search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    • விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை விரிவாக எடுத்து வைக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதன்படி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அதிரடியாக அவர் தீர்ப்பளித்தார். இது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பு உள்ளது.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 18-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் விஜய் நாராயண் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் திங்கட்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்படாத நிலை இருக்கும்போது இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்கிற தனி நீதிபதியின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.

    நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை விரிவாக எடுத்து வைக்கிறார்கள்.

    அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு நடத்தப்பட்ட விதம் பற்றியும், அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளும் அப்போது கோர்ட்டில் தெரிவிக்கப்படுகின்றன.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுவில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு இந்த வழக்கில் விரிவான பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை நடைபெறும் விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் நாளை நடைபெறும் வழக்கு விசாரணையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார்.
    • எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும்.

    நெல்லை:

    சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும்., ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.

    வருகிற 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம்.

    சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். சட்டப் போராட்டம் என்பது முதல் படிதான். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.

    உண்மையான அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தான் இருக்கிறது. ஓ. பன்னீர் செல்வம் அழைப்பை எதிரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொள்வார்கள்.

    தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார். எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓ. பன்னீர்செல்வத்தின் விருப்பம். அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.

    சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா இருந்த போதே பிளவுபட்ட அ.தி.மு.க.வால் சாதிக்க முடியவில்லை.
    • ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் கட்சிக்கு பலம் என்பதை அவர்களிடம் சொல்லி யோசிக்க வையுங்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை பொறுத்தவரை பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கிறார்கள்.

    அதன் அடிப்படையில் தான் ஒற்றைத்தலைமை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர் செல்வத்தின் சமரச திட்டங்களையும் அவர் நிராகரித்து விட்டார்.

    ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை கட்சியினர் தங்கள் பக்கம் வருவார்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம். இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பில் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் பலர் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊரான தேனிக்கு சென்று விட்டார்.

    அங்குள்ள பண்ணை வீட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரும் அ.தி.மு.க.வுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விட்டார். ஆனாலும் கட்சியினர் மத்தியில் எந்த சலனமும் இல்லை.

    தனியாக பொதுக்குழுவை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அதன் மூலம் சட்டப்போராட்டத்தில் வெல்ல முடியும் என்று கருதுகிறார்.

    அ.தி.மு.க.வில் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கடந்த ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்த பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர். இதுவே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது.

    ஆனால் அப்போதைய பரபரப்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டி சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    இப்போது நிலை மாறி இருக்கிறது. விட்டுக் கொடுக்காத தலைவர்களால் கட்சி கெட்டுப்போகுமா என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக்கி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் இழுப்பதற்கான வியூகத்தை ஓ.பி.எஸ். வகுத்துள்ளார்.

    அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இது தொடர்பாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

    மாவட்டங்களில் இருக்கும் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பேசுங்கள். எடப்பாடி பழனிசாமி தனியாக நிற்பதால் அ.தி.மு.க. வெல்ல முடியுமா?

    ஜெயலலிதா இருந்த போதே பிளவுபட்ட அ.தி.மு.க.வால் சாதிக்க முடியவில்லை. எனவே ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் கட்சிக்கு பலம் என்பதை அவர்களிடம் சொல்லி யோசிக்க வையுங்கள்.

    அதன்மூலம் அவர்களை நம் பக்கம் இழுங்கள். நமது பலத்தை நாம் நடத்தும் பொதுக்குழுவில் நிரூபிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    தற்போது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சொந்த கட்சியினரை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதுபற்றி ஓ.பி.எஸ். தரப்பு நிர்வாகிகள் சிலர் கூறும்போது, "கட்சியினர் பிளவுபட்டு நிற்பதை தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாங்கள் வெற்றி பெறுவது உறுதி" என்றனர்.

    • காற்றாலை மின்சாரம் என்பது முற்றிலும் வானிலையை, குறிப்பாக காற்றின் வேகத்தை பொறுத்து கிடைக்கக்கூடியது.
    • கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 28.11 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை என்பது 350 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 13 மின் பகிர்மானக் கழகங்கள் மின்சாரத்தை வாங்க அல்லது விற்பதற்கான எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் பங்கேற்க மத்திய அரசின் நிறுவனம் தடை விதித்து உள்ளது.

    இதற்குக் காரணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்து 17-08-2022 வரை 926 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தாததுதான் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மின்சாரத்துறை அதிகாரிகள், மின்சாரத்தின் தேவை தற்போது குறைந்து இருப்பதாகவும், காற்றாலை மூலம் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருவதாகவும், நிலுவைத் தொகையான 926 கோடி ரூபாயை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இதுகுறித்து பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், அமைச்சரோ 70 கோடி ரூபாய் தான் நிலுவைத் தொகை என்கிறார்!

    இருப்பினும், காற்றாலை மின்சாரம் என்பது முற்றிலும் வானிலையை, குறிப்பாக காற்றின் வேகத்தை பொறுத்து கிடைக்கக்கூடியது. கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் குறைந்து கொண்டே வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 28.11 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை என்பது 350 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

    மின்சாரத் தேவை என்பது எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரமே மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில், எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்கி, மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயத்தை போக்கவும், வருங்காலங்களில் இது போன்ற சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார்.
    • அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து விட்டார்.

    ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    இதில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணையரை நியமிக்க கோர்ட்டை நாடலாம் என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன. இந்த தீர்ப்பை அடுத்து தான் கூட்டுத்தலைமையோடு மீண்டும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    அவர் மேலும் கூறும் போது, 'ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க.வுடன் தொடர்பு கொண்டவர்கள். நாங்கள் கோவிலாக கருதும் ஜெயலலிதாவின் அறையையே உடைத்து சூறையாடியவருடன் இனி எந்த காலத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை' என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல கோர்ட்டு விதித்து இருந்த தடையும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. எனவே தலைமை கழகத்துக்கு செல்ல அனுமதி கேட்டு அடுத்த வாரம் மனு செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து வைத்திலிங்கம் அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

    அப்போது நமக்குள் பிரச்சினை வேண்டாம். எல்லோரும் இணைந்து செயல்படுவோம். கட்சி நிர்வாகிகளாக இரு தரப்பிலும் பாதி பேரை நியமித்தால் போதும். பிரச்சினையை வளர்க்க வேண்டாம். வாங்க பேசலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    வைத்திலிங்கத்தின் இந்த சமரச உடன்பாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்கவில்லை. கூட்டுத் தலைமை, பாதி பாதி நிர்வாகிகள் என்ற நிபந்தனையை கைவிட்டு விட்டு வாருங்கள். அப்புறம் யோசிக்கலாம் என்று கண்டிப்புடன் கூறி விட்டனர்.

    வைத்திலிங்கத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அப்பாவுக்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் களம் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் நாம் பேசி சரி கட்டலாம் என்ற முடிவோடு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டுள்ளார். 3 முறை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி பேசாமல் தவிர்த்து விட்டார்.

    அப்பா செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன செய்யும். இப்போது நாம் எடுத்திருக்கும் முடிவுகள் நிர்வாகிகள் எடுத்த முடிவு. இந்த முடிவை எப்படி மாற்ற முடியும். அந்த பிள்ளைகளிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டுள்ளார்.

    கோர்ட்டு தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலர் தன் பக்கம் வருவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் எதிர்பார்த்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சமரச முயற்சிகளும் பலன் அளிக்காததால் கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கோபத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார்.

    சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார். அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் பட்டியல் தயாரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 800 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி இருக்கிறார்கள். திங்கள்கிழமை புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிறது.

    அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டவும் முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். பொதுக்குழுவை கூட்ட கோர்ட்டு அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில்தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
    • தொண்டர்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கொள்கை.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் அ.தி.மு.க.வை வழிநடத்தினார்.

    இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்ற சவால்களை முறியடித்தார். 17 லட்சம் தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அவர் 16 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சி தந்தார்.

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக அர்ப்பணித்தார்.

    இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தபோது அதை வெல்வதற்கு இன்று தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை புரட்சித் தலைவியும், எம்.ஜி.ஆரும் உருவாக்கி தந்தார்கள்.

    சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில்தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் தம்பிகளாக, அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

    கேள்வி:- சசிகலா, தினகரன் ஆகியோர் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?

    பதில்:- எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடன் இருந்து இந்த இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள். இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், அம்மாவின் காலத்தில் இந்த இயக்கத்துக்கு பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு கழகம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

    கேள்வி:- இதில் சசிகலாவும், தினகரனும் இருக்கிறார்களா?

    பதில்:- அவர்கள் எங்களோடு வரவேண்டும் என்றும், நாங்கள் அவர்களோடு போக வேண்டும் என்றும் எந்த நிலையும் இல்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    கேள்வி:- சசிகலா பெயரை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?

    பதில்:- யாராக இருந்தாலும் என்று சொல்லி விட்டேன். இதில் சின்னம்மாவும், டி.டி.வி. தினகரனும் இருக்கிறார்கள். அவர்கள் வந்து சேருகிறார்களா? நாங்கள் போய் சேருகிறோமா என்ற பிரச்சினையே இல்லை. எல்லோரும் எம்.ஜி.ஆர். அம்மாவின் குடையின் கீழ் இருந்து வாழ்பவர்கள். 30 ஆண்டுகாலம் ஆளுகின்ற பொறுப்பை வகித்த கட்சி. இது வரலாறு. இந்த வரலாறு மீண்டும் வர வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணமாகும். தொண்டர்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய கொள்கை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 9 மணி அளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசரடி இயற்கை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டார். அதன் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தார்.

    • நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம்.
    • நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், 'அ.தி.மு.க. சார்பில் ஜூன் 23-ந்தேதி, ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்கள் செல்லாது. ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது.

    ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்' என்று கூறினார்.

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வம், அ.தி. மு.க.வில் கூட்டு தலைமையாக இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும்.

    கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை.

    எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

    கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.

    அம்மாவின் மறைவுக்கு பிறகு தர்மயுத்தம் தொடங்கப்பட்டு அதற்கு பிறகு கழகத்தின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள், எண்ணப்படி கூட்டுத் தலைமையாக அ.தி.மு.க. செயல்படும் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கழகத்தின் சட்ட விதிப்படி எங்களின் பணிகளை நிறைவாக ஆற்றினோம்.

    அவரிடமும், எங்களிடமும் எந்தவித குறைபாடும் இல்லை. இரட்டை தலைமையா என்பதில் பிரச்சினை கிடையாது. கூட்டு தலைமையில் தான் அ.தி.மு.க. செயல்படும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பது 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது.

    அனைவரும் இணைந்து கழகத்தை முழு வலிமையோடு கொண்டு செல்வது தான் எங்கள் எண்ணம். அம்மா சொன்னது போல் 100 ஆண்டுகளை நோக்கி கழகம் பயணிக்கும். எங்கள் எண்ணம், செயல் எல்லாமே இணைப்பு என்பதுதான். நாங்கள் அழைப்பு விடுப்பதற்கு காரணம் எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. ஏற்கனவே நடந்தவைகளை நாங்கள் தூக்கியேறிந்து விட்டோம். அவை தொலைந்து போகட்டும். இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து உளளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு காலக் கட்டத்தில் 2 அணியாக பிரிந்து இருந்தது. இரண்டு அணியும் 2017-ல் இணைந்தது. ஓ.பி.எஸ். வெளியில் இருந்தார். பிறகு நானும், அவரும் இணைந்தோம். மூத்த தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றாக கூடி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் 2 அணியும் ஒன்று சேர்க்கப்பட்டது.

    அப்போது பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்த பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்ந்து எடுக்கப்பட்டது. பொது உறுப்பினர்களால் அல்ல.

    அப்போது சில சட்ட திட்ட விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை ஒன்றாக இருந்த காரணத்தினால் 2 பேருக்கும் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததால் அதை தனியாக எடுத்து சட்ட விதிகளை உருவாக்கினோம்.

    பொதுச்செயலாளருக்கு சமமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. கூடவே விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் பிறகு இணைந்து தேர்தலையும் நடத்த வேண்டும். எங்களது சட்ட திட்ட விதிப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த சட்ட திட்ட விதிகளை அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கிளை கழக தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட்டது.

    அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வருகிறோம்.

    பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பொது உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து கூடுகின்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்று இருக்கிறது.

    ஏனென்றால் செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அ.தி.மு.க. சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது.

    அதனால் தேர்தல் நடைபெறுகின்ற போது இந்த தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோம்.

    இந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது. இதுதான் நடைபெற்ற சம்பவம்.

    இவர்கள் எப்படி ஒற்றை தலைமையை கொண்டு வர முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். எங்களுடன் பிரிந்து சென்றவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

    நீதிமன்றத்தில் கூட இதை முன்வைத்தார்கள். 2663 பேர் மட்டுமே முடிவு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்கள்.

    இந்த 2663 பேரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். யாரும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். இது தான் வரலாறு. இதன்படி தான் கட்சி நடக்கிறது.

    கூட்டு தலைமையாக இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த அழைப்பை ஏற்க இயலாது. அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். ஏற்கனவே தர்ம யுத்தம் சென்றார். யாரை எதிர்த்து சென்றார். அவருக்கு பதவி வேண்டும். பதவி இல்லாமல் இருக்க முடியாது.

    உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும் என்பது தான் அவருக்கு முக்கியம். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலை இல்லை. இணைவோம் என்பதை எதன் அடிப்படையில் வைத்து அவர் எப்படி சொல்கிறார்.

    கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ரவுடிகளை ஏவி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடி சென்று உள்ளனர். தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடன் எப்படி இணைய முடியும்.

    அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கிய போது தீய சக்தி தி.மு.க. அதை வேரோடு ஒழிப்பது தான் எனது முதல் கடமை என்று சொன்னார். அவரோடு ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு வைத்திருக்கிறார். அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறப்பான ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பாராட்டுகிறார்.

    இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவருடைய மகனே, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியை புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்? தி.மு.க.வுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.

    எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி தான் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறுகிறோம். நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. சொந்த காலில் நின்றுதான் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

    பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

    பதவி இல்லை என்றால் தர்மயுத்தம் செய்வார். யாரும் வேண்டாம் என்பார். மீண்டும் பதவி வேண்டும் என்றால் எல்லோரையும் சேர்த்துக்கொள்வோம் என்பார். இதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. நாங்கள் 15 நாட்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    ஆனால் அவர் ஒற்றை தலைமைக்கு ஒத்துவரவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தின் படிதான் கட்சி நடத்த முடியும். கட்சியின் சட்டத்திட்ட விதிகளை மதிக்க வேண்டும். பெரும்பான்மை கட்சி தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை பிரதிபலிக்க வேண்டும். மக்கள் எண்ணத்தின்படி கட்சி நடத்தினால் தான் ஆட்சிக்கு வர முடியும்.

    அவருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் பொதுக்குழுவுக்கு வந்து நிரூபிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.
    • ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று 3 முறை மக்களின் மனம் கவர்ந்த முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    அவரது மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டு காலம் அ.தி.மு.க.வை வழிநடத்தினார்.

    இந்த இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்ற சவால்களை முறியடித்தார். 17 லட்சம் தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அவர் 16 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சி தந்தார்.

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக அர்ப்பணித்தார்.

    இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்த போது அதை வெல்வதற்கு இன்று தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை புரட்சித் தலைவியும், எம்.ஜி.ஆரும் உருவாக்கி தந்தார்கள்.

    சின்னச்சின்ன பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையில் தான் தி.மு.க. ஆளுகின்ற கட்சியாக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி இருக்கிறது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் அம்புகளாக, அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து தந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

    எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வந்த காரணத்தால் சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று அ.தி.மு.க.வுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அசாதாரண சூழ்நிலைகளை எங்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும்.

    கழகத்திற்காக எம்.ஜி.ஆர்., அம்மா செய்த தியாகங்களை எண்ணி மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆளுகின்ற பொறுப்பை மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்பதை நான் இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

    நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு பாதிப்பாக இருந்தது என்று எந்த காலத்திலும் செல்ல மாட்டேன். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளின் காரணமாக இன்றைக்கு அ.தி.மு.க.வில் இருக்கின்ற 1½ கோடி தொண்டர்களுடைய மனதிலும் நல்லாட்சி தந்த எம்.ஜி.ஆர்., அம்மா மீது பாசம் கொண்ட தமிழக மக்களும், இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து இந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

    எனவே இதற்கு முன்னால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் யாரும் இனிமேல் அதை மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு கழகத்தின் ஒற்றுமையையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

    எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து வெளியேற்றியதன் காரணமாகத்தான் அ.தி.மு.க. உருவானது. அதன் பிறகு தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற நிலை வரும் போது அ.தி. மு.க. தான் அதிகமான தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பை தமிழக மக்களிடம் பெற்றது.

    இன்று தி.மு.க. ஆளுகின்ற நிலை இருக்கிறது. அ.தி.மு.க.வை பொறுத்த வரை ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்க்கட்சியாக அவர்கள் மக்கள் விரோத போக்கை கையில் எடுக்கின்ற போது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களோடு 50 ஆண்டு காலம் இருவரும் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அம்மா காலமான பிறகு 4½ ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த பொழுதும், அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்து இருக்கிறோம்.

    கழகத்தின் ஒற்றுமைக்காக பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வரவேண்டும் என்பது தான் எங்களின் தலையாய எண்ணம், கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தானாகவே செல்லாததாகி விட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பால் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் புரட்டிப் போடப்பட்டுள்ளது.

    ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இரு தரப்பும் மாறி மாறி கோர்ட்டை நாடி வருவதால் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு அரசியல் களத்தை அதிர வைக்கிறது.

    கடந்த மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானார். தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். வங்கி கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு சென்றது.

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாகவும் ஆர்.பி.உதயகுமாரை துணைத்தலைவராக நியமித்துள்ளதாகவும் சபாநாயருக்கு கடிதம் அனுப்பினார். ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டு அந்த பதவிகளில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    தற்போது சென்னை ஐகோர்ட்டு வழங்கி இருக்கும் தீர்ப்பால் மொத்த நிர்வாக அமைப்பும் புரட்டிப் போடப்பட்டு உள்ளது. ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருப்பதால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லாததாகி விட்டது.

    எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் தானாகவே செல்லாததாகி விட்டது. தற்போதைய நிலையில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட வேண்டும்.

    மீண்டும் பொருளாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்று விடும்.

    இந்த விவகாரத்தில் தவிப்புக்குள்ளாகி இருப்பது சாதாரண தொண்டர்கள் தான்.

    இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்து இருந்தார்.

    எனவே இப்போது இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்று தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

    • அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் இப்போதே தொடங்கி உள்ளனர்.
    • அடுத்த மாதம் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.திமு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலின் போது அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவுகளும் உடைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்ககோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக ஐகோர்ட்டு உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பரபரப்பான தீர்ப்பை அளித்தார்.

    கடந்த மாதம் 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    அ.தி.மு.க.வில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

    இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் இந்த பதவி செல்லாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமை பதவிக்கு ஏற்பட்டுள்ள இந்த சட்ட சிக்கலை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இரவு 10.30 மணி வரை நீடித்தது.

    அப்போது டெல்லியில் உள்ள மூத்த வக்கீல்களுடன் தொலைபேசி வாயிலாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மூத்த வக்கீல் விஜய் நாராயண் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் முன்பு முறையிட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் முந்தைய நீதிபதியின் தீர்ப்பே தொடர வேண்டும் என உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிடப்பட்டது. ஆனால் நீதிபதிகள் திங்கட்கிழமை வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் பொதுக்குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 5-ல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கூட்ட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    ஒற்றை தலைமை தீர்மானத்துடன் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்ய அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்தின் கையெழுத்தை பெறவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் சம்மதிக்காத பட்சத்தில் ஐகோர்ட்டை நாடி முறையிட எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    அப்போது கட்சியில் பொதுக்குழுவுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? என்பது பற்றி விரிவாக எடுத்துக்கூற எடப்பாடி பழனிசாமி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியினர் இப்போதே தொடங்கி உள்ளனர். அடுத்த மாதம் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பதவியை கொண்டு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது பற்றியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மீண்டும் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் அமர வைத்து விட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    • அ.தி.மு.க.வுக்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது.
    • தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.

    * கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது.

    * தர்மத்தை நம்பினேன் மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்.

    * அ.தி.மு.க.வை தனிநபர்கள் ஆக்கிரமிக்க நினைத்தால் அது எப்போதும் நடக்காது.

    * ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைத்தார்களோ அது இன்று நடந்துள்ளது.

    * அ.தி.மு.க.வுக்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது.

    * அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்

    * உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம்.

    * தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

    * எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம்

    * இரு தரப்பு என்பது கிடையாது, அ.தி.மு.க. ஒரே தரப்பு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    • ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்து தீர்ப்பு அவரது ஆதரவாளர்களையும், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட்டு இன்று அளித்துள்ள தீர்ப்பு கிடைத்துள்ளது. சட்டரீதியாக இதனை எதிர் கொள்வோம்.

    பொதுக்குழுதான் சர்வ அதிகாரம் படைத்தது. ஐகோர்ட்டு பிறப்பித்தள்ள உத்தரவில் ஆணையர் ஒரு வரை நியமித்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதுபற்றி அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

    அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீர்ப்பு விவரங்கள் முழுமையாக கிடைத்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    ×