search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94456"

    • சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர் அவரை பார்த்து போ என சொன்னதாகவும், அதற்கு ரோட்டில் சென்றவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து கலைந்து போக சொன்னார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார் அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    • ஆம்னி வேனை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.
    • பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்(வயது 49) ,ராஜம்மாள் (47) தம்பதியினர்.இவர்களது மகன் கிட்சன் ஞானதுரை(27) .ஞானதுரைக்கு பெண் பார்க்க தனது உறவினர்களான செல்வி, ஆசீர் கோவில் பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்துக்கு வந்துள்ளனர். பெண் பார்த்து விட்டு கோவைக்கு திரும்பிய போது பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே தாங்கள் வந்த ஆம்னி வேனை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது பல்லடத்தில் இருந்து செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று‌ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோடு ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பின்னர் ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் வந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜம்மாள், செல்வராஜ், அகஸ்டின் உட்பட 5 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த நான்கு பேருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் உடுமலையைசேர்ந்த பட்டீஸ்வரன் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சரணடைந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்திற்கு, அருகே என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு புகார்கள் தொடர்பாக தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். விபத்து நடந்த இடத்தில் ஜெராக்ஸ் மற்றும் பேக்கரி உள்ளது. எப்பொழுதும் அங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டு இருப்பார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகள் விடுமுறை விடப்பட்டு அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    • காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
    • தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றுகாலையும் போராட்டம் நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ளசுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்லடம் வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சொந்த செலவில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே,100கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கணபதி பாளையம் ஊராட்சி ஆகியவை இணைந்து 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இலபத்மநாபன், முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தம்பதியினர் ரூ.1 லட்சம் சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையாக வளையல்கள், புடவை, தட்டு, பூ, மஞ்சள், குங்குமம், மற்றும் 5 வகையான உணவுகளுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை ரூ.18 ஆயிரம், ரூ 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சுகாதாரத் துறையால் கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு முறைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் ,குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி,கவிதா, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, ஈஸ்வர மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் ரவி தண்டபாணி, ருக்மணி வீரப்பன், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, கீர்த்தி சுப்பிரமணியம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சித்த மருத்துவ துறையின் சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, பொங்கலூர் வட்டார சுகாதார துறை ஆகியவை இணைந்து நடத்திய, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம், மாதப்பூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

    மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் காசநோய் கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சித்த மருத்துவ துறையின் சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில்,பொங்கலூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில் குமார், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசல்யாதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளீஸ்வரி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.
    • 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த அரச மரம் பட்டுப் போய் விடுமோ என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் அல்லது, விபரம் தெரிந்த விவசாயிகள், இந்த 200 வயது மரத்தை காப்பாற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில், பாஜக நகர தலைவர் ஆர்.அருண்குமார் மற்றும் நிர்வாகிகள், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் டி.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ. ராசா எம்.பி., இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் கூறியிருந்தனர்.

    பல்லடம் வடக்கு ஒன்றிய பாஜக. தலைவர் பூபாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரமேஷ் குமார், மற்றும் பாஜ.க நிர்வாகிகள் நித்யா,பூபதி,மகேஷ், குருமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் ஆ.ராசா எம்.பி., மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    • போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 519 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,94,300 வசூலிக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 172 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 21 பேர், மேலும் சிக்னலை மதிக்காமல் செல்வது,நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 519 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.1,94,300 வசூலிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 78 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது .இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது.
    • யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி, தீர்த்த கலசம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகாசனம், நான்காம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யாகபூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாக பூஜை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 6:45 மணி முதல் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் அருகே உள்ள குண்ணங்கல் பாளையம் பிரிவில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.
    • பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நிலையில், கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில், கோவில் முறையாக அளவீடு செய்து அதன் பின்னர் சுற்றுச்சுவர் தளம் அமைக்கும் பணி செய்ய வேண்டும். திருப்பணி நடைபெறுவது குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து செயல் அலுவலர் பிரேமா பேசுகையில், பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும். எனவே கோவில் திருப்பணி செய்வதற்கான தேதியை முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 23, 28, நவம்பர் 11, 13, 14, ஆகிய தேதிகள் திருப்பணி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் திருப்பணிக்கு ஸ்தபதி, மற்றும் கும்பாபிஷேக தேதி ஆகியவற்றை தீர்மானித்து, சர்வேயர் மூலம் அளவீடு பணி செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, கும்பாபிஷேகப் பணிகள் செய்யலாம், மேலும் இந்து அறநிலையத்துறை கோவில் என்பதால் அறநிலையத்துறை அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாது. கோவில் கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள் மூலம், திருப்பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×