search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    விடுதலை சிறுத்தைகள் மீது வீண்பழி சுமத்தும் எச் ராஜா மற்றும் பாமக மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். #VCK #HRaja
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கர் படத்தின் முன்னர் நின்று கொண்டு ஒரு இளைஞன், தலித் அல்லாத சமூகத்தினரைச் சீண்டும் வகையில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் முழக்கங்களை எழுப்புகிறான். அது மிகவும் இழிவான, முதிர்ச்சியற்ற ஒரு நடவடிக்கையாகும்.

    இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞன் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

    அந்த இளைஞனின் நடவடிக்கையைக் கண்டிப்பதை விடவும், அவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவன் என்று முத்திரைக் குத்துவதிலேயே பாட்டாளி மக்கள் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவன் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அவனைப் பற்றிய எந்த தகவலையும் அறியாமல், திடீரென அந்த இளைஞன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவனென்று திட்டமிட்டு அவதூறு பரப்புவது, எம்மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் அப்பட்டமான அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும்.

    பொதுமக்களிடையே எமக்கு எதிரான கருத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிற வகையில் பாமக-வினர் மிகவும் மலிவான அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இதன்மூலம் சாதிப்பகையை மூட்டி தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் நோக்கமாகும்.

    பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த எச்.ராஜாவும் வழக்கம்போல எம் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் கக்கியிருக்கிறார். எமது கட்சி இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு மறைமுகமாக நெருக்கடியை ஏற்படுத்துவதே இந்தச் சாதிய மதவாத சக்திகளின் உள்நோக்கமாகும்.

    எனவேதான், அந்த இளைஞன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருவதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதில் குறியாக உள்ளனர். இவர்களின் உண்மை முகத்தைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    இந்நிலையில், திட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமக-வினர் மற்றும் எச். ராஜா ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார். #thirumavalavan #pmmodi

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசம் காப்போம் மாநாடு ஜனவரிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் மாநாடு தள்ளி வைக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னதாக மாநாடு நடைபெறும்.

    அம்பேத்கர் படத்திற்கு முன்பு ஒரு இளைஞர் பெண்களை கொச்சைப் படுத்தி பேசி உள்ளார். அவர் யார் என்று தெரியாத நிலையில் பா.ம.க. எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறது.

    அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது.


    அரசியல் உள் நோக்கத் திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி கர்நாடகாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறது. கஜா புயல் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    மேகதாது அணையை கட்ட 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டியது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #thirumavalavan #pmmodi 

    கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Vaiko
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட் டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கடந்த 3-ந்தேதி கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Vaiko
    தஞ்சை பெரிய கோவிலில் ரவிசங்கரின் ஆன்மீக பயிற்சி வகுப்பை அனுமதிக்க கூடாது என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். #Thirumavalavan #SriSriRavishankar #ThanjavurPeriyaKoil
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘வாழும் கலை’ அமைப்பை நடத்திவரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இன்றும், நாளையும் (7, 8-ந்தேதி) தஞ்சைப் பெரிய கோயிலின் உள்ளே ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

    வணிக நோக்கம் கொண்ட அத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தொல்லியல் துறையின் ஒப்புதலின்றி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.


    தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் கோயிலில் இப்படி தனியார் நிகழ்ச்சி நடத்த சட்டரீதியாக அனுமதி கிடையாது. அதை மீறி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதென்றால் அதிகார உயர் பதவி வகிப்பவர்களின் தலையீடு இல்லாமல் அது நடந்திருக்காது. அப்படி தலையிட்டு அனுமதி வழங்கச் செய்தது யார் என்பதைத் தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும்.

    யமுனை நதிக்கரையில் ‘உலகப் பண்பாட்டுத் திருவிழா’ என்று கலாச்சார நிகழ்ச்சி நடத்தியபோது அந்த நதியின் கரையைச் சேதப்படுத்தியதற்காக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த ‘வாழும் கலை‘ அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலையும் பாழாக்க எப்படி அந்த அமைப்புக்கு அனுமதி அளித்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

    ‘யுனெஸ்கோ’ அமைப்பால் உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயிலைப் பாழாக்கும் வகையில் நடக்கும் இந்த முயற்சியைத் தமிழக அரசு தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan  #SriSriRavishankar #ThanjavurPeriyaKoil
    முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #vanniarasu #vaiko

    சென்னை:

    தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த வைகோவிடம், திராவிட கட்சிகள் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகோ பதில் அளிக்கும் போது, தலித்துகளுக்கு எதிராக என்னை சித்தரிக்க நினைக்கிறீர்கள். அது நடக்காது. எங்கள் வீட்டில் வேலை செய்பவர் கூட தலித்துதான் என்று கூறினார்.

    வைகோவின் இந்த பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது முகநூலில் பதில் அளித்தார்.

    தலித் குறித்த கேள்விக்கு வைகோ நேர்மையாக எதிர் கொள்ளவில்லை. அவர் சொன்ன வார்த்தை ஆதிக்க மனோநிலையில் இருந்து கூறியது போல உள்ளது. இதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.


    இது குறித்து திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல, அதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அதனால் உடனடியாக நீக்கி விட்டார்

    வைகோவின் உதவியாளருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதன் பின்னரும் வைகோ கூறிய கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.

    2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவருடைய இல்லத்துக்கு வரும்படி அழைத்தார், தேர்தலுக்காக உதவி செய்தார் அதற்காக நான் அவருக்கு நன்றியும் தெரிவித்தேன். அது வெறும் வெளிப்படையான ஒரு கருத்து. அதில் ஒளிவு மறைவு இல்லை.

    ஆனால் வன்னியரசு எழுதிய பதிவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.எதன் அடிப்படையில் வைகோ பேசினார் என்பது தெரியவில்லை. என் மீது உள்ள கோபமாஅல்லது வன்னியரசுவின் கருத்திற்கு பதிலா என்று தெரியவில்லை.

    அரசியல் தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் திருமாவளவன் அல்ல. என்னை கடுமையாக விமர்சித்தவர்களை கூட நான் விமர்சிப்பதில்லை. அப்படியே என்னுடைய விமர்சனங்களை சொல்ல வேண்டுமென்றால் கூட அது தைரியமாக தெரிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #vanniarasu #vaiko

    திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறவிருந்த ‘தேசம் காப்போம்’ மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #DesamKappom #VCK
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகளின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தமிழகம் முழுவதிலிருந்து நிர்வாகிகள் கட்சி நிதி அளித்தனர்.

    அதன்பிறகு திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருச்சியில் டிசம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.



    அன்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கும், அந்த அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தமிழகத்தை காக்கவும் தி.மு.க. தலைமையிலான அணியில் விடுதலை சிறுத்தை அங்கம் வகிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் பாதிக்கப்படுவதுடன் மேலும் சில அணைகள் கட்டவும் வழி வகுக்கும்.

    எனவே அணை கட்ட அனுமதிக்க கூடாது. பா.ஜ.க. மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கர்நாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மேகதாது அணை கட்டக்கூடாது என கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் திருச்சி போராட்டத்தில் தி.மு.க. கூட்டணியை பா.ஜனதா உடைக்க பார்க்கிறது என நான் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நான் அணையை பற்றி கவலைப்படாமல் அணியை பற்றி கவலைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்கவும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை.

    தி.மு.க. அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. தொகுதி குறித்து நிர்பந்திக்க கூடாது என்று எதுவும் கூறவில்லை. எங்கள் அணி பலமாக உள்ளது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அணியில் இருந்து தங்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #DesamKappom #VCK
    திருமாவளவனுக்கு அணையை விட அணியை பற்றித்தான் கவலை என்று பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan #Thirumavalavan
    சென்னை:

    மேகதாது அணை கட்ட ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, ‘தி.மு.க. அணியை பலவீனப்படுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:-



    திருமாவளவனுக்கு கவலை அணையை பற்றியது அல்ல. அணியைப்பற்றித் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 1971-ல் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஹேமாவதி அணைகட்ட ஆட்சேபனை இல்லை என்று பேசியதையும், தற்போது மு.க.ஸ்டாலின் போராடுவதையும் வெளியிட்டுள்ளார். #TamilisaiSoundararajan #Thirumavalavan

    கார்ப்பரேட் முதலாளிகளுக்காக பாடுபடும் மோடியை பாராட்டுவதா? என்று ரஜினிக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Thirumavalavan #Modi
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்து இருந்தார். மோடி நாட்டிற்கு நல்லது செய்ய கடினமாக உழைப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதில் அளித்து கூறி இருப்பதாவது:-

    மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கை மூலம் ஏழை-எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர கருப்பு பணம் ஒழியவில்லை.

    ஊழலும் ஓழிக்கப்படவில்லை. நாட்டு மக்களின் வறுமையும் குறையவில்லை. சமுதாயத்தில் சாதி, மத மோதல்கள் அதிகரித்துள்ளன. மதவெறியர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.


    கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்கத்தான் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார். அவர்களுக்காகத்தான் மோடி ஓடி ஓடி உழைக்கிறார். ஏழை-எளிய அடித்தட்டு மக்கள் நலனுக்காக அவர் உழைக்கவில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை ஒருங்கிணைக்கவே 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ம.தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைந்துதான் இருக்கிறோம். காவிரி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம்.

    நாங்கள் ஒருங்கிணையக் கூடாது என நினைப்பவர்கள் வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #Rajinikanth #Thirumavalavan #Modi
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கிட முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Edappadipalanisamy
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கீரமங்கலம், பனங்குளம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆலங்குடி தொகுதியில் லட்சக்கணக்கான பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரத்துக்கு ரூ.1,100 என்பதை போல, பலா மரங்களுக்கும் அரசு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும். உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    தென்னைக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அரசு வாகனம் எரிப்பு வழக்கில் சில மர்மநபர்கள் செய்த தவறுக்கு, 62 அப்பாவி மக்களை கைது செய்தது தவறு. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    சேதமடைந்த அனைத்து மரங்களையும் உரிய முறையில் வருவாய் துறையினர் கணக்கிடவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சேதங்களை முறையாக கணக்கிட்டு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Edappadipalanisamy
    டிடிவி தினகரனை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #TTVDhinakaran
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ் ஈழ விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர் நினைவுநாள். இன்றைய தினம் தமிழ் சொந்தங்களும், சர்வதேச மக்களும் நினைவு கூர்கிற மகத்தான நாள்.

    7 பேர் விடுதலைக்காக டிசம்பர் 3-ந்தேதி கவர்னர் மாளிகை முன்பு ம.தி.மு.க. நடத்தும் முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்.

    தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தோழமை கட்சிதான். தி.மு.க.வுடன் கூட்டணியாக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். இதில் முடிவெடுக்கும் இடத்தில் தி.மு.க. உள்ளது.



    கூட்டணியில் இருப்பதாக நான் சொல்ல முடியாது. அதை தி.மு.க.தான் அறிவிக்கும். எனவே தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் யாரையும் சந்திக்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறது.

    நான் சில மாதங்களில் 2, 3 முறை முதல்-அமைச்சரை சந்தித்து இருக்கிறேன். அதேபோல் டி.டி.வி. தினகரனை நேற்று கொத்தமங்கலம் என்ற இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்புகள் மக்களுக்கான களத்தில் நிகழக்கூடியவை. ஆனால் தேர்தல் களத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது.

    தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆகிய தோழமை கட்சிகளின் உறவு இணக்கமாக இருக்கிறது. இதில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. எனவே தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சொன்ன கருத்து மிக எதார்த்தமானது. இன்னும் சொல்லப்போனால் நான் முன்மொழிந்ததை அவர் வழி மொழிந்திருக்கிறார்.

    அவருக்கு முன்னதாகவே நான் சொல்லி இருக்கிறேன். தி.மு.க.வோடு நாங்கள் தோழமை கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சிகள் கூட்டணியாக மாற வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவிக்க வேண்டும் என்று ஒருமுறைக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். எனவே இதில் எந்த குழப்பமும் இல்லை. இந்த அணி கூட்டணியாக வலுப்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியில் டி.டி.வி. தினரனும், திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் புறப்பட்டனர். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி:

    கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதிக்கு சென்றபோது அங்கு டி.டி.வி. தினரனும் வந்திருந்தார். இதையடுத்து வாகனங்களில் இருந்து இறங்கிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

    முன்னதாக தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    பட்டாசு தொழிலாளர் நலன் காக்க நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். #FireCrackers #Thirumavalavan

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மற்றும் மத்திய அரசு இணைந்து விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் வல்லுநர் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

    இந்த நேரத்தில் தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும்.

    குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்போது தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக ஏற்பாடு. அவர்களுக்கு புயலால் பாதிக்கப்படாத வகையான வீடுகளை கட்டித்தர வேண்டும்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்குவது என்பது போதுமானதாக இல்லை. அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும். கால் நடைகள் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    சிவகாசியில் பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .

    எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    மாசுபடுவதற்கு பட்டாசுகள் மட்டுமே காரணம் இல்லை. மாசில்லாத பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கு வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. அதற்குரிய ஆய்வு மற்றும் நடைமுறை தொடர்பான வழிகாட்டுதல் தேவை.

    எனவே மத்திய அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீதி மன்றம் வழிகாட்டலை தந்தாலும் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #FireCrackers #Thirumavalavan

    ×