search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் 9-ந்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்கள்.
    • தாயார்கள், மலையப்பசாமி சார்பாக அர்ச்சகர்கள் ஒருவர் மீது ஒருவர் பூப்பந்துகளை வீசி எறிந்து மகிழ்வார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா முடிந்ததும், 6-வது நாளான இன்று (சனிக்கிழமை) பரிணய கலகோற்சவம் எனப்படும் ஊடல் உற்சவம் நடக்கிறது. அதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தனியாக வைபவ மண்டபத்தில் இருந்து தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்கள்.

    அதேபோல் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் எதிர் எதிர் திசைகளில் வலம் வந்து வராகசாமி கோவில் அருகில் கிழக்கு மாடவீதிக்கு வருகிறார்கள்.

    அங்கு அர்ச்சகர்கள் சாமி, தாயார்கள் சார்பாக நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் பாசுரங்களை தனித்தனியாகப் பாராயணம் செய்வார்கள். அதன்பிறகு தாயார்கள், மலையப்பசாமி சார்பாக அர்ச்சகர்கள் ஒருவர் மீது ஒருவர் பூப்பந்துகளை வீசி எறிந்து ஆடி, பாடி மகிழ்வார்கள். இதையடுத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு, உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

    • துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
    • வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது. கோவிலில் வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திருப்பதியில் 9 மையங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்கள் தரிசனம் (துவார தரிசனம்) செய்வது மட்டும் நடந்து வருகிறது. துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

    எனவே இலவச தரிசன டோக்கன்கள் நேற்று (புதன்கிழமை) முதல் திருப்பதி அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் கவனிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி விழா நடைபெறும். அதன்படி நேற்று துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் திருமாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் முக மண்டபத்தில் உள்ள பூவராஹ சுவாமியை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. இதில் விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.

    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி
    • தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டில் 50 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் சார்பில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் நாளான நேற்று இலவச தரிசன டிக்கெட் மற்றும் பல்வேறு சேவை டிக்கெட்களை பெற்ற 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. 13 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வராததால் தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நேற்று நாடு முழுவதிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ததால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலானது. 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகியிருந்தது.

    • தங்கத்தேரை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    • 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. கோவில் உள்ளே அதிகாலை 1.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் சொர்க்கவாசல் வழியாக சென்று வி.ஐ.பி. பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு காலை 6 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதைத் தொடர்ந்து காலை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை தேவஸ்தான பெண் ஊழியர்கள், ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் திருமலையில் உள்ள அன்னமயபவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

    ஸ்ரீவாணி டோக்கன்கள் நேரில் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் 9 இடங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் திருமலையை அடைந்து, அங்குள்ள தரிசன வரிசைக்கு சென்று விட வேண்டும். பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பக்தர்கள் சிரமமின்றி வைகுண்டம் துவார தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகளும், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களும் சேவை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினா்ா.

    • தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.
    • 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமலை

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.

    கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.

    2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 லட்சத்து 96 ஆயிரத்து 93 பக்தர்களும், பிப்ரவரியில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்களும், மார்ச் மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 741 பக்தர்களும், ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 915 பக்தர்களும், மே மாதம் 22 லட்சத்து 61 ஆயிரத்து 641 பக்தர்களும், ஜூன் மாதம் 23 லட்சத்து 23 ஆயிரத்து 421 பக்தர்களும், ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரத்து 319 பக்தர்களும், ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 184 பக்தர்களும், செப்டம்பர் மாதம் 21 லட்சத்து 12 ஆயிரத்து 254 பக்தர்களும், அக்டோபர் மாதம் 22 லட்சத்து 74 ஆயிரத்து 265 பக்தர்களும் நவம்பர் மாதம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 816 பக்தர்களும், டிசம்பர் மாதம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 108 பக்தர்களும் (29-ந்தேதி வரை) என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
    • தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் மலர்கள், பல வகையான பழங்கள் கொண்டு கோவில் வெளிப்புறம், உள்புறம் மற்றும் கொடிமரம், பலிபீடம், வைகுண்ட வாசல் உள்ளிட்ட இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது.

    அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், எம்.எல்.சி.கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.

    வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

    தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பக்தர்களும் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2000 பக்தர்களும் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் வழங்கி உள்ளது.

    தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை திருப்பதியில் உள்ள ராமா நாயுடு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள கவுண்டரில் அதிகாலை 2.45 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டது.

    அப்போது தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாரால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பக்தர்களை ஒழுங்குப்படுத்தி காயமடைந்த பக்தர்கள் மற்றும் போலீசாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதியில் நேற்று 53,101 பேர் தரிசனம் செய்தனர்.23,843 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதியில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
    • நேரம் ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பதியில் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள், மலர்கள், பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏழுமலையான் கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் கோவில் முன்பு கோலாட்டம் ஆடி பக்தர்கள் அசத்தினர்.

    ஜம்மு-காஷ்மீர் கவர்னர், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகள் என ஏராளமான வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

    ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் தரிசனத்திற்கு வந்ததால் தேவஸ்தான அதிகாரிகளால் அவர்களுக்கு உண்டான நேர ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் ஒரு சில வி.ஐ.பி.க்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீடு செய்து அனுப்பியதால் இலவச தரிசன பக்தர்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

    • 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இலவச நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தபட்டது.

    திருப்பதி அலிப்பிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு கவுண்டர்கள் மூடப்பட்டன.

    புத்தாண்டையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டும் அனுமதிக்கபடுகின்றனர்.

    தேவஸ்தான அதிகாரிகள் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    தேவஸ்தான அதிகாரிகள் முறையான அறிவிப்பு வெளியிட்டு பக்தர்களின் குழப்பத்தை போக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஜனவரி 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அன்னப்பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறந்து 11-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவாரம் வழியாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆங்கில புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கான வசதி ஏற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

    முன்னேற்பாடு பணிகள், திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள், பழைய அன்னப்பிரசாத கூடம் உள்பட பல்வேறு இடங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஜனவரி 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிபாரிசு கடிதங்களும், எந்தப் பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது, நிராகரிக்கப்படும். இருப்பினும், செல்ப் புரோட்டோகால் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள், ரூ.300 டோக்கன்களுடன் பக்தர்கள் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிகளில் திருமலைக்கு வர வேண்டும்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக் கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இதுதவிர மேலும் கூடுதலாக அன்னப்பிரசாத மையங்களை திறக்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் பிரதான கல்யாணக் கட்டா வளாகம் எதிரே அமைந்துள்ள பழைய அன்னப்பிரசாத வளாகம், நாராயணகிரி பூங்கா, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் (பி.ஏ.சி-4) ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், காபி, டீ ஆகியவை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார், என்ஜினீயர் ஜெகதீஸ்வர்ரெட்டி, சுகாதார அதிகாரி டாக்டர் ஸ்ரீதேவி, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, அன்னப்பிரசாத திட்ட சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.
    • முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 2-ந் தேதி முதல் 11 ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்று தீர்ந்தன.

    இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களுக்கான இலவச டைம் ஸ்லாட் டிக்கெட் வரும் 1-ந் தேதி முதல் தினமும் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகை யில்:-

    வைகுண்ட வாசல் தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    ஜனவரி 1-ந் தேதி இலவச டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கிருஷ்ணதேஜா ஓய்வு இல்லத்தில் தரிசன நேரத்திற்கு வரவேண்டும்.

    குறைந்த அளவு அறைகள் மட்டுமே உள்ளதால் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன் பெறாமல் முன்கூட்டியே வர வேண்டாம்.

    தரிசன டிக்கெட் அல்லது இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க இலவச டைம் ஸ்லாட் டோக்கன்கள் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும்.

    திருப்பதியில் நேற்று 62,152 பேர் தரிசனம் செய்தனர். 30,682 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×