search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை அதிமுக வேட்பாளரை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சிஎன் அண்ணாதுரையும், அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நேருக்குநேர் மோதினார்கள். இதில் அண்ணாதுரை 6 லட்சத்து 66 ஆயிரத்து 272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3 லட்சத்து 62 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 3,04,187 ஆகும்.

    மக்கள் நீதி மய்யம் 14654 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 27503 வாக்குகளும், அமமுக 38639 வாக்குகளும் பெற்றனர்.
    நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிமுக வேட்பாளர் பி காளியப்பனை தோற்கடித்தார்.
    நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி. சின்ராஜ் 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பி. காளியப்பன் 361142 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

    அமமுக 23347 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 30947 வாக்குகளும், நாம் தமிழர் 38531 வாக்குகளும் பெற்றன...
    ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக-வின் கணேஷமூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    ஈரோடு தொகுதியில் மதிமுக-வைச் சேர்ந்த கணேஷமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜி மணிமாறன் போட்டியிட்டார். கணேஷ மூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணிமாறன் 352973 வாக்குகள் பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் 47719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 39010 வாக்குகளும் பெற்றன.
    ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
    ஆரணி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஏழுமலை போட்டியிட்டார். விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரத்து 96 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 6 லட்சத்து 13 ஆயிரத்து 390 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3 லட்சத்து 85 ஆயிரத்து 294 வாக்குகள் பெற்றார்.

    நாம் தமிழர் கட்சி 32,151 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 14,680 வாக்குகளும், அமமுக 46,326 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    திண்டுக்கல்:

    எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டு முதன் முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் சந்தித்த தேர்தல் திண்டுக்கல் பகுதி மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் சுமார் 2,60,824 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். அந்த இடைத்தேர்தலில் தான் அதிமுக முதல் முதலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றிப்பெற்று திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.

    அதன் பிறகு திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க.வுக்கு மிகவும் ராசியான தொகுதியாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அந்த சூழ்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பாக வேலுச்சாமி போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பாக ஜோதிமுருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.

    இந்த தொகுதி உருவாக்கப்பட்ட 1952-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.

    1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா. இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2 முறை அ.தி.மு.க.வும், பின்பு 2 முறை காங்கிரசும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி அ.தி.மு.க. வசமானது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயகுமார் வெற்றி பெற்று எம்.பி.யானார். அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்து கூட்டணி கட்சியினருக்கே ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. தனது வேட்பாளரை நிறுத்தியது.

    இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
    இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பழனி முருகன் கோவிலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் அணி அணியாக வந்தனர்.
    பழனி:

    தமிழகத்தில் நிலக்கோட்டை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல் தேர்தலை காட்டிலும் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தமிழகத்தில் ஆட்சியை தொடரவும், புதிய ஆட்சியை அமைக்கவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு திறவுகோல் போல் உள்ளது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர் தனித்தனியாக வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் நடக்கும் சாயரட்சை பூஜையில் கலந்து கெண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி, தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோரும் பழனி முருகன் கோவிலுக்கு தனித்தனியாக வந்து, சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர், தங்கள் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக வேண்டிக் கொண்டனர். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதாலும், வைகாசி விசாகத்தின் கடைசி நாள் என்பதாலும் தேர்தல் வெற்றிக்காக வேட்பாளர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ஆட்சி மாறி மாற்றுக் கட்சியினர் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது கட்சி பதவியை உதறினார்.

    அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

    இதனால் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று கூறினார்.

    இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

    கட்சி பதவியை விட்டு விலகிய அவர் அடுத்து என்ன நடவடிக்கையில் ஈடுபடலாம்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் உள்பட கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    எந்த காரணம் கொண்டும் நான் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே சமயம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

    கருத்து கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன்.

    மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே இருப்பேன்.

    எனது தொகுதி மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சாய கழிவு நீர் பிரச்சனை நிலவி வருகிறது. அதுவும் மழை பொய்த்த காலத்தில் இந்த சாயக்கழிவு குடிநீரில் கலந்து வருகிறது.

    இதனால் குடிநீர் குடிக்க உகந்தது அல்ல என்று அப்போதய தமிழக முதல்வர் அம்மாவிடம் கூறி பெருந்துறை பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். அதுவும் கொடிவேரி அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என கேட்டேன். அம்மாவை 2 முறை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். அவரும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நிதியை அறிவித்தார்.


    இந்த நிலையில் அம்மா மறைந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் அண்ணன் பழனிசாமியிடம் வைத்தேன். சிறிது காலம் தாமதம் ஏற்பட்டாலும் குடிநீர் திட்டத்துக்கு அவர் ரூ.240 கோடி ஒதுக்கினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நான் அவருக்கு துணையாக நின்றேன். இப்போதும் எனது நிலை அதே தான்.

    அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேர்தலில் எதிர்க்கட்சியினரை குறி வைத்துதான் நமது பிரசாரம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம். தகுந்த ஆதாரத்துடன் இதை கொடுத்தும் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் (அமைச்சர் கருப்பணன்) தலையீட்டின் பேரில் வெளியே விட்டு விட்டார்கள்.

    இதனால் நான் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

    ஒரு முக்கிய நபர் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பணமும் கொடுத்துள்ளார். இதையும் நான் கட்சி தலைமையில் கூறி உள்ளேன்.

    அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு விசாரிப்போம் என்று கூறி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது என்று நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தென்னிந்திய நாடக சங்க கட்டிடம் கட்ட நிதி வழங்குவதற்காக இன்று நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நான் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவைப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்படும்.

    கருத்து கணிப்பு மீதான நம்பகத்தன்மை போய் விட்டது. தனியார் நிறுவனம் நடத்தும் கணிப்புகள் பொய் கணிப்புகளாக உள்ளன.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என எந்த கருத்து கணிப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் நான் வெற்றி பெற்றேன்.

    3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதில் நம்பகத்தன்மை இல்லை. இதனால் தான் கோர்ட்டு அதற்கு தடை விதித்துள்ளது.



    அ.தி.மு.க.வை பொறுத்த வரை சசிகலா தான் பொதுச்செயலாளர். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் அந்த கட்சியின் நிலைப்பாடு தெரியவரும்.

    அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது தான் என் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க .தலைமையிலான கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோல் இந்திய அளவில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக வருவார். இது கருத்து கணிப்பு மட்டுமல்ல. இதை தான் நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லிக்கொண்டே வந்தது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் மோடி ஆட்சி தொடரும.

    தற்போது தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனைகள் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவதினாலே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இது திடீரென்று வந்தது இல்லை. இன்னும் வருகிற காலங்களில் அதிகமான வறட்சி ஏற்படும், வெள்ளமும் வரலாம். ஆட்சியாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இது ஒரு ஐம்பது ஆண்டுகால பிரச்சனை. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க வேண்டும். முக்கியமாக கோதாவரி காவிரி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் அப்பொழுது தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.


    நாங்கள் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை எப்பொழுதும் விட்டுத்தர மாட்டோம். டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்.

    நாங்கள் கூட்டணிக்குள்ளே இருந்து அதை எதிர்ப்போம். மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதை எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க.வினர் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், 23.5.2019 அன்று வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23.5.2019 அன்று, கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுடைய மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்று விட வேண்டும்.

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    வாக்குப்பதிவு எந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக்கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.

    தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

    கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும்.

    கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஏஜெண்டுகளும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

    கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கட்சி பதவியை துறந்தாலும் தொண்டனாக இருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு உழைப்பேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.

    இவருக்கும் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெடித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சருக்கு எதிராக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார். “கட்சிக்காக பணி ஆற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் அமைச்சர் வேலை செய்தார் என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று புகார்களை அள்ளி வீசினார்.

    அமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கியதால் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்த கட்சி பதவியான அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.



    இந்த விலகல் (ராஜினாமா) கடிதத்தை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட் டுக்கே சென்று வழங்கினார். அப்போது அவரிடம் முதல்வர் “எதற்கு இந்த அவசரம் சற்று பொறுமை காக்கவும்” என்று கூறியதாக தெரிகிறது.

    எனினும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. “எனது தனிப்பட்ட முடிவு தான் இது. தொடர்ந்து கட்சி பணி செய்வேன்” என்று கூறினார்.

    முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, “எனது சொந்த முடிவு தான் இது. பதவி விலகலால் எந்த மன உளைச்சலும் இல்லை. ரொம்ப சந்தோ‌ஷமும் இல்லை” என்று கூறினார்.

    கட்சி பதவியை விட்டு விலகல் குறித்து இன்று காலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அ.தி.மு.க. தொண்டன். அம்மா இருந்த போது அமைச்சராக இருந்த நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்து மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தவன் நான். எனது பணி தொடரும். தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன். ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். இதில் எந்த மாறுபாடும் இல்லை” என்று கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பையொட்டி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கட்சி பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து மே 23ல் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கிறார். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    கருத்து கணிப்பை கருத்து திணிப்பு என கூறுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் மனநிலையை பொருத்தது என தெரிவித்தார்.



    மேலும், தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓபிஎஸ் கூறினார். 
    ×