search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு.
    • 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில் அதிமுக போட்டி.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

    இதுதொடர்பாக, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது.

    இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது.
    • த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. விருப்பத்தை த.மா.கா. ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    * தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்.

    * தமிழக மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    * த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    • ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள்.
    • இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் எங்களுடைய குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.

    தற்போது பாலியல் பலாத்காரம், வன்முறைகள், வரி சுமைகள் அத்தனையும் மக்களால் தாங்கி கொள்ள முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான எண்ணங்களில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.

    தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவச் செல்வங்களின் கல்வி மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
    • வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ- மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில், 920 கிராமங்களில் உள்ள 3 முதல் 16 வயது வரையிலான 30,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஒன்றாம் வகுப்பு பயிலும் 42 விழுக்காடு மாணவர்களால் 1 முதல் 9 வரையிலான எண்களைக்கூட படிக்க இயலவில்லை என்றும், இதேபோன்று ஆங்கில வார்த்தைகளை படிக்கும் திறன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே வெகுவாக குறைந்துவிட்டதாகவும், ஒன்றாம் வகுப்பு பயிலும் 53 விழுக்காடு மாணவ, மாணவியர் மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 23 விழுக்காடு மாணவ, மாணவியரால் ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்துகளைகூட படிக்க இயலவில்லை என்றும், வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

    மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை குறைந்ததற்கு கொரோனா தொற்று நோய் காரணமாக கூறப்பட்டாலும், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே போவதும், கல்விக் கொள்கை குறித்து ஒரு திடமான முடிவை அறிவிக்காததும்தான் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

    தி.மு.க. ஆட்சி அமையப்பெற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவச் செல்வங்களின் கல்வி மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

    இந்த நிலை நீடித்தால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். மாணவ, மாணவியரிடையே, குறிப்பாக தொடக்கக் கல்வி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் களைய முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

    'திராவிட மாடல்' என்று சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல், 'எண்ணும், எழுத்துமாகிய இரண்டும் மக்களுக்கு கண் போன்றது' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ- மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நாளை மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
    • ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி விட்டன.

    அ.தி.மு.க. கட்சிக்குள் சட்ட ரீதியாக சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதும் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது.

    அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

    சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும்.

    பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

    இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம்.

    எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது.

    இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

    பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது?
    • ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    29.12.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.

    ஆனால் மாநில மருத்துவத்துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன்-அதாவது ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்-அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்த கட்சியிடம் தயக்கமும் இருக்கிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்துள்ளது.

    கடந்த தேர்தலிலும் இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் போட்டியிட்ட யுவராஜா சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    எனவே அந்த தொகுதியை மீண்டும் த.மா.கா. கேட்டுள்ளது. அதே நேரம் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்த கட்சியிடம் தயக்கமும் இருக்கிறது.

    இந்தநிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. குழுவினர் இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்படுகின்றன.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 23-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.

    தலைமை நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களும், 87 மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்படுகின்றன. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது எத்தகைய முடிவை மேற்கொண்டால் சாதகமாக இருக்கும்.

    இரு அணிகளாக பிரிந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் பட்சத்தில் போட்டியாக வேட்பாளரை நிறுத்தலாமா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கேட்கிறார்.

    தனியாக வேட்பாளரை நிறுத்தினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார்.

    உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அக்கூட்டத்தில் அவரது சார்பாக 2 பேர் சமீபத்தில் பங்கேற்று வந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973-ல் திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் ஆவார். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் துணிச்சலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது.
    • கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறிக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என கூறிக்கொண்டு அறிக்கைகள் வெளியிட்டு வரும் சசிகலா, திடீர் திடீரென சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்கிறார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அவரும் செயல்பட்டு வருகிறார். டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இப்படி 4 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சசிகலா பேட்டி அளிக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். என்னால் மட்டுமே அது முடியும் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தலைமை பதவிக்கான போட்டி காரணமாகவே பிரிந்துள்ளனர். இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று அ.தி.மு.க.வினரிடம் கேட்டால் "ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியுமா?" என அவர்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள். இதன் மூலம் யாராவது விட்டுக் கொடுத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்பது தெள்ளத் தெளிவாகி உள்ளது.

    ஆனால் சசிகலாவோ நேற்று அளித்த பேட்டியில் 2 பேரையும் சந்திக்க முடிவு செய்திருப்பது போல கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனது கட்சியினரை எப்போது வேண்டுமானாலும் நான் சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    "அ.தி.மு.க. விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை இணைப்பேன், இணைப்பேன் என்று திரும்ப திரும்ப கூறி சசிகலா பிலிம் காட்டிக்கொண்டிருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அவரது தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் இணையலாம். ஆனால் சசிகலாவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதனால் அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது. அவரது பின்னால் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் யாருமே இல்லாத நிலையில் அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்றும் அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சசிகலா சிறையில் இருந்து வெளியானபோது முதலில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார். பின்னர் ஒதுங்கி இருக்கப்போவதாக பின் வாங்கினார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி அவர் பேசியுள்ளதால் சசிகலாவின் எதிர்கால திட்டம்தான் என்ன? என்பதும் குழப்பமாகவே மாறி இருக்கிறது என்றும் அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.

    • இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த தியாக வேள்வியில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்போர் விவரம் வருமாறு:-

    வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்-அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொன்னையன், அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா. வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ், சென்னை புறநகர் மாவட்டம்-இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி. ம.ராசு, மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-கொள்கை பரப்பு துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா. தென் சென்னை தெற்கு (மேற்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் அசோக்.

    திருவள்ளூர் மத்திய மாவட்டம்-அமைப்பு செயலாளர் பா.பென்ஜமின், திருவள்ளூர் வடக்கு மாவட்டம்-மருத்துவ அணி செயலாளர்

    டாக்டர் பி.வேணுகோபால், திரு வள்ளூர் கிழக்கு மாவட்டம்-மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்-மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி. காஞ்சீபுரம் மாவட்டம்-மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.பி.முனுசாமி

    கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில்-அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைைம நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர் தாமோதரன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் கே.பி.முனு சாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டம்-பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர் ஜக்கையன்.

    கடலூர் கிழக்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்-கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் தம்பிதுரை, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நாமக்கல் மாவட்டம்-அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, திருப்பூர் மாநகர் மாவட்டம்-தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்.

    விழுப்புரம் மாவட்டம்-அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், சேலம் மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செம்மலை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கோவை புறநகர் வடக்கு மாவட்டம்-முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செல்வராஜ்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்-அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் மேற்கு மாவட்டம்- அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நெல்லை மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சி.த. செல்லப்பாண்டியன், முருகையா பாண்டியன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. சசிகலா சொல்வதையே ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்.
    • முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நான் சர்வாதிகாரி அல்ல. கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' என்று கூறிச்சென்றார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. சசிகலா சொல்வதையே ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். சொந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கே கிணற்றில் உள்ள தண்ணீரை விடாமல், தனது வயலுக்கு பாய்ச்சியவர் அவர். இந்த விஷயமெல்லாம் தெரியுமா?

    உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. எனவே அவரது கருத்தையெல்லாம் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 'நானும் இருக்கிறேன்' என்று காட்டிக்கொள்வதற்காக எதையாவது செய்தும், பேசியும் கொண்டிருப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் வேலை. எனவே ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஒன்றுபடட்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்வு. அவர்களால் அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்வு ஏற்படப்போவது கிடையாது.

    அதேபோல, 'எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை' என்ற ரீதியில் சசிகலா பேசியுள்ளார். அவர் ஆயிரம் கருத்து சொல்லலாம். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் பயணிக்கிறது. சசிகலா யார், இதுபோன்ற கருத்தை சொல்வதற்கு?

    ஒருங்கிணைக்கும் வேலை செய்யப்போவதாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனை ஒருங்கிணைத்து ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும். அது நல்ல விஷயம் தான். நாங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை. அதேவேளை எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டாம் என தெரிவித்தார்.

    ×