search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94666"

    மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விவசாயிகளுக்கான உதவி வரவேற்கத்தக்கது என்றாலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி விவசாயிகளுக்கு இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது.

    காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழுவும் சுமார் 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை அளித்திருக்கிறது.

    அதனடிப்படையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சம்பா பயிர்களைப் பொறுத்தவரை மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாது என்றும், மறு நடவு செய்ய வசதியாக ஹெக்டேருக்கு ரூ.6,038, அதாவது ஏக்கருக்கு ரூ.2415 மதிப்புள்ள விதைகள், நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இதுவரை எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல், வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது நியாயமல்ல என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன. சிறப்பு ரெயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான 50 சதவீதம் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, முழுமையான கட்டணம், அதுவும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரெயில்களில் சலுகை வழங்க முடியாது என்பதைக் காரணம்காட்டி இது நியாயப்படுத்தப்பட்டது.

    கொரோனா பாதிப்பு காலத்திற்கு முந்தைய கால அட்டவணைப்படி சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும், இப்போது வழக்கமான ரெயில்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

    முன்பதிவு செய்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது நியாயமல்ல.

    ரெயில் கட்டணம் என்பது பயணத் தேதிக்கான கட்டணத்தையே குறிக்கும். கடந்த காலங்களில் ரெயில் கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு நடைமுறைபடுத்தப்படும் நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்கள், பயணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கும், அவர்கள் முன்பதிவின் போது செலுத்திய தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை வசூலிக்கப்படும்.

    அது எவ்வாறு நியாயமோ, அதேபோல், பயணக் கட்டணம் குறைக்கப்படும் போதும், முன்பதிவின் போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, அவ்வாறு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திருப்பித் தருவது தான் முறை. தொடர்வண்டித்துறை அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாக முன்பதிவு செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015-ம் ஆண்டில் சந்தித்ததை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. வட சென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது. வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை.

    குடிநீர், பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆறு நாட்கள் நீர்ச்சிறையில் அடைபட்டு கிடப்பது உளவியல் ரீதியாகவும் கொடுமையானது. சென்னையின் பல பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு மாநகராட்சியும், தமிழக அரசும் நீர்ச்சிறையிலிருந்து விடுதலை தர வேண்டும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. நடப்பு சம்பா பருவம் வெற்றிகரமாக அமைந்தால் தான் அவர்களால் இழப்பை ஈடு செய்ய முடியும். ஆனால், நடப்பு சம்பா பருவத்திலும் கனமழையால் அவர்களுக்கு இழப்பு தான் ஏற்பட்டிருக்கிறது. அதை தமிழக அரசும் உணர்ந்து பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை காவிரி டெல்டாவுக்கு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. அமைச்சர்கள் குழுவினர் ஆய்வை விரைவாக முடித்து பாதிக்கப்பட்ட உழவர்கள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    தமிழக அரசு

    சென்னையிலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழை பெரும்பான்மையான குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்புகளையும், உடமை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.5,000 நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

    முல்லைப்பெரியாறு சிக்கலைப் பேசித் தீர்க்கும்படி 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால், அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞரும், கேரள முதல்-அமைச்சர் அச்சு தானந்தனும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் அந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் பேசினார்கள்.

    அதைத்தொடர்ந்து டிசம்பர் 18-ம் தேதி இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களான துரைமுருகனும், பிரேமச்சந்திரனும் பேசினார்கள். இரு கட்ட பேச்சுகளும் தோல்வி அடைந்தன. இந்தப்பேச்சுகளை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு வழக்கு விசாரணையை கேரள அரசு 7 ஆண்டுகள் தாமதப்படுத்தியது.

    அதேபோல், இப்போதும் புதிய அணை குறித்து தமிழகத்தை பேச்சுக்கு அழைப்பதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதங்களுக்கு புத்துயிரூட்டவும் கேரளம் துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்துவிடக் கூடாது.

    தமிழக அரசு

    எனவே, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட எந்த சிக்கல் குறித்தும் கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் பேச்சு நடத்தக் கூடாது. மாறாக, பேபி அணையை வலுப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...முல்லைப் பெரியாறு விவகாரம்: நாம் தமிழர் கட்சி 14-ந் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் - சீமான் அறிவிப்பு

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை என்பது. ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக நீதிக்கும் இது குறித்த உயர்நீதி மன்றத் தீர்ப்பு உலை வைத்திருக்கிறது என்பது தான்.

    வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களையும், அவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் விவரித்துள்ள அம்சங்களையும், எந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைத்தாலும், அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்பது தான் உண்மை.

    சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான்.

    அதற்காக நாம் இழந்தவை 21 உயிர்கள் உட்பட ஏராளம்; நாம் செய்த தியாகங்கள் ஏராளம், ஏராளம். தென்னிந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகத்தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த அமைப்பும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவைப் போராடிப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் இட ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்ததும் நாம் தான். வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். தமிழகத்தில் சமூகநீதியின் முன்னோடி நாம் தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

    சமூகநீதியை பாதுகாப்பதற்காக அடுத்தக்கட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை.

    எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன. கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியையும் நாம் தான் நிலைநிறுத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்

    வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக போராடிப் பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

    வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத் தான் சமூக நீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன.

    ஆனால், அந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு.

    வன்னியர்களுக்கான உள் இடஓதுக்கீடு எளிதாக சாத்தியமாகிவிடவில்லை. பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சமூகநீதிப் போராட்டங்களின் பயனாகவே இந்த உள் இட ஒதுக்கீடு சாத்தியமானது.

    சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் சமூகநீதிக்கு பாதகமானவை. அவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள அனைத்துப் பிரிவு இட ஒதுக்கீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த வினாக்களுக்கான விடைகளை வலிமையாக தயாரிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.

    அந்த வகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

    அதன்படி, தமிழ் நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... இறந்தவர்கள் பெயரிலும் ஓய்வூதியம், கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடியில் குளறுபடி: அமைச்சர் பேட்டி

    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன் பணம் வழங்க அதிக செலவாகாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. போனஸ், கருணைத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை.

    தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன் பணம் வழங்க அதிக செலவாகாது. ஆனால், அது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கும். எனவே அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன் பணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை தி.மு.க.வும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது.

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

    தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.

    தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.

    இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம்.

    இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

    பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
    பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பாமக முன்வைத்த பத்து அம்சத் திட்டத்தை ராமதாஸ் நிறைவேற்றுவாரா? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
    சென்னை:

    தி.மு.க. நாளேடான முரசொலியில் டாக்டர் ராமதாசை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

    குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே என பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்க முடியும்.

    தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர, எனக்குள் எந்தவிதக் கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மைதான். அய்யாவுக்கு எப்படி கவலை வரும்.

    மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா.

    மத்தியில் வரவேண்டும் என நீங்கள் விரும்பிய ஆட்சியே வந்து விட்டது. அப்படி இருக்க, உங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம். எம்.பி.யாக இருந்தால் தான் செய்ய முடியுமா?

    மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன், உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்குப் பயணித்தாரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்குப் பங்காற்றக் கூடாதா?

    உண்மையிலேயே நீங்கள் தமிழக வளர்ச்சிக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் பணியாற்றும் தலைவராக இருந்தால், என்ன சொல்லியிருக்க வேண்டும்?

    “தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தமிழக நலனே என் நலன். நாம் எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது. மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு நமது அரசு. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்ற, அந்த அரசிடம் எடுத்துச் சொல்லி தேவையான அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறியிருந்தால், உங்கள் உயரிய நோக்கத்தைப் பாராட்டியிருக்கலாம்.

    ஆனால் பொறுப்பை நீங்கள் உதறித் தள்ளிவிட்டு, கூட இருக்கும் ஒரு சில அப்பாவி பாட்டாளிச் சொந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து, பொறுப்பற்ற நிலையில் ஒரு அறிக்கை விடுகிறீர்களே, இது நியாயமா?

    மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு எதையும் செய்யாத தி.மு.க. என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியிருக்கிறார். பாவம், தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி, அய்யாவிற்கு நினைவிழப்பை உருவாக்கியுள்ளது போலும்.


    மத்தியில் அதிகாரத்தில் தி.மு.க. இருந்தபோது அய்யாவின் ஆசை மகன் அன்புமணியும் தி.மு.க.வின் தயவால் பதவி பெற்று மத்தியில் அமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விட்டுப் பிதற்றுவது என்ன நியாயம்?

    அறிக்கையின் முடிவில் பாட்டாளிகளை வீறு கொண்டு எழக் கேட்டுள்ளீர்கள். அத்துடன் விடவில்லை. மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து போராட அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.

    கட்சித் தொண்டர்கள் காதிலே பூச்சுற்ற ஒரு அளவில்லையா? மருத்துவர் அய்யா, முழம் முழமாகச் சுற்றத் தொடங்கியுள்ளீர்களே, நியாயமா?

    நீங்கள் ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும். அப்படி இருக்க, மக்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியதுதானே. அதை விடுத்து போராட அழைப்பதேன்? சரி, அதை எல்லாம் விடுங்கள்.

    தேர்தலில் கூட்டணி அமைத்தபோது ஒரு பத்து அம்சத் திட்டத்தைக் கூறி, அதனை ஏற்றுக் கொண்டதால்தான் நான் அ.தி.மு.க. அணியோடு கூட்டணி சேர்ந்தேன் என்று பேட்டி தந்தீர்களே. அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றிடுவீர்களா, அதற்கும் “பெ....பெ....”தானா?

    தேர்தல் தோல்விக்குத் துவள வேண்டாம் என அறிக்கை விட்டுவிட்டீர்கள். பத்து அம்சமும் பஞ்சாய்ப் பறக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? அடுத்து கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சு உடன்படிக்கைப்படி ஒரு ‘ராஜ்ய சபா’ சீட்டு பாக்கியிருக்கிறது. அதை அன்புமணிக்குத் தயார் செய்யுங்கள்.

    கூட்டணி வைத்துத் தோல்விதானே கண்டோம் என அந்த ‘சீட்’டைத் தராது கைவிரித்து விடப் போகிறார்கள்.

    இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒலிபரப்பாகும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே...” எனும் பாடல் காதிலே விழுகிறது. அய்யாவுக்கு அந்தப் பாடலை சமர்ப்பணமாக்குகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாமக தோல்வி அடைந்தாலும் வாக்குகள் குறையவில்லை என்று ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.

    நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்த வித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு.

    மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது.

    மத்தியிலும், மாநிலத் திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன் மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    அதேபோல், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் நோக்கம் கொண்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடத்திய கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரத்து செய்ய வைத்தது பாமக தான்.

    ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத - போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத வி‌ஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின. ஏமாற்றின.

    பாட்டாளி மக்கள் கட்சி மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டுகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்தின. பொய்களின் துணையுடனும், பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது தி.மு.க. அணி. இது தற்காலிகமான வெற்றியே. மக்கள் உண்மையையும், நன்மையையும் உணரும் போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது.

    மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம்; வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது.

    இதேநிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும் என்பது உண்மை. 2030-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள வயதுக்கு வந்தோரில் 50 விழுக்காட்டினர் குடிகாரர்களாகி இருப்பர்; 23 விழுக்காட்டினரால் மாதத்திற்கு ஒரு முறை குடிக்காமல் இருக்க முடியாது என்ற மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

    மதுவால் ஏற்படும் தீமைகளை 38 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நான், அதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கு தான் என்பதையும் அறிவுறுத்தி வருகிறேன். மது குடிப்பதால் சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது.

    ஆனால், மது அருந்துவதால் 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன; களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. இந்தத் தீமைகள் எதுவும் குடிக்கு அடிமையானவர்களுக்கு உரைப்பதில்லை. இது தான் என்னை வாட்டும் கவலையாகும்.

    பெரும்பான்மையான மாநிலங்கள் மதுவிற்பனையை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாற்றி இருக்கிறது. வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.

    தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மது விலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

    நாடு முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு மதுவிலக்கு பாதையில் பயணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    மது விலக்கை நடை முறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    காவிரி பாசனப் பகுதியில் கெயில் குழாய் பதிக்க பயிர்களை அழித்திருப்பதற்கு தினகரன், ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:- 

    காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது.

    சீர்காழியை அடுத்த மாதானம் முதல் செம்பனார் கோவில் அருகிலுள்ள மே மாத்தூர் வரை விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என கெயில் நிறுவனம் ஒற்றைக்காலில் நின்று வருகிறது.

    ஆனால் அப்பகுதி விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதனையும் மீறி நாற்றாங்கால்களிலும், நடவு செய்யப்பட்டிருக்கிற வயல்களிலும் எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கி, எரிவாயு குழாய்களைப் பதிப்பதற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துணையோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த இரண்டொரு நாட்களுக்குள்ளாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கே குவிக்கப்பட்டிருக்கிற கனரக வாகனங்களையும், எந்திரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணையை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல்துறை துணையுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

    உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணைக் குழாய்ப் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும்.

    இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். உழவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து விட்டு, எண்ணை குழாய்ப் பாதைகளை அமைப்பது கண்களை பறித்து விற்று விட்டு, அந்தக் காசில் கண்மை வாங்குவதற்கு இணையான அபத்தமான, அழிவுச் செயலாகும்.

    விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

    எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.


    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடிய தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார்.

    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×