என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94667"
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை தி.மு.க.வும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.
தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.
பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.
இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம்.
இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.
பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தி.மு.க. நாளேடான முரசொலியில் டாக்டர் ராமதாசை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே என பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்க முடியும்.
தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர, எனக்குள் எந்தவிதக் கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மைதான். அய்யாவுக்கு எப்படி கவலை வரும்.
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா.
மத்தியில் வரவேண்டும் என நீங்கள் விரும்பிய ஆட்சியே வந்து விட்டது. அப்படி இருக்க, உங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம். எம்.பி.யாக இருந்தால் தான் செய்ய முடியுமா?
மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன், உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்குப் பயணித்தாரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்குப் பங்காற்றக் கூடாதா?
உண்மையிலேயே நீங்கள் தமிழக வளர்ச்சிக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் பணியாற்றும் தலைவராக இருந்தால், என்ன சொல்லியிருக்க வேண்டும்?
“தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தமிழக நலனே என் நலன். நாம் எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது. மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு நமது அரசு. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்ற, அந்த அரசிடம் எடுத்துச் சொல்லி தேவையான அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறியிருந்தால், உங்கள் உயரிய நோக்கத்தைப் பாராட்டியிருக்கலாம்.
ஆனால் பொறுப்பை நீங்கள் உதறித் தள்ளிவிட்டு, கூட இருக்கும் ஒரு சில அப்பாவி பாட்டாளிச் சொந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து, பொறுப்பற்ற நிலையில் ஒரு அறிக்கை விடுகிறீர்களே, இது நியாயமா?
அறிக்கையின் முடிவில் பாட்டாளிகளை வீறு கொண்டு எழக் கேட்டுள்ளீர்கள். அத்துடன் விடவில்லை. மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து போராட அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.
கட்சித் தொண்டர்கள் காதிலே பூச்சுற்ற ஒரு அளவில்லையா? மருத்துவர் அய்யா, முழம் முழமாகச் சுற்றத் தொடங்கியுள்ளீர்களே, நியாயமா?
நீங்கள் ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும். அப்படி இருக்க, மக்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியதுதானே. அதை விடுத்து போராட அழைப்பதேன்? சரி, அதை எல்லாம் விடுங்கள்.
தேர்தலில் கூட்டணி அமைத்தபோது ஒரு பத்து அம்சத் திட்டத்தைக் கூறி, அதனை ஏற்றுக் கொண்டதால்தான் நான் அ.தி.மு.க. அணியோடு கூட்டணி சேர்ந்தேன் என்று பேட்டி தந்தீர்களே. அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றிடுவீர்களா, அதற்கும் “பெ....பெ....”தானா?
தேர்தல் தோல்விக்குத் துவள வேண்டாம் என அறிக்கை விட்டுவிட்டீர்கள். பத்து அம்சமும் பஞ்சாய்ப் பறக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? அடுத்து கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சு உடன்படிக்கைப்படி ஒரு ‘ராஜ்ய சபா’ சீட்டு பாக்கியிருக்கிறது. அதை அன்புமணிக்குத் தயார் செய்யுங்கள்.
கூட்டணி வைத்துத் தோல்விதானே கண்டோம் என அந்த ‘சீட்’டைத் தராது கைவிரித்து விடப் போகிறார்கள்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒலிபரப்பாகும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே...” எனும் பாடல் காதிலே விழுகிறது. அய்யாவுக்கு அந்தப் பாடலை சமர்ப்பணமாக்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.
நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்த வித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு.
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது.
மத்தியிலும், மாநிலத் திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன் மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதேபோல், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் நோக்கம் கொண்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடத்திய கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரத்து செய்ய வைத்தது பாமக தான்.
ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத - போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின. ஏமாற்றின.
பாட்டாளி மக்கள் கட்சி மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டுகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்தின. பொய்களின் துணையுடனும், பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது தி.மு.க. அணி. இது தற்காலிகமான வெற்றியே. மக்கள் உண்மையையும், நன்மையையும் உணரும் போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது.
மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம்; வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92047 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 30809 வாக்குகள் பெற்றது.
தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அருர்(தனி) ஆகிய சட்டமன்ற இடைத்தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன்.
இந்த வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுக்களாக எண்ணப்படுகிறது.
முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:
பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்-4552 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் டிஎன்வி செ. செந்தில்குமார்-3868 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் பி.பழனியப்பன்- 233 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதில் அன்புமணி ராமதாஸ் 684 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க .தலைமையிலான கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோல் இந்திய அளவில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக வருவார். இது கருத்து கணிப்பு மட்டுமல்ல. இதை தான் நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லிக்கொண்டே வந்தது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் மோடி ஆட்சி தொடரும.
தற்போது தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனைகள் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவதினாலே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இது திடீரென்று வந்தது இல்லை. இன்னும் வருகிற காலங்களில் அதிகமான வறட்சி ஏற்படும், வெள்ளமும் வரலாம். ஆட்சியாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாங்கள் கூட்டணிக்குள்ளே இருந்து அதை எதிர்ப்போம். மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதை எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் இந்த வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்கு காரணம் காட்டவே மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் புகார் அளித்தனர். இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக வாக்காளர்களோ, வாக்குச்சாவடி முகவர்களோ, தேர்தல் பிரிவு அதிகாரிகளோ புகார் அளிக்கவில்லை. ஆனால் இங்கு தேவையற்ற மறுஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பா.ம.க.விற்கு முழுமையாக ஓட்டளித்து இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் மறுஓட்டுப்பதிவு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு அரசியல் தெரியாது. அவரை மக்கள் ஏற்கவில்லை.
பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த நாளில் இருந்து எங்களை தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் பேசினார். முதலில் ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று கூறிய அவர், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது தேர்தல் முடிந்த பின்னர் பிரதமரை முடிவு செய்வோம் என்றார். பின்னர் மீண்டும் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று கூறினார்.
இந்தநிலையில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சந்தித்தபோது அவரிடம் 1 மணிநேரம் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பா.ஜனதாவுடனும் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தோல்வி பயம் வந்து விட்டதால் அவர் குழப்பத்தில் இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என்ற அவருடைய கனவு எப்போதும் நிறைவேறப்போவது இல்லை.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க.வும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வும் அமோக வெற்றி பெறும். இதேபோல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலுச்சாமி அ.தி.மு.க. நிர்வாகி மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது.
இதேநிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும் என்பது உண்மை. 2030-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள வயதுக்கு வந்தோரில் 50 விழுக்காட்டினர் குடிகாரர்களாகி இருப்பர்; 23 விழுக்காட்டினரால் மாதத்திற்கு ஒரு முறை குடிக்காமல் இருக்க முடியாது என்ற மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
மதுவால் ஏற்படும் தீமைகளை 38 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நான், அதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கு தான் என்பதையும் அறிவுறுத்தி வருகிறேன். மது குடிப்பதால் சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது.
ஆனால், மது அருந்துவதால் 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன; களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. இந்தத் தீமைகள் எதுவும் குடிக்கு அடிமையானவர்களுக்கு உரைப்பதில்லை. இது தான் என்னை வாட்டும் கவலையாகும்.
பெரும்பான்மையான மாநிலங்கள் மதுவிற்பனையை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாற்றி இருக்கிறது. வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மது விலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
நாடு முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு மதுவிலக்கு பாதையில் பயணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
மது விலக்கை நடை முறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டு கொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரைப்பட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுனில் தத்தின் புதல்வருமான சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவித்திருந்த சஞ்சய் தத், 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார் என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துள்ள புனே சிறை நிர்வாகம், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய்தத்தை தாங்களே விடுதலை செய்ததாக தெரிவித்திருக்கிறது.
2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்தத் தீர்ப்பின்படி, மத்திய அரசு சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை.
மத்திய அரசின் அனுமதி பெறாமல் தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஆனால், இவ்விஷயத்தில் மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது தான் மிகவும் வருத்தமளிக்கிறது. ஒருபுறம் மத்திய சட்டப்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.
மறுபுறம் மாநில சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2014-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும் இன்னும் விடுதலையாக முடியவில்லை.
7 தமிழர்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி ஆளுனர் மூலமாக விடுதலை செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நேரடியாக விடுவிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவெடுக்கும்படி ஆளுனருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை தமிழக ஆளுனர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
அரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் தினத்தன்று தலித்துகள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், ஜாதி வன்கொடுமைகள் சம்பவத்தை பல்வேறு தரப்பினர் நேரில் ஆய்வு செய்தனர்.
அதுமட்டுமல்ல பேராசிரியர் லட்சுமணன், பேராசிரியர் கதிரவன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினரும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர்.
அதில் பா.ம.க.வும், இந்து முன்னணியும் சேர்ந்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியது என்பதை உறுதி படுத்தி உள்ளது.
கலவரத்துக்கு யார் காரணம் என்பதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். தேர்தலில் சிதம்பரம் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பா.ம.க.வினர் திட்டமிட்டனர்.
எங்கெங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கெல்லாம் வாக்கு சாவடிகளை கைப்பற்றி பா.ம.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்களின் முயற்சி பலிக்க வில்லை.
பொன்பரப்பியில் காலை 8 மணிக்கே ஓட்டு போட வந்த தலித்துகளை அச்சுறுத்தி உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி அருகே பானைகளை போட்டு உடைத்துள்ளனர். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தலித் குடியிருப்பு அருகே விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தின் அருகில் இருந்த பானைகளையும் விட்டு வைக்காமல் உடைத்துள்ளனர்.
இதை தட்டிக் கேட்ட குணசீலன் என்பவரை பா.ம.க. வினரும், இந்து முன்னணியினரும் தாக்கிய தோடு சேரிக்குள் புகுந்தும் பானை சின்னத்துக்கா ஓட்டு போட்டாய் என கேட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அபாண்டமாக ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். போலீசாரும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வில்லை.
ஆனால் நான் அந்த கிராமத்துக்கு வரக்கூடாது என்று வாய்வழி உத்தரவு போட்டுள்ளனர். போலீசார் ஒருதலைபட்சமாக செயல் படுகின்றனர்.
நெல்லிக்குப்பம் அருகே குச்சிப்பாளையத்திலும் விடுதலை சிறுத்தைக்கு சம்பந்தம் இல்லாத சம்பவத்தை தொடர்பு படுத்தி எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகிறார்.
என் படமும், டாக்டர் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்ட இரு சக்கர வண்டியில் சென்ற தலித் இளைஞர்களை வழி மறித்து பா.ம.க.வினர் தாக்கி உள்ளனர். வண்டியையும் உடைத்துள்ளனர். தட்டிக் கேட்டவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
ஆனால் தலித் தாக்கியதாக எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகின்றார்.
இப்போது விருத்தாசலம் அருகே திலகவதி என்ற பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த கொலைக்கும் விடுதலை சிறுத்தைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பெண்ணுக்கும் ‘ஆகாஷ்’ என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், அதனால் அந்த நபருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த வாலிபர்தான் குற்றவாளியா? என உறுதிப்படுத்தாத நிலையில் வழக்கம் போல் ராமதாஸ் பழி சுமத்தி பேசுகிறார். அரசியல் ஆதாயம் பெற குறியாக உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை எல்லாவற்றிலும் தொடர்புபடுத்துவதையும் வம்புக்கு இழுப்பதையும் டாக்டர் ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
திலகவதி கொலையில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலத்தில் 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ponparappiissue #thirumavalavan #pmk
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, கிழட்டு சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எஸ்ரா சற்குணத்தின் வார்த்தைகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஒவ்வாதவை; கண்டிக்கத்தக்கவை.
எஸ்ரா சற்குணம் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மாறாக, உண்மை நிலை அறியாமல் பாட்டாளி மக்கள் கட்சியையோ, வன்னியர்களையோ இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வன்னியர்களை இழிவு படுத்தி பேசியதற்காக அந்த மக்களிடம் எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்ரா சற்குணத்தைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
வன்னிய மக்கள் மீது மட்டும் ஒருசார்பாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்தால் வன்னியர் எதிர்ப்பு என்ற சாக்கடையில் அரசியல் லாபம் என்ற அரிசி பொறுக்குபவர்களாகவே அவர்களை சமுதாயம் பார்க்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ramadoss #EzraSargunam #vanniyarissue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்