search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    • பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது.
    • தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயிற்று.

    வெள்ளகோவில், ஆகஸ்ட். 1

    வெள்ளகோவில் அருகே உள்ள அரியாண்டிவலசு என்ற இடத்தில் கே.தங்கவேல் (40) என்பவரின் ஓ. ஈ. நூல் மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று காலை 9 மணியளவில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. உடனே தீ பரவி பஞ்சில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயிற்று. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. ஊழியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த தீ விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 87 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 473 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.70.89க்கும், குறைந்தபட்சம் ரூ.56.59க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்திவிதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று வியாழக்கிழமை 87 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 473 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.70.89க்கும், குறைந்தபட்சம் ரூ.56.59க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37லட்சத்து 64ஆயிரத்து 805க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை வாரந்தோறும் புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.
    • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் ( வயது 50) . இவரது மனைவி செல்வராணி . இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    பிறகு வேலை முடிந்து மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.இதை அறிந்த செல்வராணி பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணமும், வீட்டின் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது, இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதேபோல் பச்சாபாளையத்தை சேர்ந்த கருணாகரன் மகன் மகேஸ்வரன் (30). இவர் வெள்ளகோவிலில் டெய்லராக வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் நேற்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இரண்டு வீட்டில் திருட்டு நடந்துள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வட மாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைவானதால் இங்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கூடி இருப்பதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ - 11 க்கும், மரம் முருங்கை ரூ.9 க்கும், கரும்புமுருங்கை ரூ.13க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்க வாங்கி சென்றனர். வட மாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைவானதால் இங்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கூடி இருப்பதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன.
    • முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகரில் திருச்சி -கோவை பிரதான சாலைகள் முக்கிய வழித்தடமாக உள்ளது. வெள்ளகோவில் வழியாக ஏராளமான கனரக மற்றும் சுற்றுலா வாகனங்கள், வெளியூர்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு வேலை ஆட்களை கூட்டிச்செல்லும் வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில், நாட்ராயசாமி கோவில், சோளீஸ்வரர்கோவில் ஆகியவை உள்ளன.

    இப்பகுதியில் உள்ள நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் வெள்ளகோவில் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், வாகன விபத்துக்கள், போக்குவரத்து இடையூறுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் வெள்ளகோவில் நகர் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    • மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது.
    • ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ரமேஷ் (வயது40) . இவர் தனியார் வறுகடலை மில்லில் வேலை செய்து வந்தார்.

    நேற்று தூத்துக்குடியில் இருந்து வெள்ளகோவில், ராமலிங்கபுரத்திற்கு பொட்டுக்கடலை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து நேற்று காலையில் மூட்டையை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. இதனை கண்டவர்கள் உடனே ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கே. ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்து போன ரமேசுக்கு மாதவி (32) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டது.
    • ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்து ரோடு, எம்ஜிஆர் நகர் அருகே ஒரு கோடி மதிப்பில் பிஏபி கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணியை செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலானது பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 126.100 கிலோமீட்டரிலிருந்து பிரிகிறது, கடந்த 1981 ம் ஆண்டு முதல் 1986 ம் ஆண்டு வரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆயக்கட்டு பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது/

    இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 270.650கிலோமீட்டர் ஆகும். இந்த வாய்க்காலானது திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டதாகும்.தன் மொத்த ஆயக்கட்டு பரப்பு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் மண்டலத்தில் 12.108 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து176 ஏக்கர், மூன்றாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 91 ஏக்கர், நான்காம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 7 ஏக்கர் பாசனம் பெறப்பட்டு வருகிறது.

    திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட குறுக்கு கட்டுமானங்களான மதகுகள் மிகவும் சிதலமடைந்து இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டி இருப்பதாலும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாசன காலங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் பாசன நீர் வழங்க இடையூர் ஏற்படுவதால் ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் லட்சுமணன்.தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உடுமலைப்பேட்டை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் வடிவேல், உதவிபொறியாளர் கோகுல சந்தானகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம்,தி.மு.க.நகர செயலாளர் கே.ஆர். முத்து குமார்,நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகள்,காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு எல் .கே. சி.நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் உள்ள நேற்று மாலை பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு எல் .கே. சி.நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.
    • வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன்றனர். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தில் இருந்து வந்து வெள்ளகோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.

    இந்நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4ம் வாரமாக நேற்று வாரச்சந்தை செயல்பட்டது. இதில் வழக்கம்போல் விவசாயிகள், பொதுமக்கள் ,வியாபாரிகள் வந்திருந்தனர். வட மாநில மில் தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 7 க்கும், மரம் முருங்கை ரூ.6 க்கும், கரும்புமுருங்கை ரூ.10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 75 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 7 க்கும், மரம் முருங்கை ரூ.6 க்கும், கரும்புமுருங்கை ரூ.10 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர் ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

    • காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கலந்து கொண்டு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றியும், குழந்தைகளுடைய வளர்ப்பு பற்றியும் எடுத்து கூறினார்.அப்போது காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றனர். பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர். ஒரு சில குழந்தைகள் பள்ளி நேரத்திற்கு அதிக நேரம் முன்பே வந்து விடுகின்றனர். அதனால் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளை சரியான பள்ளி நேரத்திற்கு மட்டும் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். மாதந்தோறும் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், வக்கீல் வி.கந்தசரவணகுமார் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வி. விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் மொத்தம் 128 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
    • வெள்ளகோவிலில் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 128 இடங்களில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு, 2ம் தவணை கொரோனா தடுப்பு ஊசியும், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2ம் தவணை கொரோனா தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    நேற்று முன்தினம் வரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 6 ஆயிரத்து266 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 5 ஆயிரத்து 41 நபர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 75 ஆயிரத்து 166 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 64 ஆயிரத்து 319 நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி 1 ஆயிரத்து 209 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    ×