search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • மேலமடை குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை

    மதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை அண்ணா பஸ் நிலையம், கே.கே. நகர், மேலமடை, தமுக்கம் மைதானம், கே.புதூர், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் மதுரை 36-வது வார்டுக்கு உட்பட்ட மேலமடை பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. தண்ணீர் வடியா மல் தேங்கி உள்ளதால் சேறும், சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் செய்தனர். இருந்தபோதிலும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை விரகனூர் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்றன. அதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே பொது மக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் மேலமடை குடியிருப்பு களுக்குள் புகுந்த மழை நீரை அகற்றினால் தான் சாலை மறியலை கைவிடு வோம் என்று உறுதியாக கூறினர். இதை தொடர்ந்து 36-வது வார்டு மாநகராட்சி பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.

    • மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், கொடிப்பங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட உள்ள சவேரியார் பட்டினம் குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.

    உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மின் ஊழியர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களைக் கொண்டு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.

    விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது. மேலடுக்கு காற்று சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் இந்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் படிப்படியாக குறைந்து வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கோடை மழை தொடங்கியது. சுமார் 6 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் லேசான அடை மழை தொடர்ந்து பெய்ததால், வெப்பநிலை முற்றிலம் மாறி குளிர் காற்று வீச தொடங்கியது

    இன்று அதிகாலை 5 மணி முதல் வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்து வருகிறது. லேசான அடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் குளிரான சீதோஷ்னம் தொடர்ந்து நிலவி வருகிறது. பொதுமக்கள் கையில் குடையுடன் நடனமாடி வருகின்றனர். நேற்று மாலை பெய்த கனமழையால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு-

    எருமப்பட்டி 3 மி.மீ., குமாரபாளையம் 5.40 மி.மீ., மங்களபுரம் 5.80 மி.மீ., மோகனூர் 8 மி.மீ., நாமக்கல் 28 மி.மீ., பரமத்தி வேலூர் 16 மி.மீ., புதுச்சத்திரம் 20 மி.மீ., ராசிபுரம் 22 மி.மீ., சேந்தமங்கலம் 7 மி.மீ., திருச்செங்கோடு 8 மி.மீ., நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 33.5 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.

    • நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது.
    • கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 29 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்திருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது. நாட்டின் மத்திய பகுதியில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் பகுதிகள் மற்றும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் 18 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

    நாடு முழுவதும் பருவமழைக்கு முந்தைய கோடைகாலத்தில் இயல்பைவிட 28 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. அதேநேரத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 29 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்திருக்கிறது.

    பசிபிக் பெருங்கடலில் உருவாகும் அசாதாரணமான வெப்பமயமாதல் இந்திய வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பா ளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ. குன்னத்தூர், வடகரை யாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

    இதன் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள் , சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.

    பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.
    • கனமழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயிலடி , கான்வென்ட், ராமநாதன் ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் பஸ்களும், அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு , தனியார் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பயணிக்கின்ற இந்த வழியில் ரெயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது.

    ஆனால் மழை பெய்யும் நேரங்களில் இந்த ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் தேங்குகிறது.

    போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிந்து வெளியே செல்ல வழி இல்லாததால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மழை நேரங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளிவதற்கு வடிகால்கள் ஓரளவு சரி செய்யப்பட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.

    ஆனால் நிரந்தரமாக தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    நேற்று மாலை திடீரென பெய்த கன மழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி, வெளியேற முடியாமல் நிரம்பியதால் இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் ரெயிலடி, கான்வென்ட், ராமநாதன் வழியாக பழைய பஸ் நிலையத்திலிருந்து , புதிய பஸ் நிலையம் செல்பவர்களும், வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

    வருங்காலத்தில் இந்த மாதிரி நிலைமைகளை தவிர்த்திட, மழைக்காலம் வருவதற்கு முன்னர் நிரந்தரமாக ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளியேறுவதற்குரிய பணிகளை விரைவாக செய்து முடித்து தர வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • 3 நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
    • அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் தஞ்சையில் கனமழை கொட்டியது.

    தஞ்சை அடுத்த திருவையாறில் கனமழை பெய்தது.

    தொடர்ந்து இடைவிடாத பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    திருவையாறில் மட்டும் ஒரே நாளில் 70 மி.மீ. அளவுக்கு மழை கொட்டியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யுமா? அல்லது அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    திருவையாறு -70, திருக்காட்டுப்பள்ளி -55.40, பூதலூர் -53, அய்யம்பேட்டை -42, பாபநாசம்-32, தஞ்சாவூர் -25, வல்லம் -12.

    • 7-ந்தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    சென்னை :

    தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதுதவிர தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இந்தநிலையில் 7-ந்தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6, 7-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதேவேளை 5-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். அதாவது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    தென்கிழக்கு வங்க கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே 6-ந்தேதி மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல 7-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடம்பூர், கழுகுமலையில் தலா 10 செ.மீ. மழையும், எலந்தகுட்டை, மணியாச்சி, மூலைக்கரைப்பட்டி, தாளவாடியில் தலா 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 6-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக, 7-ந்தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வருகிற 8-ந்தேதி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், பின்னர் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது.

    புயல் உருவான பின்பு, அந்த புயலானது மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகரவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது உருவாகவுள்ள புயலானது மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பிருக்கும் என்பதால் தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்றானது கடல்பரப்புக்கு செல்லும் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • மழைப்பொழிவு விடிய, விடிய தொடர்ந்ததால் புளியஞ்சோலை பகுதி வெள்ளக்காடாக மாறியது.
    • புளியஞ்சோலை நாட்டாமடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. மாலை வேளையில் பலத்த இடி, மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது.

    கொல்லிமலையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழைப்பொழிவு விடிய, விடிய தொடர்ந்ததால் புளியஞ்சோலை பகுதி வெள்ளக்காடாக மாறியது.

    நேற்று மாலை முதல் பெய்த மழையால் ரெட்டியாப்பட்டி வேப்பமர வீதி பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளை சுற்றி மழை தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். குறிப்பாக ராமாயி (வயது 65) என்ற கூலித் தொழிலாளியின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் சமையல் பாத்திரங்கள், மளிகைப்பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    புளியஞ்சோலை பகுதிகளில் பெய்த கனமழையால் தங்கநகர், குண்டக்கல் பகுதிகளில் மழை தண்ணீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கியது. குண்டக்கல்லிலிருந்து தங்கநகர் வரும் பாதை முழுவதும் நீரோட்டமாக இருப்பதால் தார்ச்சாலை நீர்வழிச்சாலையாக மாறி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஒக்கரையில் பெய்த கனமழையால் ஒக்கரை, கிருஷ்ணாபுரத்திற்கு இடையேயான ஏரிப்பாசன பகுதிகளில் உள்ள மழை வடிகால்கள் மூழ்கின. மேலும் அந்த பகுதியை மழை நீர் சூழ்ந்ததால் சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் துறையூர் பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

    விடிய, விடிய பெய்த மழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புளியஞ்சோலை நாட்டாமடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    கடந்த 40 நாட்களாக பாதுகாப்பு கருதியும், ஆக்கப்பூர்வ பணிகளுக்காகவும் நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் புளியஞ்சோலை காப்புக் காடு பகுதி, நாட்டாமடு பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளனர். தற்போது பெய்து வரும் பலத்த மழையால் இந்த தடை மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • திருப்பூரில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
    • தாராபுரம் சாலை பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது.

    ருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதே போல் திருப்பூர் பகுதியிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தயங்கும் நிலை உருவானது. நாள் முழுவதும் கொளுத்தும் வெயிலால் இரவு நேரத்தில் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருப்பூரில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதன் காரணமாக ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி ரோடு, குமரன் ரோடு, பி.என்.ரோடு உள்பட மாநகரில் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் ஆற்று பாலம், ஊத்துக்குளி ரோடு ரெயில்வே பாலம், போயம்பாளையம் பிரிவு உள்பட மாநகரில் உள்ள தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இடைவிடாமல் பெய்த மழையால் திருப்பூரில் கத, கதப்பான நிலை மாறி குளு, குளு சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காங்கயத்தில் பல்வேறு இடங்களில் மாலை 4 மணியளவில் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தொடா்ந்து இரவு 8 மணி வரையில் மழை பெய்தது.

    இதனால் காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. பலத்த மழையால் காங்கயம் நகரில் மின்தடை ஏற்பட்டது. மேலும் வாரச் சந்தை நாள் என்பதால் மாலை நேரத்தில் பெய்த மழையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -100.40, திருப்பூர் தெற்கு அலுவலகம் -61, கலெக்டரேட் அலுவலகம்- 64, அவினாசி தாலுகா அலுவலகம்-40, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-74, மடத்துக்குளம்-3, தாராபுரம்-15, மூலனூர்-7, குண்டடம்-17, உப்பாறு அணை-35, நல்லதங்காள் ஓடை- 12, உடுமலை-1, அமராவதி-1, காங்கயம்-39.20, வெள்ளகோவில்-13.30, வட்டமலை கரை ஓடை-62,40, பல்லடம்-24. மாவட்டம் முழுவதும் மொத்தம் 624.30 மி.மீ., மழை பெய்துள்ளது. 

    • இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டியது.

    விடிய விடிய மழை பெய்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் 1202.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    அதிகபட்ச மாக அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    அதிராம்பட்டினம்-153, திருக்காட்டுப்பள்ளி -127.60, பூதலூர் -114.60, மதுக்கூர் -90.29, பட்டுக்கோட்டை -83, வெட்டிக்காடு -64.60, தஞ்சாவூர் -41 ஆகும்.

    • கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    • கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி, பாலப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது. மேலும் கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×