search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை பெண்ணுக்கும் எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #HIVBlood
    பூந்தமல்லி:

    மாங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் வியாபாரியின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

    4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

    இதையடுத்து அந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் 2 யுனிட் ரத்தம் ஏற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலேயே மாதம் தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்திருக்கிறார்.



    8-வது மாதம் மருத்துவ பரிசோதனை செய்த போது எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

    9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி குழந்தை பெற்று இருக்கிறார்.

    எச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் எச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்.

    ஆனால் அது பற்றி யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.

    இந்த புகார் குறித்து எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு தலைவர் செந்தில்ராஜிடம் கேட்ட போது, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் தவறான தகவல் என்று தெரிவித்தார் என்று கூறினார். #HIVBlood
    சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் அம்பலமாகி வருகிறது.#HIVBlood #PregnantWoman
    விருதுநகர்:

    ரத்த தானம் செய்த கமுதியைச் சேர்ந்த வாலிபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது 2016-ம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவரை உரிய முறையில் மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அறிவுறுத்தவில்லை என்று தெரிய வந்து உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக அந்த வாலிபரும் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியாமலேயே இருந்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் அவர் வேறு எப்போதாவது ரத்த தானம் செய்தாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய தகவல்களை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்ய இயலவில்லை.

    அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக ரத்த பரிசோதனை செய்த போது தான் அவருக்கே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் ரத்தம் பரிசோதனை செய்த ரத்த வங்கி ஊழியர்களுக்கு முன்பே இதுபற்றி தெரிந்து இருந்தும் அலட்சியமாக நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தவிர சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளும் ரத்தம் செலுத்தும் வி‌ஷயத்தில் சற்று கவன குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. உண்மையில் முதல் தவறு எங்கு நடந்தது என்பதை அறிய தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது.



    மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். மாதவி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் மருத்துவ துறையைச் சேர்ந்த மேலும் 5பேர் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஓரிரு நாட்களில் இந்த குழு விசாரணையை முடித்து விடும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு அந்த குழு பரிந்துரை செய்வதற்கு ஏற்ப தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    அமைச்சர் மீது புகார் கூறிய தாய் மற்றும் மகள் மீது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம்:

    பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தத்தை செலுத்திய விவகாரம் தொடர்பாக டாக்டர், நர்சு உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் சாத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதில், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று பணியில் இருந்த சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 269 (கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் செயல்படுத்தல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    போடி ஆர்.ஐ.ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் சிவபாலன்(வயது39). இவரது மனைவி கலைவாணி(31). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 15 பவுன்நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. 5 வயது குழந்தை உள்ளது.

    சிவபாலன் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய சிவபாலன் கலைவாணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார். கலைவாணியின் நகைகளை பறித்துக்கொண்டு மேலும் ரூ.5 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் எனக்கூறி அவரை தாய்வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைவாணி போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய சிவபாலன், அவரது சகோதரன் சிவராமகாசி, மற்றும் உறவினர்கள் ஜெயகீதா, ஜெயலட்சுமி, மாலா, பாஸ்கரன் ஆகிய 6 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மத்திய உளவுத்துறையை சேர்ந்த 10 அமைப்புகள் தனிநபர்களின் கணினி, கைபேசிகளை உளவுபார்க்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. #PILinSC #govtmove #interceptcomputer
    புதுடெல்லி:

    மத்திய உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைபொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது.

    மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை அடிப்படையான தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள், சிந்தனையாளர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உளவுபார்க்கும் ஆளும்கட்சியின் இந்த சர்வாதிகார நடவடிக்கை நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பிப்பதற்கு ஒப்பான ஜனநாயக படுகொலையாகும்.

    எனவே, இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்துக்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் தனிநபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் விசாரணை அமைப்புகள் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #PILinSC #govtmove #interceptcomputer
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர் கடலில் தவறி விழுந்தார். அவரை கடலுக்குள் தள்ளி விட்டதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #Fishermen #Srilankanavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்ககூடாது என மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகில் சோதனை செய்வதாக கூறி ஏறினர்.

    அப்படி ஏறும்போது கடற்படை வீரர் ஒருவர் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடலில் விழுந்த வீரரை, இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடினர்.

    ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்த சம்பவத்தால், மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு, மீனவர்கள் மாலையிலேயே ராமேசுவரம் துறைமுகம் திரும்பி விட்டனர்.

    அவர்கள் கூறுகையில், கடற்படை வீரர் கடலில் விழுந்ததால் இலங்கை கடற்படையினர் ஆத்திரம் அடைந்தனர். கச்சத்தீவு தலைமன்னார் உள்ளிட்ட கடல் பகுதிகளை வலம் வந்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, எங்களை (மீனவர்களை) விரட்டியடித்தனர்.

    இதனால் உயிர் பயத்தில் நாங்கள், பாதியிலேயே மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பி விட்டோம். இதுவரை கடலில் விழுந்த கடற்படை வீரரை மீட்டதாக தெரியவில்லை.

    எனவே இலங்கை கடற்படையினர் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள். நாங்கள் அடுத்தமுறை மீன் பிடிக்கச் செல்லும்போது எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்களோ? என்ற அச்சம் உள்ளது. மத்திய மாநில பாதுகாப்புத் துறையினர், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையில் இலங்கை கடற்படையில் இருந்து இந்திய கடற்படைக்கும், மீன்வளத்துறையினருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அதில் கச்சத்தீவு அருகே டி.என்.10 எம்.எம்.364 என்ற பதிவு எண் கொண்ட தமிழக விசைப்படகு நேற்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அந்த படகில் 7 மீனவர்கள் இருந்தனர். அவர்கள், படகிற்குள் சோதனைக்கு சென்ற எங்கள் வீரரை (இலங்கை கடற்படை வீரர்) கடலுக்குள் தள்ளி விட்டனர். இது குறித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு மீனவர்கள் விரட்டியடிப்பு, கடலில் விழுந்த வீரரை தேடும் பணி போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #Fishermen #Srilankanavy

    மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது கொடுத்து ரூ.1கோடி மோசடி செய்த அரியலூர் மின்வாரிய பெண் அதிகாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய் மேற்பார்வையாளராக சோபனா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சோபனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

    இதனிடையே 5 பேர்கள் கொண்ட மின்வாரிய தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில் 2013 முதல் 2018 வரை சோபனா வேலை பார்த்த காலங்களில் பஞ்சாயத்துகளில் மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது வழங்கி சுமார் ரூ.1கோடி வரையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோபனா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் இது குறித்து வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து தரும்படி மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் மற்றும் மீனவர்கள் வியாபாரம் செய்வதற்கான மாற்று இடம் வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அப்போது, மெரினாவில் கடை நடத்துபவர்கள் சங்கம் சார்பாக முறையிடப்பட்டது. அதில், மெரினாவை ஒழுங்குமுறை படுத்துகிறோம், தூய்மை படுத்துகிறோம் என்றும் எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. இதேபோன்று, மீனவர்கள் தரப்பில் தங்களை கட்டாயப்படுத்தி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மெரினா கடற்கரையில் இருந்து கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிகர்கள் முறைப்படி மனுதாக்கல் செய்தால், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். விசாரணையை வருகிற ஜனவரி 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #ChennaiHighCourt
    நாகர்கோவில் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் அதிகாரியின் தாய் பலியானார். இது குறித்து லாரி டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்தவர் திரவியம்(வயது74). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி விஜயலெட்சுமி(66).

    இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கோபால். இவர் சென்னையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். நேற்று திரவியம் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

    ராணித்தோட்டம் போக்குவரத்து பனிமனை முன்பு வந்த போது அவருக்கு முன்னாள் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் நிலை தடுமாறி திரவியம் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் விஜயலெட்சுமி சிக்கிக் கொண்டார்.

    இதில் விஜயலெட்சுமி மீது லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் இறந்தார். திரவியம் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான விஜயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது சுங்கான்கடை களியங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மதுரை திருநகரில் காதலிக்க மறுத்த வாலிபரை தாக்கியதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை திருநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனக்கன்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஒருதலையாக காதலித்தார்.

    இதனை ஏற்க மறுத்த நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறுநிறுவனத்தில் சேர்ந்தேன்.

    இந்த நிலையில் அந்த பெண் தனது சகோதரி அவரது கணவரோடு வீடு புகுந்து தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து திருநகர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நத்தி வருகின்றனர். #tamilnews
    யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு தனபால் வழக்கு விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜ் நேற்று வழக்கு விசாரணைக்காக நாமக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×