search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • 25-ந்தேதி சூரிய கிரகணம் நடக்கிறது.
    • நவம்பர் 8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

    மறுநாள் 25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நவம்பர் 8-ந் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று காலை முதல், மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    எனவே அன்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த டிக்கெட்டுகள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 72,243 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,652 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தீபாவளி ஆஸ்தானத்தால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
    • தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 24-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் எதிரில் காண்ட மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

    ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாகக் காண்ட மண்டபத்தில் அமைக்கப்படும் சர்வபூபால வாகனத்தில் கருடாழ்வாரை நோக்கி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து வைக்கிறார்கள். இவர்களுடன் சேனாதிபதியான விஸ்வக்சேனரையும் கொண்டு வந்து மலையப்பசாமியின் இடப்பக்கத்தில் மற்றொரு பீடத்தில் தெற்கு நோக்கி வைக்கிறார்கள். அதன்பிறகு மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சிறப்புப்பூஜைகள், ஆரத்தி, பிரசாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இத்துடன் தீபாவளி ஆஸ்தானம் நிறைவு பெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தீபாவளி ஆஸ்தானத்தால் கோவிலில் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.
    • லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானுக்கு பிடித்த மாதமான புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டும் சாமியை தரிசனம் செய்வதற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

    கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தரிசனத்திற்கான வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.

    பக்தர்களுக்கு போதிய அளவு தங்கும் அறைகள் கிடைக்காததால் நேரடியாக தரிசன வரிசைக்கு பக்தர்கள் சென்று விடுகின்றனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இரவு, பகல் பாராமல் வரிசை சென்று கொண்டிருப்பதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் தலைமுடிகாணிக்கை செலுத்தும் இடங்களிலும், லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.

    ஒரு சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து முடி காணிக்கை செலுத்தலாம் என முடிவு செய்து இலவச தரிசனத்திற்கு சென்றால் அங்கு 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி புறப்படுவதற்கு முன்பாக சரியாக திட்டமிட்டுக் கொண்டு தரிசனத்திற்கு வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தாலும் ரூ.300 கட்டண தரிசனம் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இதனால் உண்டியலில் குறைந்த அளவு வருவாய் கிடைத்தது.

    தற்போது பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

    ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

    திருப்பதியில் நேற்று 72,216 பேர் தரிசனம் செய்தனர். 32,388 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து வகையான தரிசனமும் ரத்து.
    • சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
    • அன்னபிரசாதம் வழங்கப்படாது.

    திருமலை

    வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.

    எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்ததும் அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை.

    கடந்த 5 நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் இன்று சற்று குறைந்து காணப்பட்டது.

    இன்று காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு சுமார் 20 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணி நேரமும் ஆனது.

    காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 83,223 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,658 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் வசூலானது.

    • திருமலையில் குறைந்த தங்குமிடமே உள்ளன.
    • 50 சதவீத அறைகள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கின்றன.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர், ஸ்ரீவாரி பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்கும், பொதுப் பக்தர்களுக்கான சேவைகளை சிறப்பாகச் செய்ததற்கும் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவைப் பாராட்டினார்.

    அதன்பிறகு பக்தர்கள் தெரிவித்த குறைகள், கேட்ட கேள்விகளுக்கு ஏ.வி.தர்மாரெட்டி பதில் அளித்துப் பேசினார். பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதிகாரி அளித்த பதில்களும் வருமாறு:-

    வாரங்கல், முரளிதர், ஐதராபாத் சீதா: திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு சரியாக அறைகள் வழங்கப்படுவது இல்லை.

    அதிகாரி: திருமலையில் குறைந்த தங்குமிடமே உள்ளன. 50 சதவீத அறைகள் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கின்றன. மீதமுள்ள அறைகள் தற்போதைய முன்பதிவின் கீழ் வைக்கப்படுகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவதால், திருப்பதியில் அறைகள் எடுத்துத் தங்கலாம். ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் அறைகளுக்காக இடைத்தரகர்களை அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது.

    மதனப்பள்ளி ரெட்டப்பா, ஓங்கோல் வெங்கடேஷ்: ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின்போது சுவையான அன்னப்பிரசாதம் வழங்கியதற்காக தேவஸ்தானத்துக்கு பாராட்டுகள். திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உங்கள் தலைமையில் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. திருமலையில் உள்ள நான்கு மாடவீதி கேலரிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும்.

    அதிகாரி:பக்தர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க திருமலை முழுவதும் 140 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்களை (ஆர்.ஓ. பிளான்ட்) நிறுவி உள்ளோம். மேலும் திருமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே பக்தர்கள் தங்களுடைய கண்ணாடி, தாமிரம், ஸ்டீல் அல்லது டப்பர்வேர் பாட்டில்களை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை, மகேஷ்பாபு: திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், பக்தி சேனல் ஊழியர்கள் உள்பட பலர் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்களுக்கு சிறப்பான சேவையை செய்துள்ளனர். வாகனம் தூக்குபவர்களுக்கும் பாராட்டுகள்.

    அதிகாரி:அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணைந்து 79 வாகன தூக்குபவர்களை பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.81,500 வீதம் பணப்பரிசு, ஒரு ஜோடி ஆடையை வழங்கி உள்ளனர்.

    கர்னூல், வாசு: தானேயில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான பாழடைந்த கோவிலை தத்தெடுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முன்வருமா?

    அதிகாரி:ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் புதிதாக வெங்கடேஸ்வரா கோவில்களை கட்டுவது மட்டுமின்றி, சிதிலமடைந்த பழமையான கோவில்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் புனரமைக்கப்படும்.

    கரீம்நகர், மகேந்திரராவ்: ஸ்ரீவாரி சேவையை ஆன்-லைனில் முன்பதிவு செய்யும்போது இடைத்தரகர்கள் பணம் கேட்கிறார்கள்.

    அதிகாரி:ஸ்ரீவாரி சேவை முற்றிலும் தன்னார்வ சேவை. ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் யாருக்கும் ஒரு பைசா கூட செலுத்த தேவையில்லை. ஆன்-லைனில் காலியிடங்கள் அல்லது வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே சேவைக்கு வாருங்கள். ஊழலை ஊக்குவிக்கவோ அல்லது சேவா முன்பதிவுக்காக இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை.

    கடப்பா, சரஸ்வதி: திருமலையில் 5 கிராம் தங்க டாலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அதிகாரி: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் ஸ்ரீவாரு தங்க டாலர்களை விற்பனை செய்கிறது. விற்பனை எந்த அளவுக்கு நடக்கிறது என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்வோம்.

    மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    மேலும் பல்வேறு பக்தர்கள், தேவஸ்தான இ.தரிசன கவுண்ட்டர்களில் ஒருசில தரிசன டோக்கன்களை மீண்டும் தொடங்க வேண்டும், எனக் கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் ரூ.300 டிக்கெட் 25,000 வழங்கப்பட்டு வருகிறது. இ.தரிசன கவுண்ட்டர்களில் மணிக்கணக்கில் காத்திருப்பதற்கு பதிலாக ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யலாம், என அதிகாரி கூறினார்.

    • திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கடந்த மாதம் திருப்பதியில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதிக்கு கடந்த மாதம் 21 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தினர்.

    இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்கள் விரைவில் செயல்பட உள்ளன. திருப்பதி மலையில் செயல்படும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் கவுன்டர்கள் சோதனை அடிப்படையில் விரைவில் திருப்பதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதன் மூலம் அறைகள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதியில் தங்கி கொள்ளலாம்.

    இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு நள்ளிரவுக்கு மேல் சாமி தரிசனத்திற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலேயே இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    அவ்வாறு காத்திருக்கும் பக்தர்கள் காலையில் விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக, வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இனி, காலை 10 மணிக்கு பின்னரே வி.ஐ.பி. தரிசனம் என்ற நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
    • ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயல்வதை தவிர்க்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தில் இருந்து வாகனங்கள் மூலமும் நடைபயணமாக செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலுபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல் இலவச தரிசன வரிசை 5 கி.மீட்டரை தாண்டி நீண்டு கொண்டு உள்ளது. திருப்பதியில் பெய்து வரும் மழையின் காரணமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:-

    இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆவதால் பக்தர்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயல்வதை தவிர்க்க வேண்டும்.

    பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பக்தர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி தரிசனம் செய்து கொண்டு செல்லலாம்.

    தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்கள் கூட்டம் குறையும் வரை தங்கும் விடுதிகளில் பொறுமையாக காத்திருந்து தரிசனத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 70,007 பேர் தரிசனம் செய்தனர். 42,866 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.25 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
    • தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத் துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

    ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.

    பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

    பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

    • உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சியில் அனந்தாழ்வாரின் வம்சதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அந்தக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் என்பவர் இருந்தார். அவர் தினமும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து, பூச்சூடுவதற்காக ஏரி வெட்டியும், நந்த வனம் ஒன்றையும் அமைத்திருந்தார். அந்த நந்த வனத்தில் ஏராளமான மலர்செடிகள் வளர்ந்திருந்தன. அந்த நந்தவனத்தில் அடிக்கடி பூக்கள் சிதறுவதை அனந்தாழ்வார் பார்த்தார். இரவில் யாரோ பூக்களை பறிக்கிறார்கள் என்று அவர் சந்தேகப்பட்டார். அவர், ஒருநாள் கண் விழித்திருந்து கண்காணித்தார்.

    அப்போது ஏழுமலையானும், பத்மாவதி தாயாரும் நந்த வனத்தில் பூக்களை பறித்து விளையாடினார்கள். இருவரும் பெருமாளும், பிராட்டியும் என்பதை அறியாத அவர், இருவரையும் கட்டிப்போடுவதற்காக விரட்டினார். அதில், பெருமாள் தப்பியோடி விட்டார். பத்மாவதி தாயார் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை, நந்த வனத்தில் உள்ள செண்பகமரத்தில் அனந்தாழ்வார் கட்டிப்போட்டார்.

    மறுநாள் ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்ய சென்ற அர்ச்சகர்கள் அவருடைய திருமார்பில் பத்மாவதி தாயார் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர். அப்போது ஏழுமலையான், அசரீரியாக நடந்த சம்பவங்களை சொல்லி அனந்தாழ்வாரையும், மரத்தில் கட்டிப்போட்டுள்ள பெண்ணையும் கோவிலுக்கு அழைத்து வரும்படி கூறினார்.

    அதன்படி அனந்தாழ்வாரையும், அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றனர். கோவில் சன்னதிக்குள் சென்றதும் அந்தப் பெண், இவர் (அனந்தாழ்வார்) எனது தந்தை என்று சொல்லியபடியே ஏழுமலையானின் சிலையோடு ஐக்கியமாகி மறைந்து விட்டார். நந்த வனத்தில் பூக்களை பறித்து விளையாடியவர்கள் பெருமாளும், பிராட்டியும் என்பதை அனந்தாழ்வார் உணர்ந்தார். அனந்தாழ்வார் இயற்கை எய்தி ஏழுமலையானின் திருவடியில் இணைந்தார். எனினும், அவர் தற்போதும் திருமலையில் நந்தவனத்தில் மகிழ மரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்த மறுநாளே அனந்தாழ்வாரின் அவதார நிகழ்ச்சி, பாக் சவாரி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை திருமலையில் ஏழுமலையான் கோவில் அருகே அனந்தாழ்வார் தோட்டத்தில் பாக் சவாரி நிகழ்ச்சி நடந்தது.

    உற்சவர் மலையப்பசாமி தனியாக தங்கத்திருச்சி வாகனத்திலும், உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து அனந்தாழ்வார் தோட்டம் எனப்படும் நந்த வனத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். நந்த வனத்தில் உள்ள 'மகிழ' மரத்துக்கு அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகளை செய்தனர். மேலும் சில சமய சம்பிரதாயங்கள் நடந்ததும், நந்தவனத்தில் இருந்து உற்சவர்கள் மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

    நிகழ்ச்சியில் பேஷ்கார் ஸ்ரீஹரி, அனந்தாழ்வாரின் வம்சதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்.
    • நேற்று அதிகாலை இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்.

    பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    கோகர்ப்பம் அணை வரை 6 கிலோ மீட்டா் தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை தரிசனத்திற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை 44 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் வரை பொறுமை காக்க வேண்டும். பக்தர்கள் திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுக்கலாம். அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலை சுற்றி இலவச தரிசன பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டு இருந்தது.
    • குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.

    திருமலை பாலாஜி பஸ் நிலையத்திலிருந்து சீலா தோரணம் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் செல்ல வேண்டும் என்றால் அங்கு தான் செல்ல வேண்டும். இதனால் சுமார் 5 கி.மீ. தூரம் மலையை சுற்றிக்கொண்டு பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

    குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.

    சில தனியார் வாகனங்கள் அங்கு செல்கிறது. அவர்கள் பக்தர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    இலவச தரிசன செல்லும் வரிசையை அடையவே 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு சுமார் 5 கி.மீ. தூரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தரிசனம் செய்யவும் சுமார் 40 மணி நேரம் ஆகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கனவே கோவிலை சுற்றி இலவச தரிசன பக்தர்கள் வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள சீலா தோரணம் தரிசன வரிசை அமைக்கப்பட்டு உள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனவே இலவச தரிசன வரிசையில் மீண்டும் பழையபடி மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையை (தரிசன நேரம் குறித்த டோக்கன்) ஏற்படுத்தி கொடுத்தால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதிப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து தரிசனம் செய்து கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×