search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94595"

    விவசாயி பேரில் கடன் மோசடி செய்த புகாரில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மீது உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மேலூர்:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் கடன் பெற்று வருகின்றனர்.

    குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்ற விவசாயி வங்கியில் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகு, தான் கடன் எதுவும் பெறவில்லை என தெரிவித்தார். மேலும் தனது பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    அதன் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தினார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ராமசாமி, உறுப்பினர் சின்னகண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    திருமங்கலம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில், கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் செல்வி (வயது 22) பி.இ. பட்டதாரி.

    இவருக்கும், பக்கத்து ஊரான கல்லணைபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி மகன் மாரிச்செல்வம் (25) என்ற பட்டதாரி வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிச்செல்வத்தின் வீட்டு முன்பு அமர்ந்து செல்வி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    காதலன் மாரிச்செல்வம் திருமணத்திற்கு மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்வி தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் கொடுத்துள்ளார்.

    அதில், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதோடு, தான் அதற்கு உடன்படாததால் திருமணம் செய்ய மாரிச்செல்வம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் காதலன் வீட்டு முன்பு தர்ணா நடத்தியபோது மாரிச்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாரிச்செல்வம், அவரது தந்தை மலையாளி, தாயார் கருப்பசாமி, சகோதரர்கள் பகவதி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் மாரிச்செல்வம் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் பகவதி 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராகவும், கார்த்திக் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    திருமங்கலம் அருகே வியாபாரியிடம் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில், விளைபொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டப்பட்ட குடோன் உள்ளது. இதனை கோர்வை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் மதுரையைச் சேர்ந்த பாரதி (41) என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுண்டல் உள்ளிட்ட பல தானியங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் நாட்டில் இருந்து கண்டெய்னர்களில் வரவழைக்கப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரத்து 50 கிலோ கருப்பு சுண்டல், 80 ஆயிரத்து 130 கிலோ வெள்ளை சுண்டல் போன்றவை குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் ரெங்கராஜ் புகார் மனு அளித்துள்ளார். அதில், பங்குதாரர் பாரதி, அவரது நண்பர்கள் விருதுநகரைச் சேர்ந்த பிரேம்குமார், மரிய பாஸ்கர், கற்பகராஜ், புதுக்கோட்டை தமிழரசன், முதுகுளத்தூர் ஜெயச்சந்திரன், சென்னை கொடித்தோப்பு குணசேகர் ஆகியோர் சென்னை அக்ரோ நிறுவனம் பெயரில் குடோனில் இருந்த ரூ.2 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரத்து 400 மதிப்பிலான சுண்டலை கொள்முதல் செய்தனர்.

    இதற்காக ரூ.17 லட்சம் முன் பணம் கொடுத்த அவர்கள், மீதிப்பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர்.

    பலமுறை கேட்டும் 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

    புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமுருகன்காந்தி மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பூக்கடை போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். #ThirumuruganGandhi
    சென்னை:

    மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெனிவாவில் நடந்த மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனை தொடர்ந்து தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் திருமுருகன் காந்தி மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னர் திருமுருகன்காந்தி மீது தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.



    இந்த நிலையில் பூக்கடை போலீசார் அவர் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமுருகன்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் டிசம்பர் 5-ந்தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருமுருகன்காந்தி மீது இதுவரையில் 16 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #ThirumuruganGandhi
    எடப்பாடி அருகே கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி:

    எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சப்பானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 35). இவர் எடப்பாடி வருவாய் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அண்ணாமலை (42) டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கிராம நிர்வாக அலுவலர் என்ற முறையில் சுகுணா அலுவலக வேலையாகவும், ஆய்வு பணிக்காகவும் பல இடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

    இது கணவர் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே பலமுறை மனவருத்தமும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அண்ணாமலை பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் சுகுணா தனக்கு சாப்பாடு கொடுத்தார். அந்த சாப்பாட்டினை சாப்பிட்டபின், தான் மயக்கமடைந்து கட்டிலில் சாய்ததாகவும், தொடர்ந்து தன்னை கட்டிப்போட்ட சுகுணா தலையணையால் அழுத்தி, ஊசியால் குத்த முயன்றதாகவும், அப்போது அவரிடமிருந்து உயிர் தப்பி வந்ததாகவும் கூறியிருந்தார். எனவே மனைவி மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றும்படி கூறியிருந்தார்.

    அதன்பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு கிராம நிர்வாக அலுவலர் சுகுணாவிடம் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    இந்தோனேசியா நாட்டில் 189 உயிர்களை பறித்த லயன் ஏர் விமான விபத்தில் உயிரிழந்த வாலிபரின் தந்தை போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். #Indonesiajetcrash #LionAirplanecrash
    நியூயார்க்:

    இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து 189 பேருடன் கடந்த மாதம் 29-ம் தேதி புறப்பட்டு சென்ற லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 20 நிமிடங்களில் சுமத்ரா தீவின் அருகே ஜாவா கடல் பகுதியில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் பலியானவர்களில் ஒருவர் ரியோ நன்டா பிராட்டாமா(26) விரைவில் மணக்கோலம் காண இருந்த  ரியோ இறந்துபோன தகவல் அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மணப்பெண் வெளியிட்ட சில புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பலரை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்த பயணத்தின்போது நான் திரும்பி வராவிட்டாலும் உனது திருமண உடையுடன் எடுக்க இருந்த ‘போட்டோ ஷூட்’-டை தவற விட்டு விடாதே என தனது வருங்கால கணவர் ரியோ குறிப்பிட்டிருந்ததாக இன்ட்டா சியாரி(26) என்னும் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், போயிங் 737 ரகத்தை சேர்ந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய தொழிநுட்ப பிரச்சனையை சரிசெய்ய போயிங் நிறுவனம் அக்கறை காட்டாததால் இந்த விபத்து நேர்ந்ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த ரக விமானங்களின் என்ஜின்கள் மற்ற விமானங்களில் உள்ள என்ஜின்களைவிட எடை அதிகமாக உள்ளதால் வானத்தில் உயர கிளம்பி விமானத்தை நிலைநிறுத்தும்போது சமநிலை இல்லாத தடுமாற்றத்தால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில், இந்தோனேசியா விபத்தில் 189 உயிர்கள் பலியானதற்கு போயிங் நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் காரணம் என ரியோவின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

    போயிங் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Indonesiajetcrash #LionAirplanecrash  #LionAirplanecrash 
    பெரம்பலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோளும் விடுத்திருந்தது.

    தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் சார்பில் இதுதொடர்பாக கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பெரம்பலூர் கணபதி நகரில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி மதியம் பட்டாசு வெடித்ததாக, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 35), சங்கர்(22) ஆகிய 2 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியும், தமிழக அரசு பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பட்டாசு வெடித்ததாகவும் பாடாலூர், அரும்பாவூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 2 பேர் மீதும், மங்களமேடு, வி.கைகாட்டி, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவையில் அரசு பள்ளி ஆசிரியரை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    கோவை:

    மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி.

    இவருக்கு சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலமாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.

    அப்போது நான் குரூப்-2 தேர்வு எழுத உள்ளேன், அதற்கு பணம் தேவைப்படுகிறது என ராஜ பிரவீன் கேட்டுள்ளார்.அதற்கு ஆசிரியை நான் உனக்கு உதவி செய்கிறேன் என கூறினார்.

    இதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார். எனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருவள்ளூரில் புதிய டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை உடைத்து 2 ஊழியர்களை தாக்கியது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடங்கியது.

    இதற்கு பெரியகுப்பம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாவர் என கூறினார்கள்.

    இதனால் இந்த கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று இந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கபட்டது.

    இதையடுத்து பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிலர் கடைக்கு சென்று விற்பனையாளர்கள் ஆனந்த், பாபு ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். வேலை செய்யவிடாமல் தடுத்து கடையில் இருந்த மதுபான பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். #MinisterKCVeeramani
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தோம். 2010-ம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கினர். அந்த நிலத்தை ரூ.225 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர். அந்த நிலத்தை மேம்படுத்தியதற்காக ரூ.65 கோடி எங்களுக்கு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    ஆனால், பேசியபடி அந்த தொகையை வழங்காமல், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியுடன், சட்டவிரோதமாக எங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதற்காக அமைச்சர் வீரமணிக்கு ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், எங்களை மிரட்டுகின்றனர்.

    இதுகுறித்து சட்டசபை செயலாளர், அரசு கொறடா, தமிழக டி.ஜிபி., ஆகியோரிடம் அமைச்சர் உள்ளிட்டோர் குறித்து புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, நாங்கள் கொடுத்த புகாரை, முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க சட்டப்பேரவை செயலாளர், அரசு கொறடா ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். அந்த புகாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்ற முதல்-அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி விசாரித்தார். பின்னர், மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். #MinisterKCVeeramani
    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    வேலூர் மாநகர பகுதியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 14 பேர் மீதும், காட்பாடி-4, ராணிப்பேட்டை-6, அரக்கோணம்-2, குடியாத்தம்-4, ஆம்பூர்-6, வாணியம்பாடி-7, திருப்பத்தூர் 7 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தததாக 93 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
    ஈரோடு மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நீதிமன்றம், மற்றும் அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்திருந்தது.

    தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகள், அதிக புகை வரும் வெடிகளை வெடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதே போன்று நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைந்தது.

    இதையடுத்து தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை என்றும் அறிவித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதி அளித்த நேரத்தை தாண்டி நீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று தீபாவளி அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோயில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்த கோபியை சேர்ந்த தேவராஜ்(வயது25), குமரேசன்(19), நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த தீரன்(21), சிவகுமார்(22), முருகேசன்(24), மொடச்சூரை சேர்ந்த (பாலு22) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதே போன்று கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பங்களாபுதூர், புளியம்பட்டி, பெருந்துறை, சித்தோடு, பவானி, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக ஒரு வரும், வீரப்பன்சத்திரத்தில் 3 பேரும் என மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×