search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • கவுன்சிலர்கள் சொல்வதை மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதில்லை.
    • அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே மூடுகிறார்கள்.

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் கூறியதாவது:-

    கவுன்சிலர்கள் சொல்வதை மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதில்லை. மக்கள் பிரச்சினை குறித்து அவர்களிடம் தெரிவிக்கும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை வேண்டுமென்றே மூடுகிறார்கள். அம்மா உணவகம், அம்மா கிளினிக் போன்றவற்றை படிப்படியாக மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் பங்கேற்கவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடப்பதால் மக்கள் பிரச்சினை பேச வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம்.
    • அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த தமிழகம், இன்றைய விடியா தி.மு.க. ஆட்சியில் அழிவுப்பாதைக்கே சென்று விட்டது.

    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.

    சமூக விரோத சக்திகளும், கொடுஞ்செயல் புரிவோரும் இந்த ஆட்சி தங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது போல் பல்வேறு குற்றங்களைப் புரிந்து, மக்களை மிரட்டி வருகிறார்கள்.

    சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன்கள், பேட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெரியவில்லை.

    சென்னை, எண்ணூரைச் சேர்ந்த ரவுடி, வழக்கு ஒன்றில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறையின் உதவி ஜெயிலர், ஜெயிலில் திடீர் சோதனை நடத்தும்போது, மேலே குறிப்பிடப்பட்ட கைதியிடமிருந்து செல்போன்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்திருக்கிறார் என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கைதி, உதவி ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 27.8.2022 அன்று கடலூர் சிறை வளாகத்திற்கு அருகில், காவலர் பாதுகாப்புடன் கூடிய காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிலர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீசி எரித்திருக்கிறார்கள். உதவி ஜெயிலர் வெளியூர் சென்றிருந்ததாலும், அவருடைய குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்ததாலும் உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதே போன்று, தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை தாராளமாகக் கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேர்மையான முறையில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரியை அச்சமூட்டும் வகையில், அவரது வீடு தாக்கப்படும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    அதே நேரம், சமூக விரோதிகள் சகல வசதிகளுடன் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் ராஜநடை போடுகிறார்கள். கடந்த 10 ஆண்டு கால அம்மாவின் ஆட்சியில், பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பாதுகாப்போடு இருந்ததை இப்போது உணர்கிறார்கள். தற்போது, பட்டப்பகலில் கூட வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் அச்சப்படுகிறார்கள்.

    அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த தமிழகம், இன்றைய விடியா தி.மு.க. ஆட்சியில் அழிவுப்பாதைக்கே சென்று விட்டது.

    முதல்-அமைச்சரின் காதுகளில், அவரை பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையோ? மக்களைக் காக்க திறமையில்லாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத்தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும்.

    இல்லையென்றால், விடியா தி.மு.க. அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அ.தி.மு.க. ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
    • அரசியல் களத்திலும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.

    கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி), அல்லது 2-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக கடந்த முறை சென்னை ஐகோர்ட்டில் அளித்த உத்தரவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துதான் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த முறை இவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமா? இல்லை மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் களத்திலும் இந்த தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இருக்கும் நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமாக இருந்த அய்யப்பன் எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணிக்கு தாவி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதில் எந்த மாதிரியான உத்தரவு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிகரித்து உள்ளது.

    மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே உத்தரவு வரும் என்று எடப்பாடி அணியினர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் மீண்டும் தங்களுக்கு ஆதரவான உத்தரவே ஐகோர்ட்டில் வரப்போகிறது என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். தரப்பு இணைந்து செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தும் அதனை ஏற்க எடப்பாடி மறுத்து விட்டதால் இருதரப்பிலும் 2 அணிகளாகவே செயலாற்றி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இருக்கும் நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அ.தி.மு.க.வில் 65 எம்.எல்.ஏ.க்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மட்டுமே இருந்து வந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமாக இருந்த அய்யப்பன் எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணிக்கு தாவி உள்ளார்.

    இவரை போன்று பல எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். தரப்பினர் முயற்சித்து வருகிறார்கள். இப்படி 40 எம்.எல்.ஏ.க்களையாவது தங்கள் அணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பம்பரமாக சுழன்று செயலாற்றி வருகிறார்கள்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பி.எஸ். அணியின் முன்னணி நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது ஐகோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். தரப்பினரின் இந்த முயற்சிக்கு சசிகலா, தினகரன் இருவரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களோ ஓ.பி.எஸ்.சின் இந்த ஆள் பிடிக்கும் வேலை எடுபடாது என்றே கூறுகிறார்கள். எங்கள் பக்கம் இருக்கும் யாரும் ஓ.பி.எஸ். பக்கம் செல்வதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

    ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்ததையும், பொருட்களை திருடி சென்றதையும் எந்த அ.தி.மு.க. தொண்டனும் மறக்கவில்லை. எனவே அவர் பின்னால் செல்வதற்கு எடப்பாடி அணியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் ஓ.பி.எஸ். அணியின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்காது என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    எனவே ஐகோர்ட்டு தடைகளை தகர்த்து எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையுடன் அ.தி.மு.க.வை வழி நடத்துவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • பணம் பாதாளம் வரை பாயும், முதல்கட்டமாக அய்யப்பனை பிடித்துள்ளனர்.
    • அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்க்கு என்றுமே இடம் கிடையாது.

    மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகர் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை சென்னையில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் பிடிக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் தாவுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. பணம் பாதாளம் வரை பாயும். தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இடம் பணம் கோடிக் கோடியாக உள்ளது. முதல்கட்டமாக அய்யப்பனை பிடித்துள்ளனர்.

    அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை. தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தார். பன்னீர்செல்வம் மகா நடிகர், இவர் நடிகனாக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார்.

    தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர் செல்வத்தின் செயல்பாடு இருந்தன அதிமுகவில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ்க்கு என்றுமே இடம் கிடையாது. சுருக்கமான சொல்ல வேண்டும் என்றால் கறந்த பால் மடிபுகாது, கருவாடு மீனாகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் விலகி செல்வது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஒரு சிலர் விலகி தங்கள் பக்கம் வருவது ஓ.பி.எஸ். தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. யார் பக்கம்? என்பதை நிரூபிப்பதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கிறார்கள்.

    பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

    நிர்வாகிகள் ஆதரவு தன் பக்கம் இருப்பதால் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நம்புகிறார்கள்.

    இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்களை தன்பக்கம் இழுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் ஓ.பி.எஸ். எடுத்து வருகிறார்.

    இதற்காக மாவட்டம்தோறும் ஆட்களை நியமித்து அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் பதவிகள் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.

    சசிகலா, தினகரன் ஆகியோரும் இணைய போவதால் எதிர்காலத்தில் கட்சி நம் வசமாகும். எங்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்று பேசி பேசியே மனதை மாற்றி வருகிறார்கள்.

    இதற்கு ஓரளவு பலன் கிடைத்து வருவதாகவே கூறுகிறார்கள்.

    சமீபத்தில் நடிகர் பாக்கியராஜ் ஓ.பி.எஸ். பக்கம் சேர்ந்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பனும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார்.

    மேலும் பல எம்.எல்.ஏக்கள் வரவிருப்பதாகவும், அது, பரம ரகசியம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.

    இதன் மூலம் பலரை இழுப்பதற்கான முயற்சிகள் நடப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் விலகி செல்வது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இதை தடுக்கவும், கட்சியினரிடையே நம்பிக்கையை ஊட்டவும் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    பொதுக்குழு வழக்கு தீர்ப்பு இன்னும் 2 நாட்களில் வரவுள்ளது. அதன் பிறகு சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தயாராகும் என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    இந்த சுற்றுப்பயணத்தை திண்டுக்கல்லில் இருந்து தொடங்கவும் ஆலோசித்து வருகிறார்கள். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு முதல் முதலில் தேர்தலை சந்தித்தது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்தான். அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

    எனவே அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னம் அறிமுகமான திண்டுக்கல்லில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஒரு சிலர் விலகி தங்கள் பக்கம் வருவது ஓ.பி.எஸ். தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் தனித்தனி அணியாக நின்றனர். அப்போது தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தார்கள்.

    அதே போல்தான் இன்றைக்கும் உண்மை நிலையை அறிந்த பிறகு தான் தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைகிறார்கள். அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்தி செயல்படுத்த மாவட்டம்தோறும் புரட்சிப்பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.

    இப்படி இருவரும் போட்டி போட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இரண்டு தரப்பிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    தங்கள் பலத்தை காட்ட மாவட்டங்களில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    • உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
    • ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்துக் சொல்ல முடியும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில்  ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தொண்டர்கள் ஆதரவும், பொதுமக்கள் ஆதரவும் எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.

    எம்ஜிஆர் மறைந்தபோது அம்மா அணி, ஜானகி அம்மா என இரண்டு பிரிவுகளாக தேர்தலை சந்தித்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர். அதேபோல் இன்றைக்கும் அனைவரும் ஒற்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்து வலுவாக உள்ளது.

    தொண்டர்கள் அனைவரும் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கடந்த 11ந் தேதி பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் (எடப்பாடி பழனிசாமி தரப்பினர்) நாடகம் நடத்தினர். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்துக் சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சசிகலா, டிடிவி தினரகரனை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா? என்று செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் அரசியலில் பயணித்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என குறிப்பிட்டார். முன்னதாக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    • கடந்த 24-ந் தேதி பொள்ளாச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆறுக்குட்டி தி.மு.க.வில் இணைந்தார்.
    • துடியலூரை சேர்ந்த நாகராஜ் என்ற அ.தி.மு.க. தொண்டர் தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கோவை:

    கோவை அருகே உள்ள விளாங்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுக்குட்டி.

    இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.

    மேலும் இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு சென்று ஜமாப் அடித்து நடனம் ஆடுவார்.

    அவருக்கு கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2 முறை போட்டியிட்ட ஆறுக்குட்டி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் குழப்பம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ். அணிக்கு தாவினார். அதன் பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலில் ஆறுக்குட்டிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலாவுக்கு ஆதரவாளராக மாறினார்.

    இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி பொள்ளாச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆறுக்குட்டி தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்த நிலையில் துடியலூரை சேர்ந்த நாகராஜ் என்ற அ.தி.மு.க. தொண்டர் தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அ.தி.மு.க. தொண்டர் நாகராஜ்: அண்ணா வணக்கம்னா...

    ஆறுக்குட்டி: வணக்கம் யாருங்க..

    நாகராஜ்: நான் துடியலூர் நாகராஜ் பேசுறங்க.. துடியலூர் பகுதிங்க..

    ஆறுக்குட்டி: சொல்லுங்க..

    நாகராஜ்: அண்ணா ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க..

    நாகராஜ்: உங்களுக்காக விடிய, விடிய பாடுபட்டோம்ல.... இந்தமாதிரி பண்ணி போட்டீங்களே.. நயவஞ்சகம் பண்ணிட்டீங்கண்ணா.. உங்க சூழ்நிலை எப்படினு எனக்கு தெரியாது. ஆனா நீங்க பண்ணுனது தப்புங்க...

    நாகராஜ்: நீங்க டேய் அத பண்ணுங்க, இதை பண்ணுங்க என சொல்லும் போது உரிமைக்கு கட்டுப்பட்டு வேலை செய்தோம்ல...

    ஆறுக்குட்டி: இதுவரைக்கும் டேய்னு கூப்பிட்டு இருப்பனா.....

    நாகராஜ்: இல்லீங்க.. உங்களுக்காக நாங்க உயிரே கொடுத்து பாடுபட்டோம்ல அண்ணா... நல்லா யோசிங்க அண்ணா.. நீங்க பேசாம இருந்து இருந்தால் நாங்க என்ன வேணுமானாலும் பண்ணிருப்போம்ல.

    உங்களுக்காக உயிர் கொடுத்தது தொண்டர்கள் தான்.... அம்மா 2 தடவ எம்.எல்.ஏ. பதவி கொடுத்து அழகு பாத்துச்சுல அண்ணா....

    ஆறுக்குட்டி: எனக்கு துரோகம் பண்ணுனா ஏத்துக்கணுமா......

    நாகராஜ்: தொண்டர் கிட்ட நீங்க குமுறி இருக்கணும்ல அண்ணா.... நீங்க எங்க யாரையாவது தொடர்பு கொண்டீங்களா நீங்களே ஒரு முடிவு எடுத்து செய்துடீங்களே....

    ஆறுக்குட்டி: டேய் நீ யாரு... நீ யாருனு கேட்கிறேன் நானு....

    நாகராஜ்: அண்ணா நான் உங்களுக்காக பாடுபட்டவண்ணா...

    ஆறுக்குட்டி: பாடுபட்டவண்ணா நேருல வா..... 2 பேரும் பேசிக்கலாம். போன்ல பேசாத நல்லா இருக்காது.

    நாகராஜ்: அண்ணா நீங்க உரிமையா....

    ஆறுக்குட்டி: நா என்னா கேட்கிறேன் இங்க பாரு.. நேருல வந்து பேசு....

    நாகராஜ்: நேருல வந்து பேசவா அண்ணா, ஆனா அண்ணா நீங்க பண்ணுனது தப்புண்ணா....

    ஆறுக்குட்டி: நேருலவான்னு சொல்லிட்டனுல....

    நாகராஜ்: நயவஞ்சகம் அம்மாக்கு நயவஞ்சகம் பண்ணீட்டீங்கண்ணா.. நான் சொல்லுற ஓரே வார்த்த அதான்..

    நாகராஜ்: டேய்னு பேசக்கூடாதுங்க.. ஒருமையில் பேசினால் ஒத்துக்கமாட்டன் நானு.....

    ஆறுக்குட்டி: எடப்பாடி சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனாரு, அவர போயி பாரு..

    நாகராஜ்: ஏண்ணா சசிகலாவுக்கு நீங்களும் தான துரோகம் பன்னுணீங்க..

    நாகராஜ்: நீங்க.. அப்புறம் எதுக்கு ஓ.பி.எஸ். கிட்ட வந்தீங்க..

    ஆறுக்குட்டி: நா எதுக்குடா... டேய்... போன வைடா....

    நாகராஜ்: அண்ணா வாடா போடானு பேசாதீங்கண்ணா...

    என பேசிக்கொண்டு இருக்கும் போதே செல்போன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

    • கட்சியில் பொதுக்குழுவே முக்கியமானது. மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்தனர்.

    கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறினார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கட்சியில் பொதுக்குழுவே முக்கியமானது. மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், "மிகப்பெரிய இயக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டது" என்றனர்.

    வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அல்லது 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    • ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் அதிருப்தியில் இருப்பவர்கள்.
    • எந்த பக்கமும் சேராமல் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பற்றிய பட்டியல் தயாரித்து உள்ளார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இரு அணிகளும் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கோர்ட்டில் தெரிவித்து விட்டனர்.

    பெரும்பான்மையான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருக்கிறார்கள். எனவே அந்த அணி பலமாக உள்ளது.

    இருப்பினும் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தும் ஆதரவாளர்களை திரட்டியும் தனியாக பொதுக்குழுவை கூட்டியும் சட்டப்படி நெருக்கடி கொடுத்து கட்சியை கைப்பற்றுவதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருகிறார்.

    இதன் ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்கள் அதிருப்தியில் இருப்பவர்கள். எந்த பக்கமும் சேராமல் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பற்றிய பட்டியல் தயாரித்து உள்ளார்கள்.

    அவர்களை நேரில் சந்தித்து பேசவும் மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்துள்ளார்கள். இந்த குழுவினர் வீடு வீடாக சென்று அவர்களை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கட்சியின் உள்கட்சி நிலவரங்களையும், எதிர்காலத்தை பற்றியும் எடுத்து சொல்கிறார்கள்.

    பின்னர் அங்கிருந்த படியே ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுக்கு போன் போட்டு அவருடன் நேரில் பேச வைக்கிறார்கள்.

    அப்போது அவர்களிடம் பேசும் ஓ.பி.எஸ். மகன் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார். 'அண்ணே வாங்க, எதிர்காலம் நல்லாயிருக்கும் யோசிச்சு முடிவு எடுங்கள்' என்றும் கூறி வருகிறார்.

    அதை கேட்டு பலர் ஓ.பி.எஸ். தலைமை ஏற்று சேர்ந்து வருகிறார்கள். நேற்று நடிகர் பாக்கியராஜ் இணைந்தார். அதை போல் பல நிர்வாகிகள் இப்போது இணைந்து வருகிறார்கள். முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் இணைந்து உள்ளார்கள்.

    • திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது.

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கும், தினந்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

    ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும். ஏற்கெனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழத்தை மூடியதன் மூலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை திமுக அரசு பறித்தது.

    இப்பொழுது, இந்த செயல்படாத, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது. ஜெயலலிதா அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமையில் நாளை ( சனிக் கிழமை ) காலை திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

    மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராயப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை முறைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
    • இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளி சென்றனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகியான மகாலிங்கம் ராயப்பேட்டை போலீசில் கடந்த 11-ந்தேதியே புகார் அளித்திருந்தார். இதன் பின்னர் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், அ.தி.மு.க. அலுவலகத்தில் திருட்டு போன பொருட்கள் என்னென்ன, சொத்து ஆவணங்கள் எவை? என்பது பற்றி விரிவாக புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 147, 148, 454, 380, 409, 427, 506(2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராயப்பேட்டை போலீசார், அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றபோது தமிழக அரசின் தரப்பில் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை முறைப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான ஓ.பன்னீர் செல்வம் ஆதவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து 300 பேர் அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து பொருட்களை திருடிச் சென்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 300 பேருக்கும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் ராயப்பேட்டை போலீசார் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உள்ளனர்.

    இந்த வீடியோக்களை போட்டு பார்த்தும் சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்பவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து அந்த ஆவணங்கள் தற்போது எங்கு இருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறைப்படி கிடைக்க பெற்றதும் இதற்காக தனி விசாரணை அதிகாரி இன்று நியமிக்கப்பட உள்ளார். டி.எஸ்.பி. அல்லது இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    இதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் போது அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் சென்று பொருட்கள் திருடிச் சென்ற அறை, பீரோக்கள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பார்த்து தடயங்களை சேகரிக்க உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுலகத்துக்குள் ஒரு மாதம் யாரும் செல்லக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டி ருந்த நிலையில் அந்த தடை கடந்த 20-ந்தேதி விலகி விட்டது. இதன் பின்னரும் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் கடந்த ஒரு வாரமாக யாருமே அனுமதிக்கப்படவில்லை. வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. தலைமை கழகமே முடிவெடுத்து யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அலுவலகத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து பொருட்களை திருடிச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தம் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவற்றில் ஐ.பி.சி. 380 (திருட்டு), ஐ.பி.சி. 454 (அத்துமீறி நுழைதல்), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளும் போடப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் மீது இந்த சட்டப் பிரிவுகள் பாய்ந்து உள்ளன. இந்த 3 சட்டப் பிரிவுகளும் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளாகும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

    ×