search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார். #ADMK #Parivendhar
    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன்.

    ஆனால் இன்னும் பா.ஜனதா தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

    1 மாதத்துக்கு முன்பாக பியூஸ்கோயல் என்னை டெல்லிக்கு அனைத்து பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசினார். அப்போது நமது கூட்டணி தொடர்கிறது என்று அவருக்கு சொன்னேன். என்னிடம் எந்த தொகுதி என்றும் கேட்டார். அதை அவருக்கு குறித்தும் கொடுத்திருக்கிறேன். அதன்பிறகு எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

    திருச்சியில் நான் கமல்ஹாசனுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் தங்கியிருந்த ஓட்டலில் அவர் தங்கினார். அப்போது என்னை பார்த்தார். நம் இருவருக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது என்பதால் நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று கேட்டார். செயல்படலாமே என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மீண்டும் பேசலாம் என்று சொன்னார். பேசினோம். அது அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் இன்னும் பா.ஜனதா தோழமையில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க.விடம் பேசி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னால் எனக்கு தயக்கம் இல்லை. அந்த முடிவு பா.ஜனதா மூலமாக வரவேண்டும்.



    3-வது அணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பா.ஜனதா எனக்கு சரியான முடிவு சொல்லாவிட்டால் 3-வது அணியில் நான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Parivendhar
    அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.

    இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில் இருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில கட்சிகள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணியை பொருத்தவரை முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு எடுப்பார்கள்.

    தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    கமல்ஹாசனுக்கு நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.50.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவாலயம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நினைவு நாள் வருவதற்குள் இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு நினைவாலயமாக உருவாக்கப்படும். அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.20 கோடி செலவில் நினைவு இல்லமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட உடன், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

    ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதை சொன்னாலும் பொத்தாம் பொதுவாக படத்தில் வேண்டுமென்றால் வசனம் பேசலாம். எந்த மாண்பு குறைந்து விட்டது, யாருடைய மாண்பு குறைந்து விட்டது என்று அவர் சொன்னால் பதில் அளிக்கலாம். ஆனால், அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை. அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

    மாண்பு போய் விட்டது என்று சொன்னால், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்க தயார். அவர் தயாரா?. அவரது மாண்பு, மரியாதை, மானம் வேண்டுமானால் போகலாம். இன்று அரசியலுக்கு வந்த பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை. இதுவரை பேசிய எதையும் நிரூபிக்க தவறிய கமல்ஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல் போவார்.



    எங்கள் கூட்டணியை பற்றி தி.மு.க.வுக்கு என்ன கவலை. கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தை சாப்பிட்டவர் ஒருவர், அதனை பார்த்துக் கொண்டிருந்தவர் மீது வழக்கா என அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாக சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும் சேர்த்ததற்காக கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் தெரிவித்தார்.

    எங்கள் கூட்டணியை பார்த்து நாங்கள் கூறவில்லை. 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரசை சொன்னார். அந்த காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

    இது கொச்சைப்படுத்துகின்ற வார்த்தை. தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி வைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிட பாரம்பரியம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார்.

    கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதே போல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணி செயலாளராகவும் உள்ளார். ஆனால் தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #KamalHaasan
    என்ஜின் இல்லாத தி.மு.க. கூட்டணி ரெயில் டெல்லி போய் சேராது. தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #RajendraBalaji #ADMK #DMK
    விருதுநகர்:

    சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி என்பது எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும். சென்னையில் இருந்து புறப்பட்டால் எங்கும் நிற்காமல் டெல்லிக்கு சென்று தான் நிற்கும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டு பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். வருகிற மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.


    ஆனால் தி.மு.க அமைத்துள்ள கூட்டணி, என்ஜின் இல்லாத ரெயில்போன்றது. அது டெல்லிபோய் சேராது. அந்த கூட்டணி தேர்தலில் தோல்வியடையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajendraBalaji #ADMK #DMK
    அரசியலுக்காக அ.தி.மு.க. மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார் என்று தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்காக, தமிழகத்தின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை எப்படி பயன்படுத்தி உரிமைகளை பெற்றாரோ? அதனடிப்படையில் எடப்பாடி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

    திராவிட கட்சிகளின் உயிர் மூச்சான சுயாட்சி கொள்கையில் தெளிவாக கொள்கை பிடிப்பாக இருப்போம். அ.தி.மு.க. போன்று பா.ஜ.க.வுக்கும் தனியாக கொள்கை இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ்- தி.மு.க.தான். அவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.

    18 ஆண்டுகள் மத்தியிலும், 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில்தான் கச்சத்தீவு பிரச்சனை வந்தது. இலங்கையில் ஒன்றரை கோடி அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதற்கு இந்திய ராணுவம் துணை புரிந்ததாக ராஜபக்சே ஒப்புக்கொண்டார். தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க.வை மத்திய ஆட்சியில் பங்கேற்பதற்கோ, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கோ? எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    மத்தியில் அ.தி.மு.க. எதிர் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் நானும் குரல் கொடுத்து இருக்கிறேன். பாராளுமன்றத்தின் அவையை முடக்கியதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதே போன்று மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது என பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டோம்.

    தற்போது மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. கஜா புயல் நிவாரணத்துக்கு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மீண்டும் கேட்டு இருக்கிறோம். இப்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது.

    ஸ்பெக்ட்ரம், ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்குகளில் துரிதமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.



    தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் மட்டுமல்ல எல்லா கட்சிகளும் குற்றஞ்சாட்டின. அதில் உண்மை இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க. மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அரசியலுக்காக கொடுத்திருப்பார்கள். இது தான் எங்கள் கருத்து.

    நீட் தேர்வினை நடத்தி காண்பித்தது காங்கிரசும், தி.மு.வும் தான். ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்துக்கு துரோகமும், இடர்பாடுகளும் ஏற்பட்டன. இதை தி.மு.க. எங்கள் மீது திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 2011-ல் தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள தி.மு.க-காங்கிரஸ்தான் சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
    பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்ததை மறந்து இன்று ராமதாஸ் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார் என்று குஷ்பு கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?

    பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். இன்று அவரும் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார்.



    தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    கே:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறியிருக்கிறீர்கள், 40 தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?

    ப:- நம்பிக்கை இல்லாமல் இல்லை. 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி தான் கைப்பற்றும். 35 தொகுதி என எதற்கு கூறினேன் என்றால், சரி 4 பேராவது எதிர்தரப்பில் வெற்றிபெற்று மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை பார்க்கட்டுமே என்றுதான். எதிர்தரப்பே இருக்கக் கூடாது என நினைக்கக் கூடாது அல்லவா.

    கே:- தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடு எப்படி உள்ளது?

    ப:- கே.எஸ்.அழகிரி அருமையாக செயல்படுகிறார். அனைத்து தொண்டர்களையும் சந்திக்கிறார், நிர்வாகிகளை அரவணைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக்கொடுத்து செல்கிறார். இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களாக கே.எஸ்.அழகிரி போல் ஒரு தலைவர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வர வேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

    கே:- தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியவில்லையே?

    ப:- ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் இப்போதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு தான் வருகிறேன். தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள். பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை காணலாம்.

    கே:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஷ்பு மத்திய மந்திரி ஆக வாய்ப்பு இருக்கிறதா?

    ப:- (சிரிப்பு) யாருக்கு தெரியும், தேர்தலில் போட்டியிடுவேனா என்பதே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றி ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
    பாராளுமன்ற தேர்தலில் அமமுக 25 இடங்களை கைப்பற்றும் என கர்நாடகா மாநில அமமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார். #Parliamentelection #Pugazhendhi

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமையிலும், மாவட்ட அவைத்தலைவர் ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன் (கடலாடி), முத்துராமலிங்கம் (கமுதி வடக்கு), ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் (மண்டபம்) ஆகியோரது முன்னிலையிலும் நடந்தது. நகர செயலாளர் காட்டுராஜா வரவேற்றார்.

    கூட்டத்தில் கர்நாடகா மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

    திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என கூறிய ராமதாசும், அன்புமணியும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, சுயலாபமடைந்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதற்கும், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கும், பா.ஜனதா அரசு என்ன செய்தது. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அநீதிகளை இழைத்த அரசு மோடி தலைமையிலான அரசு.

     


    அ.தி.மு.க.வில் வருமானமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால் அ.ம.மு.க.வில் கடைமட்ட தொண்டர்கள் கூட தனது டூவீலரை அடகு வைத்து, கட்சி பணியாற்றுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது.

    பா.ஜனதா அரசில் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. இந்தியாவிலேயே குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கியது ஜெயலலிதா தலைமையிலான அரசு மட்டுமே.

    வரும் லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க. 25 சீட்டுகளை பிடித்து வெற்றி பெறும் என உளவுத்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதால், ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Parliamentelection #Pugazhendhi

    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது தங்கள் கட்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் #ADMK #RajendraBalaji #DMDK
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இன்று நம்மிடம் இல்லாத நிலையில் கட்சியையும், ஆட்சியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக வழி நடத்தி செல்கின்றனர்.

    ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை வாங்கி கொடுத்து முன்வாசல் வழியாக வைகோவை அழைத்து சென்ற கட்சி அ.தி.மு.க.தான். பம்பரம், மாம்பழம், தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்தது எல்லாமே புரட்சித் தலைவியால்தான் நடந்தது.



    தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் கொடுத்தது எங்கள் கட்சிதான். தே.மு.தி.க.விடம் கூட்டணி பேச்சுவார்த்தை மரியாதை நிமித்தமாகதான் நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க.காரன் எதையும் கண்டு பயப்பட மாட்டான்.

    எதிரில் மதம் கொண்ட யானை வந்தால் கூட சிங்கம் போல் நின்று வென்று காட்டக்கூடிய திறமை அ.தி.மு.க.காரனிடம் உண்டு. எங்களிடம் எந்த கட்சியின் நாடகமும் செல்லு படியாகாது.

    46 வயது இளைஞன்தான் அ.தி.மு.க. ஆனால் டி.டி.வி.க்கு ஒரு வயது, தே.மு.தி.க.விற்கு 10 வயது, ம.தி.மு.க.விற்கு 14 வயது. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் ஓட்டே கிடையாது. எங்கள் கட்சியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அ.தி.மு.க. பலமான கட்சி.

    தி.மு.க.வினர்களை கொள்ளைகாரர்கள் என்று விமர்சனம் செய்த விஜயகாந்தை மு.க.ஸ்டாலின் சந்தித்ததில் உள்நோக்கம் உள்ளது. அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி மாபெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்த களிலும் மாபெரும் வெற்றி பெறும். எங்களிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது. இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #DMDK
    தேர்தலுக்கு பின் தே.மு.தி.க. காணமல் போகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். #Congress #EVKSElangovan #DMDK
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுமை காலனியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்சி கொடியேற்று விழா மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்ராஜப்பா மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக தான் பலமான கூட்டணி. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சிகள் விரைவில் இந்த அணியில் இணைகிறது.

    புதுச்சேரி உள்பட 40தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொய் பேசுவதில் மோடி பெரிய புழுகன் என்றால், ராமதாஸ் ஜூனியர் மோடியாக உள்ளார்.

    மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதே போல் ராமதாசும் கொடுத்த பல வக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.



    பா.ம.க, பதவிக்கு வரும் போது தனது குடும்பத்தினர் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கூறினார். ஆனால் தன் மகனை மத்திய அமைச்சராக்கினார். அதிமுக ஊழல் கட்சி அதில் சேர மாட்டேன் என்று கூறினார்.

    ஆனால், தேர்தலுக்காக அரசியல் வியாபாரியாகவும், தரகராகவும், மாறிவிட்டார்கள்.

    அதிமுக, பாமக கூட்டணியை அவர்களின் கடசித் தொண்டர்களே ஏற்கவில்லை. கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அதிமுக தனித்து நின்றால் கூட 40 தொகுதிகளில் டெபாசிட் பெறலாம். ஆனால் பாமக., கூட்டணியால் அதுவும் கிடைக்காது.

    தே.மு.தி.க.வுடன், பேச்சுவார்த்தை கடைசி வரை இழுபறியாக இருக்கும். தேர்தலுக்கு பின் தேமுதிக காணமல் போகும். புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தெரியாது. அதை ஒரு கட்சியாகவே நான் மதிப்பது இல்லை.

    திமுக- காங்., தொகுதி ஒதுக்கீடு பேசி முடிவெடுக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan #DMDK
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி பேசினார். #admk #parliamentelection

    நாமக்கல்:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் குளக்கரை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் அமைத்து இருக்கும் கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி யில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. இதை பொறுக்க முடியாமல் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் பேசிவருகிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

    நீங்கள் பேச, பேச எங்களின் வாக்கு வங்கி அதிகரிக்கும், உங்களின் கோபத்தின் வெளிப்பாடு எங்களின் வெற்றியை எளிதாக்கும்.

    தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அந்த பொறுப்புக்கு வந்து உள்ளார். அவர் தலைவரான பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இதில் தோற்று விட்டால் தொண்டர்கள் நம்மை தலைவராக ஏற்கமாட்டார்கள் என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மீது சேற்றை வாரி வீசி வருகிறார்.

    காங்கிரஸ் கூட்டணியில் மு.க.ஸ்டாலினை தவிர யாரும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. அவரும் மம்தா பானர்ஜி கூட்டத்தில் வேறு ஒரு கருத்தை சொல்லி வந்து உள்ளார். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி மலர வேண்டும்.

    நமது எதிரி கட்சி தி.மு.க. என்பதை ஜெயலலிதா நமக்கு அடையாளம் காண்பித்து சென்று உள்ளார். இதேபோல் அவர் இருக்கும் போதே டி.டி.வி. தினகரன் குடும்பத்தை விலக்கி வைத்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வரை சென்னைக்கே வராத டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லி வருகிறார்.

    இதை தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தல் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் தேர்தல் என்பதை எண்ணி தொண்டர்கள் பணியாற்றிட வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்து கூறி ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் நாமக்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், கரையாம்புதூர் மகேஷ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதையொட்டி செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி தம்பதி யினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் அமைக் கப்பட்டு உள்ள நாமக்கல் ரெயில் நிலைய சாலையை அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இதேபோல் நாமக்கல் குளக்கரை திடலில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவையும் திறந்து வைத்து பார்வையிட்டார். #admk #parliamentelection

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். #ministerspvelumani #admk

    கோவை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

    மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.விழாவில் தையல் எந்திரங்கள், சலவை எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கனவு கண்டார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த ஆட்சியையும், நிலையான ஆட்சியையும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நல திட்டங்கள் ஜெயலலிதா வழியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு செல்லாமல் இப்போது கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 12,564 கிராமங்களுக்கும் நல்ல சாலைகளை அமைத்து கொடுத்துள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் வெற்றி கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அமைத்தது முதல் ஸ்டாலின் குழப்பத்தில் தவித்து வருகிறார். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ministerspvelumani #admk

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினார். #MinisterRajendraBalaji #ADMK
    சாத்தூர்:

    சாத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மாபெரும் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி பெறும்.

    மோடி நாட்டின் சிறந்த தலைவராக செயல் ஆற்றி வருகிறார். இந்தியாவை வல்லரசாக்க திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்.

    எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுகுதியும் கிடையாது. மேடைக்கு மேடை தி.மு.க.வை வசைபாடிய வைகோவை கூட்டணியில் வைத்துக்கொண்டு பா.ம.க நிறுவனர் ராமதாசை விமர்சிக்க ஸ்டாலினுக்கு அருகதையில்லை.

    சாத்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். சாத்தூர் தொகுதி மக்கள் இட்டை இலை சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்.

    கூட்டத்தில் 1270 பேருக்கு வேட்டி, சேலைகள், மகளிருக்கு தையல் எந்திரங்கள் மற்றும் 50 சலவை தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். #MinisterRajendraBalaji #ADMK
    ×