search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் அன்புமணி எதிர்க்காதது ஏன்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். #thirumavalavan #anbumani

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்?. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா?

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் மருத்துவர் ராமதாஸ் இந்தப் பிரச்சனையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்? அன்புமணி விடுத்த அறிக்கையே போதுமென்று மவுனம் காக்கிறாரா? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மவுனத்துக்குக் காரணம்?


    மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன்மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூக நீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த ‘நாடக அரசியலை’ பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #thirumavalavan #anbumani

    இட ஒதுக்கீட்டை ஒழிக்க மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு சதி செய்துவருகிறது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.

    இது உண்மையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல, ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டம் ஆகும் என சுட்டிக்காட்டுகிறோம். தேர்தல் ஆதாயத்திற்காக முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சியைக் கைவிட வேண்டுமென பா.ஜனதா அரசை வலியுறுத்துகிறோம்.

    இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதல்ல பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமத்துவ நோக்கில் வழங்கப்படுவதாகும்.

    இதை உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு உட்பட பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    பா.ஜனதா அரசு நீதித்துறையை மதிக்காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்.சி. எஸ்.டி., ஓபிசி இடஒதுக் கீட்டைக் கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே அதை முடக்கிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அளவு கோலை வைப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறது.

    முற்பட்ட வகுப்பினருக்கு உதவுவது போல் பா.ஜனதா அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டதிருத்தம் உண்மையில் அவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டதேயாகும். பா.ஜனதா தோல்வி பயத்தில் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எவரும் ஏமாறமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழலில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது எல்லோரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 பொதுத் தேர்தலின்போதும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    ஆனால் தேர்தல் ஆணையம் அதில் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை அளித்த தகவலும் கூட மாநில அரசால் உதாசீனப் படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும், அது போலவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

    5 மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடந்தபோதே இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவ நிலையைக் காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பதாகவும், எனவே தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழை பெய்யாத நேரத்தில் பருவநிலையைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம் தற்போது கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் வாக்காளர்கள் விடுபடாத நிலையில், அங்கு புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதற்குக் காரணம் என்ன? மற்ற 19 தொகுதிகளில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 'தேர்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்ற குற்றச்சாட்டு அதனால்தான் எழுந்தது.

    இந்தச் சூழலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் ஆணையமே முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பதை வர வேற்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களிடையே கேள்விக்குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இந்த இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThiruvarurByElection

    சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் வன்முறையில் ஈடுபடுவோரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள முதல்வர் பினராயி விஜயனை சாதியின் பெயரால் இழிவு செய்து சனாதனவாதிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதிவெறியும் மதவெறியும் கூட்டாளிகள் தான் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அது இந்த பிரச்சனையிலும் மெய்யாகியுள்ளது.

    சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை கேரள மாநில அரசுக்கு இருக்கிறது.

    தற்போது வழிபாடு செய்துள்ள இரண்டு பெண்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளோ அல்லது கேரள அரசின் தூதுவர்களோ அல்ல. அவர்களும் பக்தர்கள் தான். அவர்கள் வழிபடச் சென்றபோது ஆண் பக்தர்கள் உறுதுணையாக இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

    ஆனால், இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் இப்போது மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் சனாதன சக்திகள் யார் என்பதையும் அந்த சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவார் என்று நம்புகிறோம்.

    சபரிமலை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் கல்வீச்சிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை வெட்டுவதிலும் சனாதனவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SabarimalaProtest #Thirumavalavan
    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    சென்னை:

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

    உலக ஜனத்தொகையில் அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நமது நாட்டில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை வள மாக்கி உலகை வெல்லும் வல்லமை படைத்தவர்களாக ஒவ்வொரு இந்திய இளைஞனும் உருவாகும் காலத்திற்கான துவக்கம் 2019. இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நல்லமுடி வினை எடுத்து, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு. ஜாதி, மத, மொழி வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்களாக பல்வேற்றுமைகளிலும் ஒற்றுமை உள்ளவர்களாக வாழ்ந்து வரும் நிலை ஏற்பட வேண்டும். வெறுப்பு அரசியல் அகன்றிட வேண்டும். ஆட்சிகள் ஊழல் அற்றதாக, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றதாக இருந்திட வேண்டும்.

    இப்புத்தாண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர்ந்திட வேண்டும். மாற்றங்கள் நிகழ்த்தப்பட மக்கள் இந்நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்:-


    ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி காட்டிய சாதனை நாயகன், மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், ஓய்வின்றி நாட்டு மக்களுக்காக உழைத்த நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

    2019-ம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக் கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டு மென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த புத்தாண்டாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    2019-ம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். அல்லவை அகன்று நல்லவை நிறைந்த ஆண்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும். தமிழ் நாடு இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகி மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வளர்ச்சியும், மலர்ச்சியும் மட்டுமே தொடர்கதையாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே உழைக்க ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    மீண்டும் அம்மாவின் உண்மையான நல்லாட் சியை தமிழகத்தில் இப்புத் தாண்டில் படைத்திட நம் இதயங்களும், கரங்களும் ஒன்றிணையட்டும்.

    மலர்ந்திடும் இப்புத்தாண்டில் மதநல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் மகிழ்ச்சியின் ஆண்டாக, செழிப்பின் ஆண்டாக, சாதனைகளை நாம் செதுக்கிடும் ஆண்டாக அமைந்திடட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித் தாக்குகிறேன்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக ஆக்கி, அதற்கு முன்பும்பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2019-ல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

    அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தமிழக வாக்காளப் பெருமக்கள் கடமை ஆற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்தி ஒன்றுபட்டு விரிவான பரந்துப்பட்ட, மக்கள் மேடை அமைப்பதும், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து வகுப்புவாத சக்திகளையும், நிதிமூலதன சக்திகளையும் அகற்றுவதும் 2019-ம் ஆண்டு முன்நிறுத்தும் கடமையாகும்.

    காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-


    ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கஜா புயலால் கடும் துயரத்தை சந்திக்க நேர்ந்தது. தூத்துக்குடி பயங்கரம் நிகழ்ந்தது. ஆற்றுநீர் பிரச்சினைகள் நம் அமைதியை சீர்குலைத்தது. இவ்வாறு பல இன்னல்களை சுமந்த ஆண்டாக 2018 கடந்து இருகிறது.

    புதிய ஆண்டு 2019 இயற்கை பேரிடர் இல்லாத ஆண்டாக, இன்னல்கள் நம்மை சூழாத ஆண்டாக, ஜனநாயகம் தழைக்கும் ஆண்டாக மலர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.

    தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு ஆட்சி அதிகாரத்தை வெல்லும் ஆண்டாக அமைய வேண்டும், அதற்கு ஏதுவாக புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் தமிழ் மக்களாகிய நாமெல்லாம் தமிழ்நாட்டில் இனி ஒரு போதும் லஞ்ச லாவன்யத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம், நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நல்லோர்களை தேர்ந்தெடுப்போம், வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்று உறுதி ஏற்போம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் வரும் புத்தாண்டில் விடிவு காலம் பிறந்திட வேண்டும். மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உள்ள செயல்படாத ஆட்சியும் முழுமையாக அகன்றிட வரும் புத்தாண்டு வழிவிடட்டும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால்விட்டு ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அதிகாரத்தை தகர்க்கும் விதமாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும் 2019-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சித் தலை வர் ஏ.சி.சண்முகம்:-

    ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டால் இல்லாமை, இயலாமை போன்ற தீமைகளை நம் தேசத்தைவிட்டே விரட்டி விடலாம். ஒவ்வொரு குடும்பமும் வளமானால் ஒட்டுமொத்த தேசமும் வளமாகும். இந்த நாடும் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். நம்நாட்டை உயர்த்த நாட்டுமக்கள் அனை வரும் கரங்கள் கோர்ப்போம். இந்த இனிய புத்தாண்டு தினத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த புத்தாண்டில் சாதி, சமய, மொழி வேறுபாடுகளை மறந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற சகோதர எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

    இந்த புத்தாண்டு மக்களுக்கு நன்மைகளையும், நம்பிக்கைகளையுமே வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். ஊழலயற்ற, பொதுநலன் காக்கும் அரசு அமைய வேண்டும்.

    தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ்:-

    2019-ம் ஆண்டு தமிழக மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் ஆண்டாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையக்கூடிய ஆண்டாக அமைந்திடவும், ஜாதி, மதம் கடந்து தமிழக மக்கள் அனைவரும் தமிழன் என்ற உணர்வோடும், அன்பு, அமைதி, சகோதரத்துவத் துடன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சித் தலைவர், சேம.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கனிமொழி எம்பி பேசினார். #kanimozhimp #thirumavalavan #pmmodi

    நெல்லை:

    பெரியாரின் 140-வது ஆண்டு விழாவையொட்டி பாளை நூற்றாண்டு மண்டபம் முன்பு மக்கள் கலை விழா நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்தியராஜ் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும் என்று கூறி வந்தார். அவருடைய கொள்கை தி.மு.க. ஆட்சியில் சட்டமாக கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

    ஆனால் இது தொடர்பாக இதுவரை நாடாளு மன்றத்தில் விவாதம் கூட நடத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா இயக்கங்கள் வளர்ந்துள்ளன. 10 ஆயிரம் கிளைகள் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தற்போது 57 ஆயிரம் கிளைகள் இருக்கின்றன.

    முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டனர். இந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இந்தியாவை பின்நோக்கி கொண்டு சென்று விட்டனர். மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மோடி ஆட்சிக்கு காவடி தூக்குகின்ற அ.தி.மு.க. ஆட்சிக்கும் விடை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-


    சிறுபான்மையான நாம் கடவுள் மறுப்பு கொள்கைகளை பற்றி பேசி வருகிறோம். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது கடவுள் பற்றி கருத்துக்கள் திணிக்கப்பட்டு உள்ளது.

    அனைத்து சாதிகளிடையும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவு இருக்கிறது. இந்த தீண்டாமை தடுப்பு சுவர் பல ஆண்டுகாலமாக இருக்கிறது. இந்த சமாதான கோட்பாட்டை தொடக்கத்தில் இருந்தே உருவாக்கி விட்டார்கள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால் தான் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெரியார், அம்பேத்காரின் ஜனநாயக கோட்பாடுகள் வெற்றி பெற வேண்டும். இந்த கோட்பாடுகள் வெற்றி பெற்றால் சாதி, மத பேதம் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhimp #thirumavalavan #pmmodi

    திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முசிறி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
    முசிறி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி முசிறி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கலைசெல்வன், மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், முசிறி நகர பொருளாளர் சந்திரசேகரன், ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன் , 

    முசிறி நகர பொறுப்பாளர்கள்  மணி கண்டபிரபு, அரவிந்தசாமி, சவுந்தரராஜன், இளவரசன், பிரபு, ராஜன் உள்பட பலரும் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் முசிறி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேசினார். #thirumalvavan #BJP
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறித்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. பேரவையின் தலைவர் பிச்சை தலைமை தாங்கினார்.

    புனித அரசு, மனோ, ஆயர்கள் ஜான் ஜெயகரன் சாம்சன் ராசா மற்றும் மது கர்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், பேராயர்கள் ராஜாசிங், நீதிநாதன், எஸ்.எம்.ஜெயக்குமார், வி.ஜி.சந்தோ‌ஷம், வேலாயுதம், ஆயர்கள் சார்லஸ் சாம்ராஜ் சாம்சன், ஜோசப் மோகன் குமார், ஜோஸ்வா ஸ்டீபன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் கிறிஸ்துமஸ் கேக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெட்டி பேராயர் மற்றும் ஆயர்களுக்கு ஊட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    அன்பையும் கருணையையும் போதிக்கின்ற வேதாகமம் உலகத்திலேயே அதிக மொழிகளால் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். கிறிஸ்தவர்கள் மதம் மாற்றம் செய்யவில்லை. பைபிளின் கோட்பாட்டின்படி செயல்படுகிறார்கள். இயேசு கிறிஸ்து அன்று சிலுவையில் கொல்லப்பட்டதன் மூலம் உலகம் முழுவதும் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டு இருக்கிறது.

    ஒரு தனி மனிதனின் ஆற்றல் தான் உலகளவில் அன்பையும் சமாதானத்தையும் விதைத்துள்ளது. ஆதலால் தனி மனிதனின் தாக்குதலை தடுக்க முடியாது.

    பதவிக்காக நாங்கள் இயக்கம் நடத்தவில்லை. மக்களை அதிகார வலிமை உள்ளவர்களாக மாற்றவும் விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக போராடுகிற கட்சி தான் விடுதலை சிறுத்தை. தனி மனிதன் அதிகாரம் பெற வேண்டும் என்பதைவிட மக்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தன்னலமற்ற 10 தலைவர்களை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சித்தும் அது ஈடேறவில்லை.

    இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட 12 சீடர்களில் ஒருவன் துரோகம் செய்தான். அந்த காலத்திலேயே அவரால் சரியானவர்களை தேர்வு செய்ய முடியவில்லை. நான் எப்படி செய்ய முடியும் என்பது தான் கேள்வி. 10 பேராயர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு எடுத்து விடுவதால் கிறிஸ்தவர்களிடம் ஒரே கருத்தை உருவாக்கிட முடியாது.

    கடந்த காலங்களில் பட்டியல் இனமக்களை ஒன்றிணைக்கும் வகையில் அதன் தலைவர்களை வீடு வீடாக சந்தித்து சேர்ந்து செயல்பட முயற்சி எடுத்தும் அது பலன் அளிக்கவில்லை. தமிழகத்தில் 2 ஆண்டில் வெற்றியை அறுவடை செய்யலாம் என பிரதமர் மோடி பா.ஜ.க. நிர்வாகிகளோடு பேசியிருக்கிறார். இது வியப்பாகவும் வினோதமாகவும் இருக்கிறது.

    தமிழகத்தில் அவர்கள் அறுவடை செய்ய வேர்களும் இல்லை, விதைகளும் இல்லை. எந்த அடிப்படையில் அறுவடை செய்வதாக மோடி பேசினார் என தெரியவில்லை.

    தமிழகத்தை பொறுத்தவரையில் சாதிய மத சக்திகளுக்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் கத்தலாம், கூச்சல் போடலாம். ஆனால் தமிழக மண் ஒரு போதும் சனாதன சக்திகளுக்கு இடம் கொடுக்காது.

    பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.-காங்கிரஸ் அணிக்கு தருகின்ற வெற்றி அதை உணர்த்தும் என நம்புகிறேன்.

    நடிகர், நடிகை, தொழில் அதிபர் திருமணத்திற்கு செல்வதற்கு பிரதமருக்கு நேரம் இருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையத்தில் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை, நிவாரணம் வழங்கவில்லை.

    சிறுபான்மை மக்களுக்கு விடுதலை சிறுத்தை அரணாக இருக்கும். எந்த நிலையிலும் பின் வாங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட செயலாளர் ரா.செல்வம், பள்ளிக்கரணை பன்னீர் தாஸ், பெரம்பலூர் இரா.கிட்டு, வீர.ராஜேந்திரன், எழில் இமயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumalvavan #BJP #Modi
    வருகிற இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் பேசினார்கள். #admk #byelection

    கோவில்பட்டி:

    விளாத்திகுளத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன் தாஸ் பாண்டியன் , மாவட்ட செயலாளர் சி.த. செல்லபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், மோகன், சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியதாவது:-

    ஏழை,எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தந்தார். அதனால் தான் ஆண்ட கட்சிக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு தந்தார்கள். அவர் மறைவுக்குப் பின் சிலர் துரோகம் செய்து விட்டு சென்றதால் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாருர் தேர்தல் இயற்கையான தேர்தல், மற்ற 18 தொகுதிக்கான தேர்தல் செயற்கையான தேர்தல், மக்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரட்டை இலைக்கு தான் வாக்களித்தனர். வேட்பாளர்களை பார்த்து கிடையாது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகளை தி.மு.க. தாங்கி கொண்டு இருக்கும் நிலையில் உள்ளது. வரும் தேர்தல் எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளை சேர்த்து வீழ்த்தி அவர்களுக்கு ஒரு படிப்பினையை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், இந்த தேர்தல் அரசியல் மாற்றத்திற்க்கான தேர்தல். இதில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட கூடிய தேர்தல். அ.தி.மு.க. கூட்டணி பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணிகளை பார்த்து வருகிறது. அ.தி.மு.க தனித்து நிற்க தயார், தி.மு.க. தயாரா?. அ.தி.மு.க. 20 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார்.

    முடிவில் வேலுமணி பேசுகையில், அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாக இருந்து, வேட்பாளர் யாராக இருந்தாலும் உழைக்க வேண்டும். தன் உயிரைக் கொடுத்து ஜெயலலிதா அமைத்த ஆட்சியை தூரோகிகள் கவிழ்க்க பார்க்கிறார்கள், அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்ட ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் சின்னத்துரை, ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிர்வாகியின் ஒருவர் மகனின் மருத்துவ செலவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்ச நிதியை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.  #admk #byelection

    ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #sterliteplant #mekedatu

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதை விடுதலை சிறுத்தை கட்சி வழி மொழிகிறது. வரவேற்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாதி, மத, மோதல், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    எனவே காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் திருச்சியில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டை நடத்துகிறோம். இதில் பங்கேற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். அவர், பங்கேற்கும் தேதி உறுதி செய்யப்பட்ட பின்னர் மாநாட்டு தேதி அறிவிக்கப்படும்.

    கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு, ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. ஒகி புயல் நிவாரணத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் கூட மத்திய அரசு வழங்க விலலை.


    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்ததற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும். பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக முதல்வர் அறிவிததுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #sterliteplant #mekedatu 

    குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம். ஆனால் தமிழ்நாட்டு மண்ணில் தாமரை மலராது என்று திருமாவளவன் பேசினார். #BJP #Thirumavalavan
    கோவை:

    சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு -1957 என்ற நூல் வெளியீட்டு விழா கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது.

    தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் எழுதிய இந்நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து என கலைஞர் சிலை திறப்பு விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பேசி உள்ளனர். இதையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பேசினார்.

    அரசியல் அமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டை பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், இதன் அரசியல் முகமான பாரதிய ஜனதாவால் அரசியல் அமைப்புக்கும், ஜனநாயக உரிமைக்கும் ஆபத்து வந்துள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடந்த 10-ந்தேதி திருச்சியில் சனாதன எதிர்ப்பு, தேச பாதுகாப்பு மாநாடு நடத்த இருந்தோம். இந்த மாநாடு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் எல்லா தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.

    ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரி‌ஷத், பாரதிய ஜனதா, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகள் என்ன நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்ற தலைவர் மோடி. இவர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என துடிக்கின்றனர்.


    குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழ்நாட்டு மண்ணில் தாமரை மலராது. இது பெரியார் பிறந்த மண். சனா தன கும்பலின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும். இவர்கள் இந்தியாவை பாரதம் என சொல்லாமல் இந்து ராஷ்டி ரம் என பெயர் சூட்ட நினைக்கின்றனர். இந்த சனாதன கும்பலை வேரறுக்க வேண்டும். இவர்கள் எப்படி உருண்டு, புரண்டாலும் தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். சாஜித் வரவேற்று பேசினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சுசீகலையரசன், வக்கீல் அணி துரை. இளங்கோவன், இளவரசன், கோவை குமணன், பாலசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #Thirumavalavan
    மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #MKStalin #RahulGandhi

    வேலூர்:

    அம்பேத்கரின் 63-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருப்பது இந்திய அரசியல் அரங்கில் மகத்தான திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த முன்மொழிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழி மொழிகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கு மேல் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய இந்திய அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. கவர்னருக்கு அதிகாரமும் இருக்கிறது. இதனை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக முதல் - அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில், கவர்னர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கவர்னர் அமைதிகாத்திட வாய்ப்பில்லை என நம்ப வேண்டி இருக்கிறது.

    எனவே கவர்னர் விரைந்து இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய முன் வரவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.


    இடைத்தேர்தல் இப்போது வருமா? என தெரியவில்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு கட்டாயம் இடைத்தேர்தல் வந்தே தீரும். எந்த முடிவாக இருந்தாலும், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவெடுக்கும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். ஆனாலும் அதை ஏற்க இயலவில்லை. மிகவும் வேதனை அளிக்க கூடிய தீர்ப்பு. இந்த ஆலை விவகாரம் தொடர்பாக 13 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதார சீர்கேடு அதிகமாக இருக்கிறது. பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    இவ்வாறான சூழ்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு ஆணையை வைத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டது தான், இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தீர்ப்பை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #RahulGandhi

    ×