search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    லாரி டிரைவர் ராஜேந்திரன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  உள்ள காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52).  இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து கொண்டு சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.  காரணம்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்(38)என்பவர் கடந்த சில நாட்களாக சிவக்குமாரிடம் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி டிரைவரான ராஜேந்திரன் லாரிஅதிபர் சிவக்குமாரிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஒன்றை திருடிவிட்டு தலைமறைவாகி விட்டதாக  கூறப்படுகிறது.

    இதையடுத்து சிவகுமாரின் மகன் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்பட 3பேர்  லாரி டிரைவர் ராஜேந்திரன் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ராஜேந்திரனை கடத்திச் சென்றனர். பின்னர் அங்குள்ள அறையில்  கட்டி வைத்து  அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிய லாரி டிரைவர் ராஜேந்திரன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உடல் முழுக்க காயங்களுடன் இருந்த அவருக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில்  லாரி அதிபர் சிவகுமாரின் மகன் அருண்குமார், அவரது நண்பர்கள் குணசேகரன், சந்துரு ஆகிய 3பேரையும்  போலீசார்  கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள உப்பு பாளையம் ரோடு நூலகம் அருகில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன்  தலைமையில் அங்கு சென்ற போலீசார் நூலகத்திற்கு பின்புறம் பணம்  வைத்து சூதாடிய வடிவேல்(வயது51), அர்ஜூனன் (37), வேலுச்சாமி(41), சிவக்குமார்(42), ராஜேஷ்(42), வினோத்(36), சரவணன்(40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த ரூ.9 ஆயிரத்து 240ஐ கைப்பற்றினர். 
    ஆரல்வாய்மொழியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையிலான போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி பகுதியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ கஞ்சாவும் சிக்கியது. பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர்கள் வெள்ளமடத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி, நாங்குநேரியைச் சேர்ந்த துரைபாண்டி என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை வாலிபர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மந்திர மூர்த்தி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    மதுக்கூர் அருகே செல்போன் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் முகமது ஹாரிஸ் (வயது 21). இவர் வாட்டாகுடி ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் அங்கு வந்து தூங்கி கொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை திருட முயற்சி செய்தபோது அவரை பிடித்து மதுக்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    முகமது ஹாரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுரபீக் ராவுத்தரை கைது செய்தனர்.

    போத்தனூரில் ரெயிலில் பயணியிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் கோவை வந்தார். ரெயில் போத்தனூர் வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார்.

    அப்போது செல்போன் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரெயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இதையடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை தேடி வந்தார். அப்போது செல்போன் எண் சிக்னலை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் விசாரணையில் அவர் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமாரிடம் ரெயிலில் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லோகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள்- வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றது.

    ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.

    பிடிப்பட்ட அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது21), நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ராஜி(18), அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன்(20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வீரபாகு(20) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

    முன் விரோதத்தில் புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடி குண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வாணரப்பேட்டையை பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜரத்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ராஜரத்தினம் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டார்.
    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி காலனியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது50). இவர் கடந்த அக்டோபர் 9-ந் தேதி வீட்டை பூட்டி கொண்டு அதே பகுதியில் வாடகை பணம் வசூலிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    இதை நோட்டமிட்ட ஆசாமி ராஜரத்தினம் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்து ராஜரத்தினம் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து அவர் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் துணைசூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, மணிகண்டன், முத்துமாணிக்கம், பஞ்சலிங்கம், லிங்கேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை பல்வேறு இடங்களில் கடந்த 25 நாட்களாக தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தாராபுரம் ரோடு காமராஜர் சிலை அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அதில் உடுமலை காந்திபுரத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பதும் ராஜரத்தினத்தின் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்த நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கதிரேசன் தனது நண்பர் கருப்பன் என்கின்ற கருப்புசாமியுடன் சேர்ந்து இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த எலையமுத்தூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர் 20 வயது இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபரத்தை அந்தபெண் தனது அண்ணனிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த இளம்பெண்ணின் அண்ணன் கதிரேசனை தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கதிரேசன் தனது நண்பர் கருப்பன் என்கின்ற கருப்புசாமியுடன் சேர்ந்து இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடும்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமராவதி போலீசார் கதிரேசன், கருப்பன் என்கின்ற கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கையை தொந்தரவு செய்தவரை தட்டிக்கேட்க சென்ற அண்ணன் தாக்கப்பட்ட சம்பவம் எலையமுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பத்தூர் அருகே முயல் வேட்டையாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வனப் பகுதிகளில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதி ராஜன், பிரகாஷ், உதயகுமார், மலைச்சாமி, சாமிகண்ணு, சுந்தர், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார், வீரையா, கண்ணபிரான், செல்வம் வனக்காவலர்கள் கோபுரபாண்டி, மாரியப்பன், வாசுகி, சின்னப்பன் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    நாச்சியாபுரம் அருகே உள்ள இளங்குடியில் முயல் வேட்டையாட முயன்றதாக கூறி இளங்குடியைச் சேர்ந்த கருப்பையா (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

    அதே போன்று நேமத்தன் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (33), மலைச்சாமி (49) ஆகியோரும் பைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (39), ராஜா (33), தனுஷ் (17) ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    திருப்பத்தூர் வனச்சரக பகுதிகளில் முயல்களை வேட்டையாட முயன்றதாக வன உயிரின குற்றப் பிரிவின் கீழ், 6 பேர் மீது வனச்சரகர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்தார்.

    2 தினங்களுக்கு முன்பு கீழச்சிவல்பட்டி அருகே 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.

    மேலூரில் அரசு பஸ் கூரை மீது ஏறி ரகளை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் பஸ் நிலையத்திற்கு சிங்கம்புணரியில் இருந்து அரசு டவுன் பஸ் வந்தது. இந்த பஸ் செக்கடி பஜாரில் நின்ற போது சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்தப் பஸ்சின் கூரையின் மீது ஏறி உள்ளார். பஸ் அங்கிருந்து புறப்பட்டதும் அவர் மேற்கூரையில் ஓடியதால் பதட்டம் ஏற்பட்டது.

    உடனடியாக பஸ்சை நிறுத்த டிரைவர் முயன்றார். அப்போது அந்த வாலிபர் முன்பக்க கண்ணாடி வழியாக ஓடும் பஸ்சில் இருந்து குதித்தார். அதற்குள் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் மது போதையில் இருந்தது தெரியவர போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பு கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல்வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதிக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.

    இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். பட்டதாரியான இவர் அரசு வேலையில் சேருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

    சோமசுந்தரம் வேலை தேடுவதை அறிந்து கொண்டு, பணம் கொடுத்தால் ஆவின் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளில் நிரந்தர வேலை வாங்கிவிடலாம் என்று அருண்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சோமசுந்தரம், அவர் கேட்டது போல் ரூ.58 லட்சத்து 28 ஆயிரத்து 500 பணத்தை அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தராமல், சோமசுந்தரத்திடம் பேசுவதையும், அருண்குமார் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோமசுந்தரம், வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அருண் குமார், பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட சோமசுந்தரம் உடனடியாக அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான அருண்குமாரை தனிப்படை அமைத்து தேடி விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருண்குமார் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்குசென்ற தனிப்படை போலீசார், அங்கு தனியார்விடுதியில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் அருண்குமார் பலரிடம் ஆவின்நிறுவனத் தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×