search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புவதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMDK
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தான் வருகிறார். குமரி மாவட்டத்திற்கும் அதுபோல தான் வருகிறார்.

    விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    பாரதிய ஜனதா கூட்டணியை ‘பி’ அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ‘ஏ’ அணி என்றும் கமல்ஹாசன் கூறி உள்ளார். சினிமாவில் தான் ‘ஏ’, ‘யூ’ என்று சான்றிதழ் கொடுப்பார்கள். அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புகிறோம்.

    பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் மனதின் குரல் என்ற தலைப்பில் பேசி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆன பிறகு மீண்டும் நரேந்திர மோடி மனதின் குரல் மூலம் மக்களுடன் ரேடியோவில் பேசுவார்.



    பிரதமர் ரேடியோவில் பேசும்போது மக்களின் கருத்துக்களை கேட்டு உள்ளார். மக்கள் கருத்துக்களை அவரிடம் தெரிவிக்க வசதியாக குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் அதற்காக பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. நாகர் கோவில் வேப்பமூடு சந்திப்பு, வடசேரி சந்திப்பு, ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி, திங்கள்நகர், தக்கலை, புதுக்கடை, குழித்துறை ஆகிய இடங்களில் இந்த பெட்டி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #DMDK
    மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ThambiDurai #ADMK
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அரசு நிலைப்பாளையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்கான திட்டம். இது குறித்து பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மோடி அரசானது விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அடிப்படையில் தான் இது தரப்பட்டிருக்கிறது.

    எந்த திட்டங்கள் ஆனாலும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல திட்டங்களை அறிவிப்பார்கள். அதே போல் இந்த மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. திட்டங்களை குறை சொன்னால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றார்.



    பின்னர் அவரிடம் தமிழக அரசு சார்பில் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:-

    2006 ம் ஆண்டு வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பலரின் பெயர் விடுபட்டிருப்பது உண்மை தான். விடுபட்டவர்களை தான் மீண்டும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதிகாரிகள் ஆய்வு செய்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக ரூ.2000 கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்காகத்தான் மனுக்களை பெற்று வருகின்றோம் என்றார். #ThambiDurai #ADMK
    கொல்கத்தா ஸ்டேடியத்தில் இருந்து இம்ரான் கான் படத்தை நீக்க முடியாது என்று கங்குலி மறுத்துள்ளதால் அவருக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. #BJP #Ganguly #ImranKhan
    கொல்கத்தா:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 40 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் படத்தை மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் நீக்கியது.

    இதேபோல மற்ற மாநில கிரிக்கெட் சங்கங்களும் இம்ரான்கான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படத்தை நீக்கியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிளப் ஹவுசில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா ஆகியோரது படங்கள் உள்ளன. இந்த படங்களை நீக்ககோரி கொல்கத்தா பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனால் இம்ரான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படங்களை நீக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி மறுத்துள்ளார். தனது நிலையில் மாற்றம் இல்லை. இம்ரான்கான் உள்ளிட்டோர் படங்களை நீக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.



    மாநில பா.ஜனதா நிர்வாகி கூறும் போது “இம்ரான்கானின் படத்தை நீக்கும் வரை எங்களது போராட்டம் நீடிக்கும். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் நீக்கியது போலதான் படங்களை நீக்க வேண்டும் என்று கோருகிறோம்“ என்றார்.

    இது தொடர்பாக கங்குலிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கங்குலி மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் ஆதரவாளர் ஆவார்.

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும் துண்டிக்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Ganguly #ImranKhan
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ஜனதா மீண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. #ADMK #Vijayakanth #BJP

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு முதன் முதலில் அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்தனர்.

    அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற சம்மதித்த விஜயகாந்த் முதலில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்களும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க.வுக்கு அதிக இடங்களை ஒதுக்க இயலாத நிலைக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது.

    இதன் காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி உருவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் அடுத்தடுத்து விஜயகாந்தை சந்தித்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க. கூட்டணியிலும் சுமூக நிலை உருவாகவில்லை.

    அ.தி.மு.க.-தி.மு.க. இரு கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்குமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 23 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதியை வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

     


    அதுபோல தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 22 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதிகளை வைத்துக் கொண்டு 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தே.மு.தி.க. குறைந்தபட்சம் 7, அதிகப்பட்சம் 9 என்ற எண்ணிக்கையில் இரு அணிகளிடமும் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

    தே.மு.தி.க. விரும்பும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. இரு கூட்டணியிலும் தொகுதிகள் இல்லை என்பதே எதார்த்தமான நிலையாக உள்ளது. என்றாலும் 5 முதல் 7 தொகுதிகளையாவது பெற்று விட வேண்டும் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் 40 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கும் அறிவிப்பை தே.மு.தி.க. மேலிடம் வெளியிட்டுள்ளது. விருப்ப மனு வாங்கும் கால கட்டத்துக்குள் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிடமும் தொடர்ந்து பேசி எந்த அணியில் சாதகமான நிலை வருகிறதோ அங்கு சேரலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே எந்த கட்சி அதிக தொகுதிகளை தருகிறதோ அங்கு சேர்ந்து விடலாம் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே எந்த கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது தே.மு.தி.க.வின் இலக்காக உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி தி.மு.க.- அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் தே.மு.தி.க.வுக்கு குறைவான தொகுதிகளை கொடுத்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே திட்டமாக உள்ளது. அதற்கேற்ப தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க., தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இதுவரை தே.மு.தி.க. பிடி கொடுக்கவில்லை. இதனால் இழுபறி நீடித்தப்படிதான் உள்ளது.

    இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா தலைவர்கள் தற்போது மும்முரமாகி உள்ளனர். நேற்று சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல் இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், “எப்படியாவது தே.மு.தி.க.வை நமது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுங்கள். இதற்காக மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். விஜயகாந்தை விட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

    தே.மு.தி.க.வை இழுப்பது பற்றி சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி பியூஸ்கோயல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் தே.மு.தி.க.வுடன் மீண்டும் புதியதாக பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என்று பியூஸ்கோயல் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் விஜயகாந்தை திருப்தி செய்து தங்கள் அணிக்குள் கொண்டுவர முடியும் என்று பியூஸ்கோயல் கருதுகிறார்.

    கூடுதல் தொகுதிகளுக்கு தே.மு.தி.க. சம்மதிக்கும் பட்சத்தில் தொகுதி பங்கீட்டை உடனே முடிக்கவும் அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் விரைவில் மீண்டும் சென்னை வர உள்ளார்.

    அவர் தே.மு.தி.க. தலைவர்கள் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை சந்தித்து இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. அதன் பிறகு தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா சமரசம் செய்தாலும் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே பா.ஜனதா புதிய சமரச திட்டத்தை தே.மு.தி.க. ஏற்குமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

    இதுகுறித்து தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகிக்கும். அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பினரிடமும் பேசி வருகிறோம். 5 முதல் 8 தொகுதிகள் கிடைத்தால் கூட்டணி உறுதியாகி விடும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதும் கூட்டணி அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்” என்றார்.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்துக்கு தே.மு.தி.க. எந்த முடிவையும் அறிவிக்காது என்று கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் தே.மு.தி.க.வை சமரசம் செய்து தங்கள் அணியில் சேர வைப்பதற்கு தி.மு.க. மூத்த தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    எனவே தே.மு.தி.க. எந்த கூட்டணி பக்கம் சாயும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. #ADMK #Vijayakanth #BJP

    மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #PMModi #DMK

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக சமூக நீதி மாநாடு நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

    மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ திராவிட இயக்கத்தை விட்டால் வேறு எதுவும் கிடையாது. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கருணாநிதி கூறினார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி மட்டும் அல்ல, காவல் தெய்வங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த 2 கழகங்கள் இருக்கிற வரை எத்தனை காவிகள், மத அமைப்புகள், சாதி அமைப்புகளை கூட்டிக்கொண்டு வந்தாலும் திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

    பெரியாரின் கொள்கைகளுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்ததற்கு தி.மு.க. ஆட்சி தான் காரணம். இந்த மாநாட்டிற்கு சமூக நீதி மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூகத்தில் தலைவிரித்து ஆடும் அநீதிகள், ஆக்கிரமிக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவை தான். சமூக அநீதி என்பது மத்திய அரசின் அநீதியாகவும், மாநில அரசின் அநீதியாகவும் மாறி இருக்கிற இந்த காலக்கட்டத்தில் சமூக நீதியை காக்க மாநாடு மட்டும் அல்ல, அதையும் தாண்டி பல போராட்டங்கள் நடத்த வேண்டிய அவசியத்துக்கு வந்துள்ளோம்.

    ஓட்டு, அரசியல் லாபத்துக்காக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ஓட்டுக்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் டெல்லியில் போராடிய போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 5 மாநில தேர்தலில் தோற்றதால் மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். இது பூச்சி மருந்து வாங்க கூட பத்தாது. தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்குகிறது. தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வளவோ சாதனைகள் செய்யப்பட்டன.

    ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று எந்தவித முன்னறிவிப்பு இன்றி இரவோடு இரவாக அறிவித்து எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு இப்போது ரூ.6 ஆயிரமா?. இது எதை காட்டுகிறது என்றால் திருட்டுத்தனத்தை காட்டுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வரும் வாய்ப்பு கிடையாது, அதற்கான சூழல் இல்லை.

    விரைவில் பாராளுமன்றத்துக்கு வரப்போகிற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரப்போகிறது. அதற்கு தி.மு.க. காரணமாக அமையப்போகிறது. பிரதமர் ராகுல்காந்தி தான் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். அந்த நிலை உருவாக போகிறது.

    பாராளுமன்றத்துக்கு வராத, உச்சநீதிமன்றத்தையே மதிக்காத ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. அதிகாரிகளை பந்தாடுகிற, மாநில அரசுகளை மதிக்காத, முதல்-அமைச்சர்களை மதிக்காத மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடியுடன் சேர்ந்துள்ள அனைவரையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம். மதவாத சக்திகளை தேர்தல், பிரசார களத்தில் முறியடிக்க தி.க. இந்த மாநாட்டை கூட்டி உள்ளது. எனவே இன எதிரிகளை வீழ்த்திட வாரீர். தயாராவீர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்பார்கள். இப்போது விடுதலை சிறுத்தை கட்சியும் சேர்ந்துள்ளதால் மூன்று குழல் துப்பாக்கியாக உள்ளது. இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். சந்தர்ப்பவாத கூட்டணி படுதோல்வி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

    அரசியல் வரலாற்றில் கூட்டணி, தொகுதி பங்கீடு விரைவாக முடிந்தது நமது கூட்டணியில் தான். ஆனால் உலக வரலாற்றில் ஒரே நேரத்தில் 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தியது பா.ம.க. மட்டும் தான். அவர்கள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அருணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் , கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், சமூக நீதிக்கு எதிராக உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #MKStalin #PMModi #DMK

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

    அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.



    அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

    மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
    சென்னை:

    சென்னையில் ஜெ. பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

    சென்னையில் ரூ 79 ஆயிரம் கோடியில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.  

    இன்னும் 3, 4 ஆண்டுகளில் வீடில்லாதவர்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும். வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வர அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ளோம்.

    காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்?  மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தினர் அதிகாரத்தில் வர முயற்சி செய்தவர் கருணாநிதி. திமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப் பதவிக்கு வர முடியும்.


    இங்கு ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசினார் ஸ்டாலின். ராகுல் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் கூறிய கருத்தை ஏற்க முடியாதென சந்திரபாபு நாயுடு கூறிவிட்டார்.

    தொழில்வளம் பெருக காரணம் அதிமுக அரசு தடையில்லா மின்சாரம் அளித்தது தான். உபரிமின்சாரம் தயாரிக்கும் நிலையில் தற்போது தமிழகம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #parliamentelection #admk #edappadipalanisamy
    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்று மே 26-ம் தேதி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் பேசுவேன் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Modiwillbeback #MannKiBaatprogramme #Modiassures
    புதுடெல்லி:

    மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.

    மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக பல சந்தர்ப்பங்களில் மோடி குறிப்பிட்டிருந்தார். 

    இந்நிலையில், இன்று வானொலி மூலம் மோடி பேசிய 53-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், ‘தேர்தல்கள் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாகும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகள், பிரசாரம் ஆகியவற்றில் அடுத்த 2 மாதங்களுக்கு நாங்கள் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது. நானும் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்.

    எனவே, ஆரோக்கியமான ஜனநாயகம் நிலவும் வகையில் (பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மோடியின் வானொலி உரைக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் உங்களை என்னால் சந்திக்க முடியாது.

    உங்களுடைய நல்லாசிகளின் துணையால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் சக்தியுடன் வரும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று (26-ம் தேதி) மீண்டும் பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம்  உங்களுடன் கலந்துரையாடுவேன். இது மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும்’ என தெரிவித்துள்ளார். #Modiwillbeback #MannKiBaatprogramme #Modiassures
    உ.பி.யில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்குள்ள துப்புரவு தொழிலாளிகள் காலை கழுவியதுடன், புனித நீராடி கங்கா ஆரத்தி செய்தார். #KumbhMela #PMModi
    லக்னோ:

    உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

    அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.



    கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு, துப்புரவு தொழிலாளிகளின் காலை கழுவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புனித நீராடிய அவர், கங்கை ஆற்றுக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டார். #KumbhMela #PMModi
    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மன்னிக்க முடியாது என்று திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaram #congress #admk #bjp

    திருப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருப்பூர் ராயபுரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கட்சிகளுக்கு கொள்கை அளவில் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. ஜாதி, மத, மொழி இன வேறுபாடு இல்லாமல் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே இரு கட்சிகளின் கொள்கை. தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கவர்னரிடம் கூறிய பா.ம.க. இன்று அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அப்படியென்றால் அது ஊழல் கூட்டணி தான் என்று சொல்ல வேண்டும்.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணி அமைத்ததை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழகத்தில் மதவாதம் காலூன்ற எப்போதும் பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜனதா தமிழகத்தில் காலூன்றவும் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடிக்கு முதல்முறை வாக்களித்தவர்கள் நாடு முழுவதும் வெகுண்டெழுந்து உள்ளனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பா.ஜனதா அரசு சொல்லி வாக்கு கேட்டது. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கப்போகிறேன் என்று சொன்ன மோடி இன்று) விவசாய குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கப்போகிறார். விவசாய குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரத்தில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகிறார்.


    இது ஓட்டுக்காக கொடுக்கிற லஞ்சம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த பணத்தை 12 கோடி இந்திய விவசாயிகளுக்கு கொடுக்கப்போகிறார். ஆனால் இந்த பணம் நிலம் வைத்துள்ள பெரும் விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் கிடைக்கப்போகிறது. விவசாய தொழிலாளர்களுக்கு, நகர்ப்புற ஏழைக்கு கிடைக்கப்போவது இல்லை. ரபேல் போர் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

    இந்த அரசுக்கு அமைச்சர், அமைச்சரவை தேவையில்லை. தனி மனிதர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.நேரு, இந்திரா காந்தி, மொராஜ் தேசாய், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் அலங்கரித்த நாற்காலியில் சர்வாதிகாரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். நாடு சர்வாதிகார நாடாகி வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அதே இந்திய விவசாயி ஒருவருக்கு கடன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாக உள்ளது. அந்த கடனை விவசாயி எப்படி அடைக்க முடியும். அதனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் ரத்து என்பது விவசாயியை காப்பாற்றும் வேலை. அதைத்தான் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. உணவு பாதுகாப்பு சட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது, பட்டினியை ஒழித்தது காங்கிரஸ் அரசு.

    இந்தியாவில் இன்னும் வறுமை ஒழியவில்லை. அதை ஒழிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கல்விக்கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு. 34 கோடி பேருக்கு ‘ஜீரோ பேலன்ஸ்’ வங்கிக்கணக்கு தொடங்கிய அரசு காங்கிரஸ் அரசு. இப்போது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஜீரோ பேலன்ஸ்’ முறை மீண்டும் வரும். பறிமுதல் செய்த பணத்தை திருப்பி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.ஜனநாயக திருவிழாவாக தேர்தல் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #pchidambaram #congress #admk #bjp

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். #Karunas #dinakaran #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.

    ஏற்கனவே நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் குறித்து கலந்தாலோசனை செய்து அதன் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும்.

    பதவி என்பது மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயாராக உள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை பெற்று எம். எல்.ஏ.வாக வருவேன்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார். அது அ.தி.மு.க.விற்கு பாதகமாக அமையும்.


    கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் தனித்து நிற்க வேண்டியது தானே.

    இதேபோன்று கடந்த மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அவர்கள் தற்போது அ.தி. மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி மற்றும் மர்மம் என்ன?

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பதில் மத்திய மாநில அரசுகள் அரசியல் செய்து வருகிறது. உடனடியாக விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம் மத்திய, மாநில அரசுக்கு தகுந்த பதில் அளிப்பார்கள்

    அனைத்து அரசியல் கட்சிகளும் தினகரனின் வளர்ச்சியை பொறுக்காமல் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அவர் மேலும் பலம் பெற்று தான் வருகிறார். அவரை பா.ஜ.க. திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.

    நான் தமிழன் என்று சொல்வதில் அது மட்டுமே தகுதியாக இருக்கிறது என்று கமல் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்று கூறுவது தான் தகுதி என்றார். #Karunas #dinakaran #admk

    நாட்டில் உள்ள 15 ஆயிரம் பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மோடி கலந்துரையாடும் பிரமாண்ட நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. #Modivideoconference #largestvideoconference #AmitShah
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் வழியாக கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    இதில் அடுத்தகட்டமாக நாட்டில் உள்ள 15 ஆயிரம் பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கோடி  பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நலவிரும்பிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் பிரமாண்ட நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.



    டெல்லியில் இருந்தவாறு இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பவர்கள் ‘நமோ ஆப்’பில் உள்ள #MeraBoothSabseMazboot என்ற இணைப்பின் மூலம் பிரதமரை தொடர்புகொண்டு கலந்துரையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 28-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சி உலகளாவிய அளவில் மிகப்பெரிய வீடியோ கான்பிரன்சிங் என்ற சாதனையை ஏற்படுத்தும் என பாஜக தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Modivideoconference  #largestvideoconference #AmitShah
    ×