search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது.
    • எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கப் போவது எந்த கட்சி? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த முறை த.மா.கா. போட்டியிட்ட நிலையில் இந்த முறை அ.தி.மு.க. களம் இறங்க முடிவு செய்தது. இதற்காக த.மா.கா.விடம் பேசி உறுதியும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் நாங்களும் போட்டியிடப் போகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருக்கிறார்.

    அத்துடன் இருதரப்பினரும் சென்னையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசி ஆதரவும் கோரினார்கள்.

    இரு தரப்பும் ஆதரவு கோரியதால் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற தர்ம சங்கடமான நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி அ.தி.மு.க. என்பதால் அந்த கட்சி போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை.

    ஆனால் இரு தரப்பும் மல்லு கட்டுவதால் பா.ஜனதாவும் யோசிக்கிறது. களம் இறங்கி பலத்தை பார்த்து விடுவது என்று யோசித்த பா.ஜனதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் நிலைமை சாதகமாகி இருக்கிறது.

    யாருக்கு ஆதரவளித்தாலும் கூட்டணிக்குள் பாதிப்பு வரும் என்பதை காரணம் காட்டி பா.ஜனதாவே போட்டியிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டுப்பெறலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்ததுமே தேர்தல் பணிகளை கவனிக்க பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 14 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

    அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான சரஸ்வதி உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

    இவர்கள் தொகுதி முழுவதும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாநில தலைமைக்கு வழங்கி உள்ளனர்.

    இதுதவிர கட்சி மேலிடம் அனுப்பிய தனிக்குழு ஒன்றும் சர்வே நடத்தி உள்ளது. இந்த குழுக்களின் அறிக்கை இன்று கொடுக்கப்படுகிறது.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் தொகுதியின் கள நிலவரத்தை ஆய்வு செய்கிறார்கள். தொகுதி நிலவரம் சாதகமாக இருந்தால் பா.ஜனதா கண்டிப்பாக போட்டியிடும்.

    அதேநேரம் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சமாதானப்படுத்தி தங்களுக்காக விட்டுக் கொடுக்கும்படி கேட்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

    இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பா.ஜனதா தேர்தல் குழுவினர் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக களம் இறங்கினால் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று விடும்.

    எனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சமரசம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.

    பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். அதேபோல் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பா.ஜனதா போட்டியிட்டால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுடன் நேருக்குநேர் மோத பா.ஜனதா தயாராகி வருகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக தங்களது செல்வாக்கை தெரிந்து கொள்ளும் வகையில் பா.ஜனதா இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.

    அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது.

    இதில் எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    • எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார்.

    கொங்கு மண்டலமான ஈரோடு கிழக்கு தொகுயில் கடந்த சட்டமன்ற தேர்வில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் களம் இறங்கிய த.மா.கா. வேட்பாளர் யுவராஜா சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்தார். எனவே இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அவர் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. களம் இறங்க தயாராகிவிட்டது.
    • இரு தரப்பும் பா.ஜனதாவின் ஆதரவை கேட்கும் நிலையில் பா.ஜனதா யாருக்கு ஆதரவாக மணி ஒலிக்கப் போகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. களம் இறங்க தயாராகிவிட்டது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    இருவருமே கூட்டணி கட்சியான பா.ஜனதாவின் ஆதரவை நாடுகிறார்கள். இதையடுத்து இரு தரப்பும் இன்று பிற்பகலில் போட்டி போட்டு பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறார்கள்.

    மாலை 3 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் அண்ணாமலையை சத்திப்பதாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்து இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறார்.

    அவருடன் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் செல்கிறார்கள்.

    இப்படி போட்டி போட்டு இரு தரப்பும் பா.ஜனதாவின் ஆதரவை கேட்கும் நிலையில் பா.ஜனதா யாருக்கு ஆதரவாக மணி ஒலிக்கப் போகிறது?

    அல்லது பா.ஜனதா தனி வியூகம் வகுக்கப்போகிறதா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பா.ஜனதா போட்டியிட முன் வந்தால் ஆதரவு அளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதும் அதற்கு பா.ஜனதா மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சூசையாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் 4½ ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு விடை தருகிற நாள்தான் பிப்ரவரி 27ந் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27. அதன் பிறகு தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.
    • ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். இதற்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கோரப்போவதாகவும் கூறினார்.

    இதுதொடர்பாக டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே கூறி வந்தோம். இப்போது அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.

    அ.தி.மு.க.வை வீழ்த்தத்தான் அவர் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால் அவர் கனவில்கூட வீழ்த்த முடியாது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். தனி மனிதராக ஆதரவு கேட்பதற்கும் கட்சி ஆதரவு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தனி மனிதருக்கு எந்த கட்சியும் ஆதரவு அளிக்காது.

    நாங்கள் கூட்டணி தர்மப்படி இன்று மாலையில் பா.ஜனதா தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும்.
    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி தனியாக செயல்படுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். சின்னம் தங்களுக்கு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விட்டோம். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சும் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அறிவித்துள்ளது.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே வேட்பாளருக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு கிடைக்கும். இதில் எந்த சிக்கலுக்கும் இடம் இல்லை.

    இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

    அ.தி.மு.க. சட்டத்துறை உறுப்பினர் வக்கீல் இன்பதுரை கூறும்போது, 'கட்சி இரண்டாக பிளவுபடவில்லை. முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் பெரும்பான்மை எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கட்சி அலுவலகமும் எங்கள் வசமே இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இணையதள முகவரியையும் நாங்களே பயன்படுத்துகிறோம். வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ததையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே இரட்டை இலையை நாங்கள் பெறுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது' என்றார்.

    • அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறந்து வைத்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியில் உள்ளது. ஸ்டாலின் தற்போது பொம்மை முதல்வராக செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் 20 மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க.வில் கடைக்கோடி தொண்டனும் பொது செயலாளர் ஆகலாம். ஆனால் தி.மு.க.வில் தற்போது உதயநிதி அமைச்சர் ஆனது போல அடுத்துடுத்து அவர்களது குடும்பமே முதல்வராவர். மகன் என்ற ஒரே காரணத்தினால் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவர் தி.மு.க.வுக்காக என்ன செய்தார்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவே அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டுவது, குடிமராமத்து பணிகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, மருத்துவ படிப்புக்கான செலவையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 564 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிய உதயநிதி இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் காவிரிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறந்து வைத்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தமிழகம் போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து 20 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் வழங்கப்படவில்லை. 1 கோடியே 1 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு பெரிய பொய்யை சொல்லியுள்ளார். அவருக்கு பொய் சொல்லுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கலாம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா.வுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேப்போன்று இடைத்தேர்தலிலும் த.மா.கா.வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் வில்லரசம்பட்டி நால் ரோட்டில் உள்ள லட்சுமி துரைசாமி மஹாலில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தங்குகிறார்கள். முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் வகுக்கப்படுகின்றன.

    • 15 பேர் கொண்ட ஒரு ரகசிய குழுவை டெல்லி பா.ஜனதா மேலிடம் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
    • குழுவினர் ஓசையில்லாமல் ஈரோடு தொகுதிக்குள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்று நேற்றே கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. அதற்கு கூட்டணி கட்சியான த.மா.கா.வும் சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

    பா.ஜனதா போட்டியிட வேண்டும் என்ற கருத்தும் அந்த கட்சியினரிடையே உள்ளது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும் என்று யோசிக்கிறார்கள்.

    ஏற்கனவே பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் 15 பேர் கொண்ட ஒரு ரகசிய குழுவை டெல்லி பா.ஜனதா மேலிடம் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த குழுவினர் ஓசையில்லாமல் ஈரோடு தொகுதிக்குள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்று நேற்றே கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

    தொகுதியின் கள நிலவரம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் செல்வாக்கு, ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியா? திருப்தியா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார்கள்.

    இந்த குழுவினர் சேகரித்த தகவல்களை நாளை மறுநாள் (22-ந்தேதி) டெல்லி மேலிடத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லி பா.ஜனதா மேலிடம் எடுக்கப்போகும் முடிவு என்ன? அடுத்த கட்டம் என்ன? என்ற பரபரப்பு அ.தி.மு.க. கூட்டணிக்குள் நிலவுகிறது.

    • இந்திய தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்தை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி தரப்பினர் அனுப்பினர். அது பரிசீலனையில் இருந்து வருகிறது.

    இதேபோல ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வதாகவும் சட்ட விதிகளை மாற்றம் செய்ய முடியாது என்றும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களை கொண்ட கிளையில் இருந்து தான் சட்டவிதிகளை மாற்ற முடியும். எனவே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உரிய ஆவணங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடிதம் கொடுத்துள்ளது.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற முறையில் கடிதம் அனுப்பி உள்ளது.

    இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் 2 பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இருவரும் ஒன்றாக இருந்தபோது கடந்த தேர்தலில் த.மா.கா.விற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது இரு துருவங்களாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகிறார்கள்.

    இதனால் இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வமும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் கூறும்போது, 'இரட்டை இலை சின்னம் பெறுவதில் இருதரப்பினருக்கும் சிக்கல் இருக்கும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று இணைவது தான் நல்ல முடிவாகும். அதற்கான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் உள்ளது' என்றனர்.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கும் நிலையில் பா.ஜ.க.வின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் உறுதிப்படுத்தாத நிலையே உள்ளது.

    இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே தலைமையின் விருப்பமாக இருப்பதால் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை பா.ஜ.க. எடுக்கும் என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆதரவு அணிக்கு தான் இரட்டை இலை ஒதுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    அதனால் டெல்லியில் ஆதரவை பெற இருவரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தையும் எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சட்ட நிபுணர்களுடன் செல்ல முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இரட்டை இலையை பெற அழுத்தம் கொடுக்க தேர்தல் ஆணையத்தை சந்திக்கவும் தயாராகி வருகின்றனர்.

    இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாதபட்சத்தில் தனி சின்னத்தில் நிற்கவும் எடப்பாடு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தயாராகி வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியிட உள்ளது உறுதியாகி விட்டது. இதனை தொடந்து தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. தீவிர பணியில் இறங்கி உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கருத்துக்களை கேட்டார்.

    • கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
    • தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியை கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தி.மு.க. தலைமை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் களம் இறங்கப்போவது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவனா? அல்லது வேறு யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தடவையும் த.மா.கா. போட்டியிடுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த யூகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    இதற்கிடையே பாரதிய ஜனதாவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது. எனவே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை எதிர்த்து எந்த கட்சி களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.

    தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

    தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.

    அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா.வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.

    மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது.

    தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×