search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack
    ராஜமுந்திரி :

    கா‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.

    இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும் இணைத்து காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதைப்போல புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றவில்லை என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கூறியிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்‌ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    நாட்டின் முதல் பிரதமரான நேருவே கா‌ஷ்மீர் பிரச்சினைக்கு காரணம். கா‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஐதராபாத் விவகாரத்தை சர்தார் படேல் கவனித்ததால், அது இன்று நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவரே நாட்டின் முதல் பிரதமராகி இருந்தால், கா‌ஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது.

    நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களுக்காகவும் பிரதமர் மோடி நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் அவரது நோக்கம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமரை நம்பும் நீங்கள், உங்கள் பிரதமரை நம்பவில்லை. மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

    புல்வாமா சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடனும், உயிரிழந்த வீரர்களுடனும் இருக்கிறது.

    இவ்வாறு அமித்‌ஷா கூறினார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack
    அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இழுபறி முடிவுக்கு வருமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் அல்லது ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் இன்னும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #bjp #admk #dmdk #parliamentelection

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதீய ஜனதா இடையே ஏற்பட்ட கூட்டணி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சியினரும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் உள்ளனர்.

    அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன். நாட்டின் நலன் கருதி விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்.


    அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை நான் கூட்டணியாகவே பார்க்கிறேன்.

    தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். இது பற்றி கட்சியின் தலைமை பேசி முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி வர இருக்கிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைக்கவுள்ளார்.

    இதையடுத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வதிபுரம் மேம்பாலத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். #ponradhakrishnan #bjp #admk #dmdk #parliamentelection

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை (22-ந்தேதி) ராமநாதபுரம் வருகிறார். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கின்றார். #AmitShah #parliamentelection #bjp

    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை (22-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டம் வருகிறார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடக்கிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    அமித்ஷா பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நட்டா, பியுஸ் கோயல், பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பகல் 11 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஹெலிபேட் திடலுக்கு வரும் அமித்ஷா அங்கிருந்து காரில் விழா திடலுக்கு செல்கிறார்.


    கூட்ட ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பார்வையிட்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    மாநில துணைத் தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், செயலாளர் ஆத்மா கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #AmitShah #parliamentelection #bjp

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்பட்டத்தால் 7 தமிழர்களை விடுவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்து உத்தரவு பிறப்பிக்காமல், ஆளுநர் தொடர்ந்து கெட்டியான அமைதி காப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 161-வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ், மாநில அரசு இந்த 7 பேரையும் முன்விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதால், அதை தமிழக ஆளுநர் எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.

    ஆனால் ஒரு அமைச்சரவை தீர்மானத்தை இத்தனை மாதங்களாக ஆளுநர் நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டு இருப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை; மத்திய பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநருக்கு அறிவுறுத்தவும் கோரவில்லை.

    தற்போது பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் முதலமைச்சர், 7 தமிழர்களின் விடுதலை, நீட் தேர்வு மசோதாக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடுவது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிபந்தனை வைத்திருக்கலாம்.

    ஆனால் அப்படியெல்லாம் நிபந்தனை வைத்திருக்கிறாரா என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வோருடன் கூட்டணி என்று தொடக்கத்திலிருந்து அறிவித்து, மாநில உரிமைகளை நசுக்கி, தமிழக மக்களை நாசப்படுத்தும் திட்டங்களை வேண்டுமென்றே திணித்த பா.ஜ.க.வுடன் இப்போது தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் முதல்-அமைச்சர், ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தாவது முதலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர் பார்க்கிறார்கள்.

    எனவே, இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சரவை தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு, பல்லாண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதுக்கட்சியை தொடங்கிய அவர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசிவரும் தினகரன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

    தமிழக நலனில் அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு என்றும், துரோக ஆட்சி நடைபெறுகிறது என்றும் தினகரன் தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் களத்திலும் இதனையே பலமான கோ‌ஷமாக எழுப்ப தினகரன் திட்டமிட்டுள்ளார்.



    கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மோடி அரசுக்கு எதிராகவே பிரசாரம் செய்தார். மோடியா? இந்த லேடியா? என்றே சவால் விட்டார்.

    இந்த தேர்தலில் அதே பாணியை பின்பற்றி பிரசாரத்தில் ஈடுபட தினகரன் திட்டமிட்டுள்ளார். 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண முடிவு செய்துள்ள தினகரன் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தன்பக்கமே இருப்பதாக கூறிக்கொள்ளும் தினகரன், அது நிச்சயம் தனக்கு ஆதரவான ஓட்டுகளாக மாறும் என்றே கணித்துள்ளார்.

    அதே நேரத்தில் மேகதாது, முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவித்து விட்டதாகவே பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் கையில் எடுத்து தினகரன் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை தோற்கடித்து வெற்றி பெற்ற தினகரன் அதன் பின்னர் அரசியல் களத்தில் பேசப்படும் நபராகவே மாறினார்.

    எனவே பாராளுமன்ற தேர்தல் களத்திலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 அணிகளுக்கும் தினகரன் சவாலாக இருப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
    முதல் மந்திரி பதவியை சுழற்சி முறையில் ஆள வேண்டும் இல்லையென்றால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவோம் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. #RamdasKadam #ShivSena #BJP
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே பல்வேறு வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் பா.ஜனதாவின் திட்டங்களை சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தது.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாரதிய ஜனதா 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்துள்ளன.



    கடந்த திங்கட்கிழமை இதற்கான உடன்படிக்கையில் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கையெழுத்திட்டனர். ஆனால் மறுநாளே இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் உருவானது.

    சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “கடந்த 25 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கூட்டணி கொள்கையை நிராகரித்து விட்டேன். இனிவரும் தேர்தல்களில் பா.ஜனதா, சிவசேனா இரு கட்சிகளும் சரிசமான இடத்தில் போட்டியிட வேண்டும். அனைத்துப் பதவிகளையும் இரு கட்சிகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் வகிக்க வேண்டும் என்றேன். எனது இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகே கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது” என்றார்.

    சிவசேனாவின் இந்த கருத்தை பா.ஜனதா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்தார். அவர் கூறுகையில், “எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர் முதல்- மந்திரி பதவியைப் பெறுவார்” என்றார்.

    இது சிவசேனா தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிவசேனா அமைச்சர் ராம்தாஸ்காதம் கூறியதாவது:-

    ராம்தாஸ்காதம்

    மராட்டியத்தில் பா.ஜனதாவும், சிவசேனாவும் இரண்டு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஒப்பந்தம் செய்துள்ளன. கொங்கன பகுதியில் மேற்கொள்ள உள்ள நனார் சுத்திகரிப்பு திட்டத்தை கைவிட வேண்டும். முதல்- மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் என்ற முறையில் சுழற்சி முறையில் ஆள வேண்டும்.

    இந்த இரு திட்டங்களையும் பா.ஜனதா மீறினால் அதன் கூட்டணியில் இருந்து சிவசேனா உடனே விலகும். தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணியை முறித்து விடுவோம்.

    இவ்வாறு சிவசேனா மந்திரி ராம்தாஸ் காதம் கூறினார்.

    இதனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #RamdasKadam #ShivSena #BJP
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் 26-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ParliamentElection
    கவுகாத்தி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை வலுவான கூட்டணி அமையவில்லை. இதை பயன்படுத்தி வட கிழக்கு மாநிலங்களில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார்.

    வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 14 எம்.பி. தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்திருந்தது.

    இந்த தடவை 6 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று ராகுல் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதை கருத்தில் கொண்டு ராகுல் அடுத்த வாரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.

    அசாம் மாநிலத்தில் அவர் 26-ந்தேதி பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.



    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு வடமாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்ய ராகுல் முடிவு செய்துள்ளார்.

    ஆனால் ராகுல் பிரசாரத்தை முறியடிக்க ஏற்கனவே பா.ஜனதா வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கி விட்டது. பிரதமர் மோடி ஏற்கனவே அசாமில் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமித்ஷாவும் வடகிழக்கு மாநிலங்களில் பல தடவை பிரசாரம் செய்து முடித்துள்ளார். #Congress #RahulGandhi #ParliamentElection
    வலுவான கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்து வரும் நிலையில் நாளை அமித் ஷா கேரளா வருகிறார். #BJP #Amitshah
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாநிலங்களில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மராட்டியத்தில் சிவசேனையுடன் உடன்பாடு கண்ட பாரதிய ஜனதா, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    இது போல கேரளாவிலும் வலுவான கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ள நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அடிக்கடி கேரளா சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அமித்ஷா நாளை மீண்டும் கேரளா வருகிறார். பாலக்காட்டில் நடக்கும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் ஆலோசனை நடத்துகிறார்.



    சபரிமலை விவகாரத்தில் பாரதிய ஜனதா பக்தர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதன் மூலம் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று கணக்கு போட்டது.

    ஆனால் சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதுகுறித்தும் நாளைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. #BJP #Amitshah
    முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இ.பி.எஸ். தரப்பிடம் கூட்டணி அமைத்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP #PMK
    சேலம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    சூரமங்கலம் பகுதியில் மக்களிடையே அவர் பேசியதாவது:-

    தமிழகம் மீண்டும் தலை நிமிரவும், தமிழர் வாழ்வு மலரவும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில் அற்புதமான கூட்டணி உருவானதை பார்த்திருப்பீர்கள். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

    தமிழக மக்கள் விரும்பாத கட்சிகள், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஊழல் ஆட்சி, இந்த ஆட்சி மீது சி.பி.ஐ. விசாரணை தேவை என்று ஓரிரு வாரங்களுக்கு முன்பாக மனு கொடுத்த கட்சி போன்ற கட்சிகள் இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு ஒன்றாக கிணற்றில் குதிப்பது போன்ற அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்கள்.

    தமிழக மக்கள் என்றைக்கு இந்த ஆட்சி முடியும் என்று காத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக தேர்தல் வர இருக்கிறது. நீங்கள் அளிக்கும் உங்களின் ஒவ்வொரு வாக்கின் மூலம் தமிழகத்திற்கு விரோதமான கூட்டணிக்கு முடிவு கட்ட வாய்ப்பு வந்திருக்கிறது.

    ஒரு கூட்டணி பண மூட்டையோடு வரும். மற்றொரு கூட்டணி கட்சியின் பலத்தைக் காட்டுகிறேன் என்று வரும். அவர்கள் ஆண்ட கட்சி, மத்தியில் 16 வருடங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து உங்களின் வாக்குகளை வீணடிக்காமல், தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்திட, தமிழகம் தலைநிமிர்ந்திட, தன்னிறைவு பெற்றிடும் மாநிலமாக திகழ்ந்திட குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த கூடாது, தமிழக விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா.

    ஆனால் அவரது பெயரை சொல்லிக் கொண்டு தற்போது ஆட்சி புரிந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் காலில் விழுந்து ஏவல் அரசாக மாறி விட்டது.



    ஏற்றி விட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தனது பக்கம் இழுத்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அவர் ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக அல்ல. இதனை சேலம் மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இரட்டை இலை சின்னம் தற்போது துரோகிகளின் கையில் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொண்டு வரும். தமிழர் வாழ்வு மலர நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இ.பி.எஸ். தரப்பிடம் கூட்டணி அமைத்துள்ளன. வரப்போகின்ற தேர்தலுடன் முடியப் போகிற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இடுப்பில் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு எல்லோரும் கிணற்றுக்குள் குதிப்பதுபோல கூட்டணி அமைத்துள்ளனர். அந்த கூட்டணிக்கு பலரையும் அழைக்கிறார்கள். அந்த கூட்டணிதான் எங்களுக்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.

    தே.மு.தி.க. எங்களுடன் கூட்டணிக்கு பேசவில்லை. நாங்களும் அவர்களுடன் பேசவில்லை. வைகோ வயதில் பெரியவர். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அதனால் அவரைப்பற்றி பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

    எங்களுக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும்.

    கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் மனோஜ் முன்ஜாமீனை ரத்து செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதில் இருந்தே அவர் மடியில் கனம் உள்ளது தெளிவாகிறது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். உண்மை எல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP #PMK
    பிரதமர் மோடியின் தலைமையுடன் ராகுல் காந்தியையோ, பிரியங்காவையோ ஒப்பிட முடியாது என சிவசேனா கூறுகிறது. #ShivSena #PMModi
    மும்பை :

    மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதிலும் எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி, பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சிவசேனா வசைபாடி வந்தது. பா.ஜனதாவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று சிவசேனா தலைவர் அறிவித்தார்.

    ஆனால் திடீர் திருப்பமாக கடந்த திங்கட்கிழமை பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி, மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கும் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கூட்டணி உருவான நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு பிரதமர் மோடியை சிவசேனா கட்சி புகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் அதிக கேள்விகள் எழுந்து இருக்கின்றன. எங்கள் கூட்டணியால் பூச்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் நசுக்கப்படும்.



    2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல்காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. பிரியங்காவும் உதவியாக இருக்கிறார். ஆனால், இருவரையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்? ராமர் கோவில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரப்படுமா? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மராட்டியத்தின் நலனுக்காகவே கூட்டணி முடிவை சிவசேனா எடுத்து உள்ளது.

    சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பீகார் முதல்-மந்திரி நிதி‌ஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும்கூட, அதையெல்லாம் மறந்து அவர் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முடியும், காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முடியும் என்கிறபோது, சிவசேனா எப்போதும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கமாக இருக்கும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பலையும், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அலையின் அடிப்படையில் போட்டி இருக்காது. ஆனால் கொள்கைகள், வளர்ச்சிப்பணிகள், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ShivSena #PMModi
    அதிமுக- பாமக இணைந்தாலும் திமுகவை தோற்கடிக்க யாராலும் முடியாது என முக ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
    சென்னை :

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்திலும், பின்னர் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பேசிய தாவது:-

    ஊராட்சி சபை கூட்டம் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க பயன்பட போகிறது. இது கட்சிக்காக நடத்தக்கூடிய கூட்டம் அல்ல.

    உங்கள் பிரச்சினைகளை எல்லாம் நானே மாவட்ட கலெக்டரிடம் பேசி, என்னென்ன பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என்று செய்யச்சொல்லி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி வந்ததற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் இப்பிரச்சினைகள் எல்லாம் இருந்திருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போகிறோம்.

    அ.தி.மு.க.வுடன் பா.ம.க., பா.ஜனதா கூட்டணி சேர்ந்திருக்கிறது. பா.ஜனதாவுடன் சேரக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்னது ஜெயலலிதா. நீட் தேர்வு கொண்டு வந்த பா.ஜனதாவுக்கு பக்கபலமாக ஊழல் அ.தி.மு.க. சேர்ந்து உள்ளது.

    பா.ஜனதா தனியாக நின்றால் ஜெயிக்க முடியாது என்பது அ.தி.மு.க.வுக்கு தெரியும். வாங்குகிற ஓட்டுகூட பா.ஜனதாவுடன் சேர்ந்தால் கிடைக்காது என்று நன்றாக தெரியும். தெரிந்தும் சேர காரணம் பயம். மிரட்டி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது.

    கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த ஆட்சியை பற்றி அ.தி.மு.க. என்ற ‘கழகத்தின் கதை’ என்று சொல்லி, அ.தி.மு.க.வினர் அடித்து கொண்டிருக்கிற கொள்ளை, ஊழல்களை புத்தகமாகவே வெளியிட்டு இருக்கிறார்கள்.

    உயிரே போனாலும் அ.தி.மு.க.வுடன் சேர மாட்டோம். திராவிட இயக்கங்களின் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம் என்று சொன்னவர்கள் பா.ம.க. தலைவர் மற்றும் அந்த கட்சியில் இருப்பவர்கள். ஆனால், இன்றைக்கு சேர்ந்திருக்கின்றார்கள் என்றால் ஏதோ ஒரு ஆசை தான் காரணம். என்ன தான் கூட்டணி வைத்தாலும், தி.மு.க.வை தோற்கடிக்க யாராலும் முடியாது.

    ஜெயலலிதா இருந்தபோது பா.ஜனதா, பா.ம.க.வுடன் சேரவில்லை. பா.ம.க.வை ஒழிப்பது தான் முதல் வேலை என்றார் ஜெயலலிதா. அதேபோல் ஜெயலலிதாவை ஒழிப்பது தான் எங்கள் முதல் வேலை என்று டாக்டர் ராமதாஸ் சொன்னார். ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியோடு இவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களோடு கூட்டணி வைத்து இன்றைக்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    மோடி அரசு இப்போது திடீரென விவசாயிகளுக்கு 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் கொடுக்க போவதாக அறிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுகிற பொய். ஆகவே இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK
    ×