search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார். #thangatamilselvan #parliamentelection #edappadipalanisamy

    மேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு, மாநகர் மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடையில் நடந்தது.

    புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தனர்.

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் 18 எம்.எல். ஏ.க்களும் கவர்னிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற மனு கொடுத்த ஒரே காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளோம். ஆனால் எதிர்த்து ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் நீக்கப்படவில்லை.

    கடந்த தேர்தலில் அம்மா லேடியா, மோடியா என்றார்கள். மக்கள் அம்மாவிற்கு தான் வாக்களித்தார்கள். தி.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அம்மாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை.

    மக்கள் புதிய தலைவர் டி.டி.வி. தினகரனைத்தான் விரும்புகின்றனர். அ.ம.மு.க. ஆரம்பித்து 1½ ஆண்டுகளாகிறது. மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. தற்போதுள்ள அ.தி.மு.க. அவல ஆட்சியும், பா.ஜ.க. ஆட்சியும் மக்களுக்கு பிடிக்கவில்லை.

    மக்கள் செல்வாக்கு நமக்கு உள்ளது. உறுதியாக 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற முடியும்.

    மதுரை தொகுதியில் தினகரன் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும். மதுரை பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மக்களின் ஆதரவோடு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சரவணன், சேவுகன், பாஸ்கரன், நிவாகிகள் நாகசுப்பிரமணியன், அன்புக்கரசு, சொக்கம்பட்டி இளங்கோ, மாணவரணி கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக சட்டசபையில் இன்று அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. #TNAssembly #DMK #ADMK
    சென்னை:

    சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார்.

    தொடர்ந்து பேசிய ராமசாமி அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் ஆவார். நாங்களே பேசி நிதியை பெற்றுக்கொடுப்போம். மத்திய அரசிடம் நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதால் தான் நிதியை வாங்க முடியவில்லை என்றார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ‘யாரிடமும் சிக்கவில்லை. தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம்.

    அமைச்சர் தங்கமணி:- காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்தது. அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீட்டிலும் தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இது நமது மாநிலத்துக்கு தலைகுனிவு.

    அமைச்சர் ஜெயக்குமார்:- மேற்கு வங்காளத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்தால் எதிர்க்கட்சி தலைவர் கண்டிக்கிறார். ஆனால் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்த போது ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

    மு.க.ஸ்டாலின்:- தவறான தகவலை அமைச்சர் பதிவு செய்கிறார். வருமான வரி சோதனை நடந்தபோது முதல் நபராக கண்டனம் தெரிவித்தது நான் தான்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இடைத்தேர்தல் குறித்தும் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. #TNAssembly #DMK #ADMK
    பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    சென்னை:

    சட்டசபையில் இன்று நந்தகுமார் (தி.மு.க.) பேசுகையில், “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. 21 தடுப்பணைகளை புதுப்பிக்க ரூ.43 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் 30 தடுப்பணைகளை புதிதாக கட்டப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பி உள்ளன. 500 மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட உள்ளதால், இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

    இதே கருத்தை பிரின்ஸ் (காங்.) வலியுறுத்தி பேசினார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக அம்மாவின் ஆட்சிக்காலத்தில், செய்தி வந்தபோது தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில், அணைக் கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.

    இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

     


    ஆந்திர அரசு, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ் நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.

    மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

    பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணை களை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

    மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது.

    இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

    ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பாலாறு நதிநீர் பிரச்சனையில், இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அம்மா அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.

    தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    செம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாரயாணசாமிக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கைகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 58 வயது வரை அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.



    மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.

    இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    வருகிற பாராளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று தினகரன் பேசினார். #dinakaran #parliamentelection #assemblyelection

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம், அம்மனூர், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.ம.மு.க. சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில், சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியும், துரோக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வினரை தோற்கடியுங்கள்.

    விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் அ.ம.மு.க.வை ஆதரித்து வாக்களியுங்கள்.

    அப்போதுதான், ஜெயலலிதாவின் மக்கள் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.பி. கோபால், வேலூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் என்.ஜி.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #assemblyelection

    நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். #Congress #KSAlagiri #ADMK
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாத அளவில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்ப்பை எப்படியாவது சரிகட்டுவதற்கு அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. திரைமறைவு தந்திரங்களை செய்து வருகிறது.

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால் படு குழியில் விழ நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள முதல்- அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குறிப்பாக நரேந்திர மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

    கடந்த 15 மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாமல் அந்த தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்க எவரும் நாதியில்லாத நிலை இருந்து வருகிறது. இந்த அவலநிலையில் இருந்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.

    நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவே அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணிக்கான பேரங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.

    அப்படி தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிற நிலை ஏற்பட்டு, ஆட்சி பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அ.தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

    ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீது குட்கா வழக்கு, ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு ரூபாய் 84 கோடி பணம் கொடுத்த வழக்கு மற்றும் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பு அரணாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் அ.தி.மு.க.வின் எதிர்காலமே பா.ஜ.க.வின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டப்படி, ஜனநாயக முறைப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு இணைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.

    இதில் அ.தி.மு.க. தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறி உள்ளார். #Congress #KSAlagiri #ADMK
    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #ADMK #BJP #Parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை இன்னும் 25 நாட்களில் வெளியாக உள்ளது.

    இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி, தி.மு.க.- காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணி உருவாகி வருகிறது. டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு களம் இறங்க உள்ளனர். இதனால் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆனால் உண்மையான போட்டி அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முக்கிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் இதில் தெளிவான நிலை தெரிந்து விடும்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க முயற்சி நடக்கிறது.

    ஆனால் கூட்டணியில் பா.ம.க. இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்றாலும் பா.ம.க.வுடன் தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

    அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே பா.ம.க. வையும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. பா.ம.க.வுக்கு 5 தொகுதிகள் வரை விட்டுத்தர தயாராக இருப்பதாக அ.தி.மு.க., பா.ஜனதா மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். பா.ம.க. என்ன முடிவு எடுக்கும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.

     


    இந்த நிலையில் அ.தி.மு.க. - பாரதிய ஜனதா கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்துக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பதில் இருகட்சி தலைவர்களின் பேச்சுவார்த்தை நீடித்தப்படி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்ற அடிப்படையில் டெல்லியில் பேச்சு நடந்தது. மத்திய மந்திரியும் தமிழக பா.ஜனதா பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் பேச்சு நடத்தினார்கள். இதில் இது வரை முடிவு எட்டப்படவில்லை.

    பா.ஜனதா தரப்பில் இருந்து 10 தொகுதிகள் கேட்கப்படுகிறது. அதில் 3 தொகுதிகளை பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி மற்றும் தேவநாதனின் யாதவ கட்சிக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் விரும்புகிறார்கள்.

    ஆனால் 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்துள்ளது. மொத்தமே 6 தொகுதிகளை விட்டுத் தருவதாகவும், அதில் 3 இடங்களை தோழமைக் கட்சிகளுக்கு கொடுத்து விட்டு, மீதமுள்ள 3 இடங்களில் போட்டியிடும்படி அ.தி.மு.க. கூறி வருகிறது.

    இதை ஏற்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை.

    இதற்கிடையே 10 எம்.பி. தொகுதிகளை கேட்பதோடு, அந்த 10-ம் தாங்கள் கேட்கும் தொகுதிகளாக தர வேண்டும் என்று பா.ஜனதா தரப்பில் அ.தி.மு.க.விடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது அ.தி.மு.க. தலைவர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

    பா.ஜனதா கேட்கும் தென்சென்னை உள்ளிட்ட 10 தொகுதிகளும் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்குகள் உள்ள தொகுதிகள் என்பதால், பா.ஜனதா கோரிக்கை இன்னமும் ஏற்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. #ADMK #BJP #Parliamentelection

    டிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். #DindigulSreenivasan #TTVDhinakaran
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்தால் அது குறித்து பார்க்கலாம். சின்னதம்பி யானையை கும்கி ஆக மாற்ற வேண்டும் என ஒருவரும், மாற்ற வேண்டாம் என ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.



    கஜா புயலால் மலைப்பகுதியில் விழுந்துள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள பரப்பாறு அணை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட வன அதிகாரியும் பேசி முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DindigulSreenivasan #TTVDhinakaran

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு 14-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. #ParliamentElection #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க. மேற்கொண்டுள்ளது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை வாங்கி சென்று, பூர்த்தி செய்து சமர்பித்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர்.

    விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு 10-ந்தேதி (அதாவது, நேற்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், அ.தி.மு.க. எம்.பி.யுமான டாக்டர் ஜெ.ஜெயவர்தன் மீண்டும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

    எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார், ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜக்கையன் மகன் பாலு மணிமார்பன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலிகான் உள்பட பலரும் நேற்று போட்டி போட்டு விருப்ப மனு அளித்தனர். இதன் காரணமாக சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று தொண்டர்கள் கூட்டத்தால் களைக்கட்டியது.

    இந்தநிலையில் அ.தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்து தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளை ஏற்று, அ.தி.மு.க.வினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை வழங்கலாம்.’ என்று தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்று வரை 7 நாட்கள் விருப்ப மனு வினியோகம் நடந்துள்ளது. 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்பட்டது. இதுவரையில் மொத்தம் 1,400 பேர் போட்டியிட மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #ADMK
    அமமுகவை எதிர்த்து போட்டியிட்டால் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #AMMK

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் அ.ம.மு.க. சார்பில் திண்டுக்கல் மேற்கு, கிழக்கு, மாவட்ட நிர்வாகிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிமுக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ம.க., மற்றும் தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகின்றனர். இன்னும் தேர்தலுக்கு மே மாதம் வரை அவகாசம் உள்ளது. ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்தி காட்டுகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை பொதுமக்களை வைத்து நடத்தாமல், தி.மு.க. தொண்டர்களை வைத்து தான் நடத்தி வருகிறார்.

    அ.ம.மு.கவை அமைச்சர் ஜெயக்குமார் லெட்டர்பேடு கட்சி என்கிறார். லெட்டர்பேடு கட்சிக்கு பயந்து தான் குக்கர் சின்னத்தை நீக்க உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளனர். அ.தி.மு.க.காரர்களுக்கு திராணி இருந்தால் குக்கர் சின்னத்தை எதிர்த்து போட்டியிடட்டும். குக்கர் சின்னத்தை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #AMMK

    அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை பலர் வாங்கினர். அவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.

    நேற்று வரை 40 தொகுதிகளுக்கும் 1000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர். கடைசிநாள் விருப்பமனு விநியோகம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து இன்று தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிக்க ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் பூர்த்தி செய்த விருப்ப மனுக்களை அளித்தனர்.

    தென்சென்னை தொகுதிக்கு ஜெயவர்தன் எம்.பி., வடசென்னை தொகுதிக்கு வெங்கடேஷ் பாபு எம்.பி., பொள்ளாச்சிக்கு லியாகத் அலிகான், ஈரோடுக்கு முன்னாள் மேயர் மல்லிகா உள்பட பலர் விருப்பமனு கொடுத்தனர்.

    மதியம் 12 மணி வரை மொத்தம் 1300 பேர் விருப்ப மனு கொடுத்தனர். அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படும். இதற்கிடையே விருப்பமனு விநியோகிக்க காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #parliamentelection

    ரிஷிவந்தியம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 6-ந்தேதி தொடங்கிய இவரது புரட்சி பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், வடக்குநந்தல், ஆலத்தூர், சங்கராபுரம், பாவலம் ஆகிய இடங்களில் பேசினார். பகண்டை கூட்ரோடு பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.


    இன்றைய முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி செய்வதற்கு காரணமாக இருந்த நமது கழக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், எனக்கும் துரோகம் செய்த காரணத்தால் பிரபு எம்.எல்.ஏ. போன்று தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் தொகுதி மக்களின் தேவைகளை சரிவர செய்யவில்லை.

    பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளார்கள். ஆனால், ரிஷிவந்தியம் தொகுதியை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் படித்த மாணவ-மாணவிகள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். அரசு சார்ந்த கரும்பு ஆலைகளும், தனியார் கரும்பு ஆலைகளும், விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை வழங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    மேட்டூர் அணை நிரம்பி கடலுக்கு செல்லும் நீரை முறையாக சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த இந்த ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

    அவர்கள் எல்லோரும் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. காதில் பூ சுற்றுவதுபோல் பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குகிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களது சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளனர்.

    தற்போது தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடி உள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கில் இருந்து வருகிற வருமானத்தால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர்.

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மதுக்கடையை குறைக்காமல் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் ஆளுங்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரிஷிவந்தியம் தொகுதியில் ஐ.டி.ஐ. தொழிற்சாலை கொண்டு வருவோம். 24 மணி நேரமும் செயல்படும் கூடுதல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்து செய்து கொடுப்போம். பகண்டை கூட்ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். அனைத்து ஏரிகளையும் தூர்வாரி, நீர்நிலைகளில் நீரை சேமிக்க வழிவகை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #parliamentelection

    ×