காட்டுக்குப்பம், வாழப்பாடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூண்டி, பையூர், அரக்கோணம், சேலம், தாம்பரம், போச்சம்பள்ளி, ஆர்.கே.பேட்டை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BusFareHike
    புதுச்சேரி:

    புதுவையில் மாநில அரசுக்கு தனியாக பஸ் போக்குவரத்து கழகம் இருந்தாலும் இங்கு குறைவான பஸ்களே உள்ளன. இந்த பஸ்கள் பெரும்பாலும் புதுவை மாநிலத்துக்குள்ளேயே இயக்கப்படுகிறது.

    புதுவையையொட்டி உள்ள தமிழக பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்களே அதிக அளவில் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுச்சேரி மாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து 14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரியில் 121 பெண்கள் நேற்று காலை 7 மணி முதல் இன்று மாலை 7 மணி வரை உணவு இடைவேளையின்றி தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளனர். # #YogaDay2018 #Yoga #InternationalYogaDay2018

    புதுச்சேரி:

    காஞ்சிபுரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கும் மஹாயோகம் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவையில் நடந்தது. புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது.

    விழாவுக்கு மகாமகரிஷி அறக்கட்டளை விஜயானந்தன் தலைமை வகித்தார். ரமேஷ்ரிஷி வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கமலகண்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், சுவிஸ் நாட்டு கம்பன் கழக தலைவர் சரவணபவ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.



    யோகாவில் 18 வயது முதல் 72 வயதுவரை உடைய பெண்கள் பங்கேற்று உணவு, உறக்கமின்றி யோகா செய்தனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா சாதனை நிகழ்ச்சி இன்று மாலை 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. நிறைவு விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்றார். #InternationalYogaDay2018 #yoga #yogaday 
    புதுவையை நீர் வளம் பகுதியாக மாற்ற அனைவரும் நல்லிணக்கத்தோடும் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வரும் வார இறுதி நாட்களில் புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வேளாண்மை மற்றும் தொழிற்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கள்ள உள்ளேன்.

    புதுவையை நீர் வளம் பகுதியாக மாற்ற அனைவரும் நல்லிணக்கத்தோடும் ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாக காத்து நிற்கின்றன. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பிலும், தமிழக முதல்-அமைச்சர் பதவியிலும் இருந்து நடத்திய சட்ட போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசிடம் வலியுறுத்தி பேசியும், உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுள்ளது.

    இது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர் பங்கீட்டை தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாக திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். தமிழக அரசு, காவிரி தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    திருவாரூரில் 17-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், மயிலாடுதுறையில் 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் அனைத்து அணியினருடனும் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஜிப்மர் கலந்தாய்வு தொடங்குகிறது. #Jipmer
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150, காரைக்கால் ஜப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

    ஜிப்மர் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வினை எழுதினர்.

    புதுவையில் 1,795 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜிப்மர் இணையதளத்தில் www.jipmer.puducherry.gov.in வெளியிடப்பட்டது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில், மாணவர் அன்கடலா அனிரூத் பாபு 99.9987799 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் அகில்தம்பி 99.9986570 மதிப்பெண் எடுத்து 2-ம் இடமும், பிரிராக்திரிபாதி 99.9975598 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

    அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    புதுவை பொதுபிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர் களுக்கு 28-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    ஜிப்மர் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய மதிப்பெண் பற்றிய விபரங்களை www.jipmer.puducherry.gov.in அல்லது www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 11 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். #Jipmer
    இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா புதுச்சேரியில் இன்று காலமானார். #MLThangappa #SahityaAcademyAward
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்டம் அவ்வை நகரில் வசித்து வருபவர் தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா (84). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாபேரி. இவர் தாகூர் கலைக்கல்லூரி மற்றும் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

    இவர் 50-க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். மேலும், பாரதியார், அரவிந்தர் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    இவர் எழுதிய, சோளக்கொல்லை பொம்மை என்ற நூலுக்கு 2010-ம் ஆண்டுக்கான குழந்தை இலக்கிய பிரிவில் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MLThangappa #SahityaAcademyAward
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    புதுச்சேரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் முழு அடைப்பு  போராட்டம் நடைபெற்று வருகிறது.



    முழு அடைப்பு போராட்டத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளதால், பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.  #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
    மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த பெண் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    வேலூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர் சம்பவத்தன்று புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரில் வசிக்கும் தனது மகள் சோபனா வீட்டுக்கு வர வேலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வந்தார்.

    புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய லட்சுமி தனது மருமகன் முத்துக்குமாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்து லட்சுமியை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    பாரதி மில் அருகே வந்த போது லட்சுமி வைத்திருந்த கைப்பை தவறி ரோட்டில் விழுந்தது. இதையடுத்து லட்சுமி பதட்டத்துடன் கைப்பையை எடுக்க முயன்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை முத்துக்குமார் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, லட்சுமணன், ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×