search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    2014 பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் குறித்து பொது மக்கள் கேள்வி கேட்கும் போது பதில் அளிக்க பா.ஜனதாவினர் தயாராக இருக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. #LSPolls #BJP #ShivSena
    மும்பை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா அந்த கட்சியையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்தது.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி அமைக்காது என்று கருதப்பட்டது. ஆனால் பா.ஜனதாவுடன் அந்த கட்சி தொடர்ந்து கூட்டணி அமைத்து தொகுதி உடன்பாடு செய்தது.

    மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 48 இடங்கள் உள்ளது. இதில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    தேர்தல் உடன்பாடுக்கு பிறகும் பா.ஜனதாவை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது தொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறி இருப்பதாவது:-



    பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசி வந்தார். ஆனால் மக்களின் மனக்குரல் என்ன என்பது மே 23-ந்தேதி (பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் நாள்) தெரிய வரும்.

    மக்களை நீண்ட காலம் முட்டாளாக்க முடியாது என்று வரலாறு சொல்கிறது. பொதுமக்களிடமும் கேள்வி இருக்கும். இதற்கான விடையை அவர்கள் வாக்கு பெட்டிகள் மூலம் அளிப்பார்கள்.

    காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தப்படும். ராமர் கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்து 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த இரண்டு வாக்குறுதிகளும் தற்போது நிறைவேற்றவில்லை. இது குறித்து பொது மக்கள் கேள்வி கேட்கும் போது பதில் அளிக்க பா.ஜனதாவினர் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #BJP #ShivSena
    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன்பிறகு தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #ADMK

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. அணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சில தினங்களாக இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகள், தே.மு.தி.க. 4 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு இன்று ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    புதுச்சேரி தொகுதியை தோழமைக்கட்சியான என். ஆர்.காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்து இருப்பதால் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் களம் இறங்குகிறது. எனவே சுமார் 15 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நேரடி பலப்பரீட்சை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    90 சதவீதம் அளவுக்கு இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுவிட்டது. ஓரிரு தொகுதிகள் தொடர்பாக மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இன்று காலை அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.


    கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் அ.தி.மு.க. தோழமைக்கட்சி தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், சுதீஷ், கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய பிரசாரத்தை மேற்கொள்வது என்பது பற்றி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்கும் கூட்டங்களை எந்தெந்த நகரங்களில் நடத்துவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

    முக்கிய தொகுதிகள் பற்றியும் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை முடிந்த பிறகு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    அ.தி.மு.க. அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தெளிவானதும் உடனடியாக வேட்பாளர்களை அறிவிக்கவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடந்து முடிந்து விட்டது.

    அது போல பா.ம.க.விலும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. தே.மு.தி.க.விலும் வேட்பாளர்களை அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    எனவே இந்த வார இறுதிக்குள் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #ADMK

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் மோடி பிரதமர் ஆக மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #PMModi
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அதே நேரத்தில் கடந்த தேர்தலை போன்று பா.ஜனதாவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்து இருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தனது கட்சி விழாவின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும்.

    இத்தகைய தருணத்தில் மோடி பிரதமராக ஆதரவு கிடைக்காது. எனவே அவர் 2-வது தடவை மீண்டும் பிரதமராக மாட்டார்.



    நாளையும் (14-ந் தேதி), நாளை மறுதினம் (15-ந் தேதி) டெல்லியில் மாநில கட்சிகளை சந்தித்து மெகா கூட்டணி அமைப்பதுகுறித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

    மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியில் சில மாநில கட்சிகள் பிரிந்து சென்றுவிட்டன. ஆனால் விவசாய தொழிலாளர் கட்சி (பி.டபிள்யூ.பி.) தேசிய வாத காங்கிரசை தொடர்ந்து ஆதரிக்கிறது. அதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    மேலும். ‘சுவாபிமனி ஷெட்கரி சங்காதனா’ கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். விவசாயிகள் முன்னணி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியிடம் சில எதிர்பார்ப்பும் உள்ளன. இது குறித்து காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் முடிவு செய்யும்’ என்றார். #SharadPawar #PMModi
    அரசியலமைப்பு சட்டத்தை சீரழிக்கும் பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பிரகாஷ் காரத் ஆவேச மாக பேசினார். #PrakashKarat
    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்து வருகிறார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாட்டை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பன்முக தன்மை கொண்ட இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த தேர்தல் மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

    மோடி கடந்த தேர்தலின் அளித்த போது வாக்குறுதிகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அவர்களது ஆட்சியின் சொந்த புள்ளி விரவமே அதனை பொய்யாக்குகிறது.

    45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலை வாய்ப்பு பறிபோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 11 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

    பண மதிப்பிழப்பு அறிவிப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. வோடு சேர்ந்து பாரதிய ஜனதா மோசமான கூட்டணியை அமைத்துள்ளது. அதில், அ.தி.மு.க. அடிமையாக உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #tamilnews
    மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சி தலைவரின் மகன், பாஜகவில் இன்று இணைந்துள்ளார். #BJP #SujayJoinsBJP
    புனே:

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுஜய் விக்கி பாட்டீல். இவர், சட்டமன்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ராதாகிருஷ்ணா விக்கி பாட்டீலின் மகனும், மூத்த காங்கிரஸ் தலைவர் பாலாசாகீப் விக்கி பாட்டீலின் பேரனும் ஆவார். வரும் பாராளுமன்ற தேர்தலில், அகமது நகரில் காங்கிரஸ் கட்சி தனக்கு டிக்கெட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் மும்பையில் உள்ள எம்சிஏ அரங்கில், பாஜக மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே மற்றும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இன்று காலை சுஜய் பாஜகவில் இணைந்தார்.



    இது குறித்து முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘அகமதுநகர் தொகுதியில் சுஜய் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சி தலைமைக்கு மாநில பாஜக பரிந்துரை செய்யும். கட்சி தலைமை மறுக்காது என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் சுஜய் போட்டியிட்டால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி’ என கூறியுள்ளார்.

    சுஜய் பேசுகையில், ‘பாஜகவில் இணைவது எனது தனிப்பட்ட விருப்பம் ஆகும். எனது தந்தையின் பார்வையில் இருந்து மாறுபட்ட கோணத்தில் எனது சிந்தனை இருக்கிறது. மேலும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எனது தந்தை போல், கஷ்ட காலத்தில்  எனக்கு உறுதுணையாக நின்றார். தற்போது பாஜகவில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறினார். #BJP #SujayJoinsBJP

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் பேசி வருவதாகவும் அவர்களின் முடிவை பொறுத்து கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #LSPolls #GKVasan #ADMKAlliance
    சென்னை:

    த.மா.கா. நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை ஜி.கே.வாசன் இன்று கூட்டியுள்ளார். மாநில துணை தலைவர்கள் விடியல் சேகர் பொதுச்செயலாளர் ஞானசேகரன், செயலாளர்கள் எம்.டி.எஸ்.சார்லஸ், சக்திவேல், ரெங்கராஜன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜி சாக்கோ, அண்ணா நகர் ராம்முகர், அருண் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    அப்போது நிர்வாகிகள் தரப்பில் நமது கட்சிக்கு என்று தனியாக குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே 2 தொகுதிக்கும் குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி வேண்டாம் அதற்கு பதிலாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாமும் தனித்து போட்டியிடலாம் என்ற கருத்தை சிலர் முன்வைத்தனர்.

    இன்னும் சிலர் கூறும் போது, ‘‘நாம் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். அப்படியிருந்தும் கூட்டணிக்காக பா.ஜனதாவை ஆதரிக்கும் அளவுக்கு இறங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் தான் நமக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும்’’ என்றனர்.

    சிலர் பேச்சுவார்த்தையின் நிலவரங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அவர்கள் மத்தியில் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘உங்கள் உணர்வுகளும், ஆதங்கமும் எனக்கு புரிகிறது.



    அ.தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். எனவே நிர்வாகிகள் வேறு எந்த மாறுபாடான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். எங்கள் நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் முடிவை பொறுத்து முடிவு செய்யப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TamilMaanilaCongress #GKVasan #ADMKAlliance
    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

    இதில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதி, பா.ம.க.வுக்கு-7, தே.மு.தி.க-4, புதிய தமிழகம்-1, புதிய நீதிக்கட்சி-1, என்.ஆர்.காங்கிரசுக்கு-1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்று உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனாலும் தொகுதிகள் விவரத்தை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் நேர்காணல் நிகழ்ச்சி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



    இதில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    1. மத்திய சென்னை, 2, ஸ்ரீபெரும்புதூர், 3.ஆரணி, 4. அரக்கோணம், 5.சிதம்பரம், 6.தர்மபுரி, 7.திண்டுக்கல்.

    தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் :-

    1. வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருதுநகர்.

    புதிய தமிழகம்- தென்காசி. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    அ.தி.மு.க. அரசை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறியுள்ளார். #PrakashKarat #ADMK

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:-

    மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பெரிய தொழில் நிறுவனங்களிடம் தேர்தல் நிதி வசூலிக்க நிதி பத்திரத்தை வினியோகம் செய்கிறது. ரபேல் ஒப்பந்தத்திலும் இதுமாதிரி ஊழல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் மதச்சார்பின்மையை காப்பாற்ற நாம் மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். கடந்த முறை பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை அளிப்பதாக கூறியது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் 88 லட்சம் பெண்கள் வேலை இழந்துள்ளனர்.

    விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பு இழப்பின் மூலம் நாட்டு மக்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர். பெண்களை பாதுகாக்க தவறிவிட்டனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை பா.ஜனதா அரசு அரசியலாக்குகிறது. எல்லையில் பாதுகாப்பு இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதா ஆட்சி தான்.

    தமிழகத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. அரசை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை காப்பாற்ற அமைக்கப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்ற நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #PrakashKarat #ADMK

    மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா, கோட்சேவின் இந்தியா தேவையா? என்பதை வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசார் தெளிவுப்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #MahatmaGandhi #Godse #Rahulgandhi #Congressboothworkers
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக களமிறங்க தீர்மானித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசினார்.

    ‘இந்தியாவில் தயாரியுங்கள் என்று கூறிவரும் பிரதமர் மோடி பயன்படுத்தும் சட்டை, காலணிகள் மற்றும் அவர் செல்பி எடுக்க பயன்படுத்தும் கைபேசி போன்றவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாக உள்ளது. மக்களுக்கு நாம் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிப்போம் என்று அறிவித்த பின்னர் கலக்கமடைந்த மோடி, விவசாயிகளுக்கு தினந்தோறும் மூன்றரை ரூபாய் அளிக்கும் திட்டத்தை அறிவிக்கிறார்.

    டோக்லாம் பிரச்சனை வந்தபோது சீனாவுக்கு சென்ற பிரதமர் மோடி, முன்னேற்பாடுகள் ஏதுமின்றி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவுக்கு கைகூப்பி மண்டியிட்ட அவர், டோக்லாம் பகுதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இதுபற்றி இந்தியாவில் யாருக்கும் எதுவும் தெரியப்படுத்த மாட்டோம். ஊடகங்களை நாங்கள் ஊமையாக்கி விடுகிறோம் என சீன அரசிடன் கூறினார். இதுதான் மோடியின் நிஜமுகம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில், ஒரு கையில் அன்பும் மற்றொரு கையில் வெறுப்புணர்ச்சியும் உள்ளது. உங்களுக்கு மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா, அல்லது கோட்சேவின் இந்தியா தேவையா? என்பதை உறுதிப்படுத்தும் தேர்தலாக இந்த பாராளுமன்ற தேர்தல் அமைய வேண்டும்’ என ராகுல் காந்தி கூறினார். #MahatmaGandhi #Godse #Rahulgandhi #Congressboothworkers 
    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. #bjp #pollachimolestation #tamilisai
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் என வலைவீசி கொடூரமான முறையில் நடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை ஒரு கும்பல் நிகழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகியுள்ளது. பெண்களை புழுவாக துடிக்க வைத்து வீடியோ எடுத்த இவன்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெறுகிறது.

    இச்சம்பவத்தில் போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே  பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்  “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, பெண்ணினம் கசக்கப்படுவதையும்.. நசுக்கப்படுவதையும்.. துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், சரியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், சிறப்பு புலனாய்வு வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.  #bjp #pollachimolestation #tamilisai
    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் இன்று பாஜகவில் இணைந்தார். #GujaratMLA #PurushottamSawariya #GujaratMLAjoinsBJP
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் இரண்டு பேர் ஏற்கனவே அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில், ஜம்நகர் புறநகர் பகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காங்கிரஸ் பிரமுகர் வல்லப் தராவியா என்பவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம் சமர்ப்பித்தார்.



    இதனால், கடந்த நான்கு நாட்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய புருஷோத்தம் சவாரியா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். #GujaratMLA #PurushottamSawariya #GujaratMLAjoinsBJP
    தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னத்தங்கம் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கணேச பெருமாள், துணைத்தலைவர் ஆனந்தகுமார், தெற்கு மண்டலம் ஷிவன். இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் ஜெயசந்திரன், ஒன்றிய மேலிட பார்வையாளர் இளங்கோவன், கணேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபாகர், சண்முகம், முருகேசன், மாநகர மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரபு, சிவராமன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியேற்றிவைத்து கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியால் உலகின் வலிமை மிக்க நாடாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை- சாமானிய மக்களுக்கும் சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளது. இது பா.ஜ.க.வின் சாதனையாகும்.

    தமிழகத்தில் பெண்களுக்கு முத்ரா வங்கி கடன் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவசமாக கேஸ் வழங்கப்படுகிறது. பெண்களுக்காக பள்ளிகளிலும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் படிக்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் மனநிறைவு கொண்டுள்ளனர். வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்கிட பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும். எனவே பா.ஜ.க. - அ.தி.மு.க.கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி, தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வர்த்தக அணி துணைதலைவர் உமரி சத்தியசீலன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பெருங்குளம் நகர தலைவர் ஜோசியர் சின்னத்துரை, வக்கீல் அணி வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு, மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் முள்ளக்காடு வக்கீல் செல்வக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×