search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தி.மு.க. மாறி மாறி பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
    • நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது என்றார்.

    சிவகாசி:

    சிவகாசியில் அருகே திருத்தங்கலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

    52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம்.

    ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தி.மு.க.வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைக்கின்றனர்.

    நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். மக்களுக்காக நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள்?

    திராவிட மாடலை உருவாக்கியது அ.தி.மு.க. தான். திராவிட மாடல் என சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார்? அம்மா கிளினிக்கை மூடினர். தற்போது அம்மா உணகத்தையும் மூட இந்த அரசு முயற்சித்து வருகிறது. பொங்கல் பண்டிகை வந்தாலே தி.மு.க. அரசு கொடுத்த பரிசு பொருட்கள் தான் ஞாபகம் வருகிறது. ஏழை மக்களுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்துள்ளனர். அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்சன்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாகக் கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை அவர் கொச்சைப்படுத்துகிறார்.

    இதற்கெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு பாடம் கொடுப்பார்கள். மக்கள்தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

    • மாணவ-மாணவிகளின் அறிவுபூர்வ கல்வியை பெருக்குவதற்காக தான் மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டது.
    • திட்டத்தை நிறுத்துவது தான் திராவிட மாடலா? என்பதை மு.க.ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி, புரட்சிதலைவி அம்மா சிறப்பான ஆட்சியை தந்தார். அம்மா மறைவிற்கு பிறகு நான் முதல்வராகி சிறப்பான ஆட்சி தந்தேன். அந்த வகையில் அதிக நாட்கள் ஆட்சி செய்த இயக்கம் அ.தி.மு.க..

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. முதன்மை மாநிலமாக தமிழகம் மாறியதற்கு அடித்தளமிட்டது அ.தி.மு.க. அரசு தான். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் திராவிட மாடல், திராவிட மாடல் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்கிறார். அப்படி என்ன திராவிட மாடல் கொண்டு வந்து விட்டார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதமாகிறது. அப்படி என்ன செய்து விட்டார்கள்? தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். பிள்ளையார் சுழி போட்டது போல விருதுநகரில் முதல் மருத்துவ கல்லூரி அமைந்தது. அதன் ராசி அடுத்தடுத்து மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

    அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமைய அடிக்கடி என்னை சந்தித்து வலியுறுத்தினார். அதன் பயனாக விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.

    சென்னையில் தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சை விருதுநகரில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்தது அ.தி.மு.க. அரசு. 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வருகிறது. 7 சட்டக்கல்லூரிகள், கால்நடை மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையங்கள் கொண்டு வந்தோம். 76 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்தோம். பள்ளிகளை தரம் உயர்த்தி அதிக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

    ஒரு நாடு கல்வியில் சிறந்து விளங்கினால் தான் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அதிலும் ஏழை மக்களுக்கு கல்வி வசதிகளை ஏற்படுத்தி தந்த அரசு அம்மா அரசு. அதனால் தான் உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த சாதனைக்களுக்கெல்லாம் சொந்தம் கொண்டாட வேண்டியது அ.தி.மு.க. அரசு தான்.

    மாணவர்களுக்கு சீருடை, பாடபுத்தகம், மடிக்கணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தந்தது அ.தி.மு.க. அரசு. யாராலும் கொடுக்க முடியாதததை மாணவர்களுக்கு கொடுத்தது அம்மா அரசு. ஆனால் தி.மு.க. அரசால் இந்த திட்டத்தை நிறுத்த தான் முடிந்தது.

    தமிழகத்தில் ரூ.52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களது வீடுகளில் விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசு. அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு தற்போது நிறுத்திவிட்டது. அதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

    மாணவ-மாணவிகளின் அறிவுபூர்வ கல்வியை பெருக்குவதற்காக தான் மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறுத்துவது தான் திராவிட மாடலா? என்பதை மு.க.ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடுகையில் கடந்த 1½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிககளை அளித்தனர். ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசல் விலை உயர்ந்தால் அனைத்து பொருட்ளின் விலையும் உயர்ந்துவிடும். இதுபோல் அவர்கள் அறிவித்த எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் படித்த இளைஞர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் அதனை செய்யவில்லை. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பணி நாட்களை 150 ஆக உயர்த்துவோம் என்றனர்.

    மேலும் 100 நாள்வேலை திட்ட தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்துவோம் என்றனர். ஆனால் எதையும் செய்யாமல் ஏழைகளை தி.மு.க. அரசு ஏமாற்றிவிட்டது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்ததும் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை.

    தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு வழங்காத தி.மு.க. அரசு இந்த அகவிலைப்படி உயர்வை எப்படி வழங்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

    படித்தவர்கள், படிக்காதவர்களை ஏமாற்றிய ஒரே அரசு தி.மு.க. அரசு. அதில் கைதேர்ந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • திருமங்கலம் பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் முன்பு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே தொடர்ந்து போட்டி-யுத்தம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் தங்கள் பக்கம் ஆதரவாளர்களையும் இழுத்து வருகிறார்கள்.

    ஆனாலும் அ.தி.மு.க.வில் ஒட்டுமொத்த செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி நாளை (29-ந் தேதி) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் காரில் சிவகாசி செல்கிறார். அங்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அப்போது தி.மு.க. அரசின் செயல்பாடுகளையும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    இதை தொடர்ந்து காரில் மதுரை வரும் அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் முன்பு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். 7 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ஜெய்ஹிந்துபுரம், வில்லாபுரம் வழியாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.

    இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருவதால் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட சுற்றுப்பயணங்களில் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களையும் திரட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சுமார் 20 ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    • பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை சென்றார். இதையடுத்து, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கம் செய்தனர்.

    பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை புதிதாக உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிவில் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு கோரிக்கையின் அடிப்படையில் இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
    • பண்ருடடி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரான பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்தது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்... 'நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம்'. அவருக்கு கட்சியே இல்லை. அடிப்படை உறுப்பினரே கிடையாது. அடிப்படை உறுப்பினரே இல்லாத ஒருவர், அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிக்கிறார் என்று சொன்னால், இந்த பழமொழியைத்தான் சொல்லவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், திமுகவும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து செயல்படுவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

    • மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு வரும் 30-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
    • முன்னதாக வழக்கில் எடப்பாடி பழனிசாமி, கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்' என்று ஆகஸ்ட் 17-ந்தேதி தீா்ப்பளித்தாா்.

    தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு மனுக்களில், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரப்பட்டுள்ளது.

    இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு வரும் 30-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

    முன்னதாக இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க.வில் பன்னீர் செல்வத்திற்கு பதவியே இல்லை.
    • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை.

    சென்னை:

    சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவியும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் டி.ஜெயக்குமார் கூறியதாவது :-

    அ.தி.மு.க. சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினோம்.

    கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    காவல்துறை யார் வீட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அனைத்தும் பன்னீர்செல்வம் வீட்டில் தான் இருந்தது என்று ஜே.சி.டி.பிரபாகர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறார். ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு டம்மி பீஸாக உள்ள கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி வீட்டில் ஆவணங்களை கைப்பற்றுகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. கைகோர்த்து உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் பன்னீர் செல்வத்திற்கு பதவியே இல்லை.

    தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை. அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் என்ற பட்டியலை சமூக நீதிப் பேசுபவர்கள் வெளியிட வேண்டும். ஜாதி ஆதிக்கம் அதிகம் மேல் ஓங்குவது தி.மு.க.வில் தான்.

    கேள்வி :-எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளதே ?

    பதில் :-தலைவர்களின் சிலைக்கு உடனடியாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தி.மு.க. செய்து இருக்க வேண்டும். ஆனால் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது.

    ‌இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

    • பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
    • ஓபிஎஸ்சை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரனை ஏற்கனவே விமர்சித்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்தும் பேசினார். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அதிரடி அறிவிப்பை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது.
    • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு செல்லாமல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார். பூட்டிக்கிடந்த அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டது.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இருதரப்பிலும் 47 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த மோதலின்போது ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது.

    இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும், ராயப்பேட்டை போலீசாரால் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது.

    வழக்கில் கைதாகாமல் இருக்க இருதரப்பைச் சேர்ந்த 67 பேர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இந்தநிலையில் மோதலின்போது கட்சி அலுவலகத்தில் திருட்டுபோனதாக புகார் கூறப்பட்ட 113 முக்கிய ஆவணங்களை மீட்டுவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    • அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்?
    • வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்.

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார்.

    அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25.9.2022 நாளிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது.

    தளபதியின் அரசு "கையாலாத அரசு", "விடியா அரசு", "கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு" என்று வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார்.

    ஆந்திர அரசு ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக அம்மாநில முதல்-அமைச்சர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

    அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

    இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

    அதைத் தொடர்ந்து தளபதியும் நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும்.

    இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை.

    அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் தேதி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப்பதவிக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இதை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அடுத்த கட்டமாக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த உள்ளனர்.

    விரைவில் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென்று தலைமை கழகத்துக்கு வந்தார்.

    இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று மாலையில் அவசர அழைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் முக்கிய நிர்வாகிகள் அவசர அவசரமாக புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தனர்.

    காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றார்கள்.

    பின்னர் கூட்ட அரங்கில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், நத்தம் விசுவநாதன் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை. ரவி, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, கே.பி.கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக கட்சி அலுவலகம் உடைக்கப்பட்டதை சீரமைத்து இருந்ததை பார்வையிட்டார்.

    பின்னர் கீழ்தளத்தில் சீரமைக்கப்பட்ட தனது அலுவலகத்தில் அமர்ந்து சிறிது நேரம் டி.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சிலருடன் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார்.

    • ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
    • தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத்தலைமை போட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கிட்டத்தட்ட பின்தங்கிய கதைதான். அவர் வீசிய அஸ்திரங்கள் எல்லாம் அவரை நோக்கியே திரும்பி வந்ததால் அடுத்து என்ன செய்யலாம் என்ற மந்திர ஆலோசனையில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தன்னை நோக்கி வந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

    ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக மகுடம் சூட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெறுவதற்கான தேர்தலை விரைவாக நடத்தி பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார்.

    ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தனக்கு ஆதரவு இருப்பதாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திலும் மனுவை தாக்கல் செய்து விட்டார். அடுத்ததாக தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளார்.

    இப்போதைய நிலையில் ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார். விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளராக தேர்வு பெற்று விட்டால் அதன்பிறகு யார் எப்படியெல்லாம் மோதுகிறார்கள் என்பதை பார்த்து விடுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

    அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமியின் வேகத்தை பார்த்து எடப்பாடின்னா சும்மாவா... என்று கெத்து காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்...

    ×