search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கு உரிய அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கும்படி மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மை காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிக மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதுபோல குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் குழந்தை ஒன்று இறந்துள்ளது. பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆட்சியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் இதை எடுத்து சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக, பேச்சு அடிபடுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, 'இதற்கு பதில் அளித்து, அளித்து புளித்து போய் விட்டது. அது முடிந்து போன கதை. அது தொடரும் கதை அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே, கூறி விட்டார்' என்று ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ள உள்ளனர்.
    • ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும்.

    ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5-ந்தேதி காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளனர்.

    இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
    • நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை.

    அட... செங்கோட்டையனா இது? இவரது அற்புதமான பேச்சை கேட்டு எவ்வளவு காலம் ஆச்சு... என்று அவரது பேச்சை கேட்டு ஈரோட்டு அரங்கில் விசில் பறந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம்தான் அது. அந்த கூட்டத்தில் பேசும்போது, "நமது மண் திராவிட மண், ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். பெரியாருக்கு பிறகு அண்ணா தனது எழுத்து ஆற்றலால் இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பி ஒடுக்கப்பட்டவர்களும் கோட்டைக்கு வரலாம் எனக் காட்டினார். அவர்கள் வழியில் வந்த எம்ஜிஆர் மாபெரும் புரட்சியை உருவாக்கினார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று அதற்கடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரை முதல்வராக அமர வைக்கும் வரை தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். ஆனால் அ.தி.மு.க.வால் தனித்து நிற்கவும் முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அதிமுகவை விட்டுச் சென்றாலும் யாராலும் வீழ்த்த முடியாது, காற்றை சுவர் எழுப்பித் தடுக்க முடியாது, கடலை அணை போட்டுத் தடுக்க முடியாது' என மூச்சுவிடாமல் பேசினார் செங்கோட்டையன்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணன் இப்படி கம்பெடுத்து சுற்றுகிறாரே? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போதுதான் கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் எடப்பாடிக்கு வந்த நெருக்கடியை பயன்படுத்தி பல பதவிகள் வாங்கி கொண்டார்கள். உங்கள் கையை பிடித்து அரசியலுக்கு வந்தவர்களை எங்கேயோ போய்விட்டார்கள் பாருங்கள். நீங்கள் இப்படியே இருந்தால்... என்று உசுப்பேற்றி இருக்கிறார்கள்.

    அதை கேட்டு யோசித்த பிறகுதான் தானும் தன் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செங்கோட்டையன் விசுவரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டிசம்பர் 2-ந்தேதி சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார்.

    கோவை:

    கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

    கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டிசம்பர் 2-ந்தேதி சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். போராட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி,ஏ.கே.செல்வராஜ், அவைத் தலைவர் சிங்கை முத்து, பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தவில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    ஓ.பி.எஸ். உடன் ஏற்பட்டு உள்ள மோதல் சம்பவத்தால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு போகப்போக சரியாகி விடும் என்று அவர் நம்புகிறார். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தற்போது எடப்பாடி பழனிசாமி வசமே உள்ளது.

    தடைகளை உடைத்து எறிந்து கட்சி அலுவலகத்தை மீட்டது போன்று கட்சியும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆட்களை நியமித்து வருவதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்.

    இதன்படி அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார். ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி இந்த மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி அல்லது கோவையில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து தனது ஆதரவாளர்களை திரட்டி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக சிறப்பான முறையில் மாநாட்டை நடத்தவும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் வியூகம் வகுத்துள்ளனர்.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக மாநாட்டில் மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓ.பி.எஸ்., தினகரன் இருவரையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதற்கு சம்மதிக்காமலேயே இருந்து வருகிறார்.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியோ அ.தி.மு.க. இணைப்பு முயற்சியில் தீவிரம் காட்சி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
    • பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கிய நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை மாவட்டம் மற்றும் நகரம் ஒன்றிய நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டத்தையும் விரைவில் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 3ம் நாளான நேற்று சேலம் திருச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    பொதுக்குழுவை கூட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தங்களுக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் முறை குறித்து ஆலோசித்தனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வையே எதிர்பார்க்கின்றனர். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரியில் மாபெரும் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுத்து மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமைகளை கோருகிறது.
    • அ.தி.மு.க. என்பது மோடியின் மறு உருவம்.

    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அணியின் தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பலராமன், கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், பி.எஸ்.தமிழ்செல்வன், மாநில செயலாளர் அகரம் கோபி, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தனக்கு சம்பந்தம் இல்லாத உரிமைகளை கோருகிறது. காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் செல்வதற்கான செலவை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இதில் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறைதான் உரிமை கொண்டாட வேண்டும்.

    பிரதமர் மோடி வேண்டுமானால் நிகழ்ச்சிக்கு வரலாம். ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தது தமிழக அரசுதான்.

    மகாத்மா காந்தி நாட்டு மக்களிடம் உண்மையை பேசினார், நேர்மையை பேசினார், மக்களை தன்பால் கவர்ந்தார் என்பதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார். ராகுல்காந்தியும் அதே பாதையில் பயணிக்கிறார், அதே பாதையில் செயல்படுகிறார். ராகுல்காந்தி நடந்து செல்வதன் மூலம் அவர்கள் மிரண்டு போய் உள்ளனர். எனவே, ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.

    தமிழகத்தில் எங்களின் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினரின் சித்தாந்தம், மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றை நேர்க்கோட்டில்தான் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இந்த கொள்கையை அ.தி.மு.க.வினால் ஒருபோதும் கடைபிடிக்க முடியாது. அ.தி.மு.க. என்பது மோடியின் மறு உருவம். அதனால்தான், அந்த கட்சி பலவீனப்பட்டு கிடக்கிறது.

    அ.தி.மு.க. மெகா கூட்டணி, அதைவிட மகா மகா கூட்டணி அமைத்தாலும் அதற்கு ஒரு பயனும் கிடைக்காது. ஏனென்றால் அதை இயக்குபவர்கள் மோடியும், அமித்ஷாவும்தான். அவர்களை (அ.தி.மு.க.வினரை) அவர்களே இயக்க எப்போது ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் தமிழக மக்கள் அவர்களை திரும்பிப்பார்ப்பார்கள். இன்னொருவரின் இயக்கத்தில் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தமிழகத்தில் பழைய வலிமையை பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது.
    • கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.

    சென்னை:

    அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போது ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும்.

    தொண்டர்கள் விருப்பத்திற்கேற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.

    மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, அதுவே பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர்.

    மேலும் கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது.

    இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
    • தி.மு.க. அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் காவல் நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்மநபர்களால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக்கேடானதாகும்.

    கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த அரசு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, மத்திய உளவுத்துறை அவ்வப்போது வழங்கும் முன்னெச்சரிக்கைகளையும் காற்றில் பறக்க விடுகிறது. இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார்-சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு.

    நேற்று எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல் துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முழுபொறுப்பும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடைபெறுகிறது.

    இதே காவல் துறைதான் எங்களுடைய ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதன்மையான மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றது.

    எனவே, நான் ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்திலும், எனது அறிக்கையின் வாயிலாகவும், பேட்டிகளின் மூலமும் குறிப்பிட்டவாறு, இனியாவது இந்த தி.மு.க. அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஒன்றுபட்ட இயக்கமாக மாறவேண்டும் என தொண்டர்கள் விரும்பி வருகின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முட்டுகட்டையாக உள்ளனர்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு இடமில்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்டங்களில் தனக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் நியமித்து வருகிறார்.

    இந்த நிர்வாகிகள் மூலம் விரைவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். குறிப்பாக கொங்குமண்டலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக தனது பண்ணை வீட்டில் சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளான ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்திற்கு வந்தனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஒன்றுபட்ட இயக்கமாக மாறவேண்டும் என தொண்டர்கள் விரும்பி வருகின்றனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முட்டுகட்டையாக உள்ளனர். எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை பலப்படுத்தி மீண்டும் அ.தி.மு.க ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மாவட்டந்தோறும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.

    தற்போது ஒற்றை தலைமை குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதன் முடிவை பொறுத்து எங்கள் தலைமையில் அ.தி.மு.க தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம் என்றனர்.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளேன். என்னை உலகறிய செய்ய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு நானும் என் குடும்பமும் உயிர் உள்ள வரை சேவையாற்றுவோம்.

    மதுரை நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    தற்போது தேனூர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பணியை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சிறந்த மாலுமியாக கேப்டனாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டன.

    நான் அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை நேர்மையாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் குத்து வெட்டும் நடந்ததால் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதையே கைவிட்டு விட்டார்.

    ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த உத்வேகம் காரணமாக இரண்டு முறை சிறப்பான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதால் 27 விருதுகளை பெற்றோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    கொரோனா காலத்தில் கூட பொதுமக்களுக்கு நேர்மையான முறையில் தரமான பொருட்களை விநியோகம் செய்யப்பட்டன. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பொய் சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.

    ஆனால் இந்த ஆட்சி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இனி எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும்.

    இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். அ.தி.மு.க.வை பொருத்தவரை எங்களின் நம்பி வருபவர்களை கை தூக்கி விடுவோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா ராட்சசன் ஆக வளர்ந்து வருவதாக தி.மு.க. மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது பாரதிய ஜனதா அரசு மீது துரைமுருகனுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது.

    அ.தி.மு.க. என்றைக்கும் தமிழகத்தில் முதன்மையான இயக்கமாகும். தி.மு.க.வை ஓட ஓட விரட்டக்கூடிய லட்சக்கணக்கான ராணுவ படையை கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது அன்றைய சூழ்நிலையை பொறுத்து அமையும். 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.

    கடந்து 2019 தேர்தலை வைத்து எதையும் கணிக்க கூடாது. தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறக்கூடியது தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என்பது அப்போது தான் தெரியும்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.விலிருந்து சிலர் விலகி இருக்கிறார்கள். அவர்களும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினால் தீர்வு கிடைக்கும்.

    அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அ.தி.மு.க.வை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது.
    • தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்.

    அ.தி.மு.க.வில் யார் தலைமை என்பதை விட அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

    பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் பார்த்து செல்கின்றனர்.

    10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பது எதிலும் இல்லை. இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பினரும் உள்ளனர். இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறோம்.

    அ.தி.மு.க. நான்கு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறுகிறீர்கள். இருகைகள் தட்டினால் தான் ஓசை வரும். எனவே அவர்கள் இணைவது நல்லது. அவ்வாறு இணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு கட்சி தொடங்கினால் கூட்டணியை வைக்ககூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது.

    கவர்னரை எந்த ஒரு செயலை செய்யவும் நிர்பந்தித்தால் அது சரியாகாது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே இதில் இருதரப்பினரையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை குறைபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இருந்ததா? என்பதை ஆராய வேண்டும்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினை. அதுகுறித்து கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×