search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

    சென்னை வருமானவரித்துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வருமானவரி சட்டம் 44 ஏ.பி.ன் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-2018 நிதியாண்டு) வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய இந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

    வருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234 எப் பிரிவின் படி கால தாமதக்கட்டணம் (அபராதம்) செலுத்த வேண்டியவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    * வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான 31.07.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை.

    * மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018க்கு பிறகும் 31.03.2019-க்கு முன்பாகவும் தாக்கல் செய்தால் அபராதக் கட்டணம் ரூ.1000.

    * ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018-க்கு பிறகு ஆனால் 31.12.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.5,000.

    * மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை 31.12.2018-க்கு பிறகு ஆனால் 31.03.2019-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.10,000.

    வருமானவரி சட்டத்தின் புதிய நடைமுறையின்படி 139-வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பிறகு எவ்வித வருமானவரி கணக்கும் தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக மதிப்பீட்டு ஆண்டு 2018-2019-க்கு 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

    மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும். கீழே குறிக்கப்பட்டுள்ள பிரிவினர் விரும்பினால் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உள்ளோர் ஐ.டி.ஆர்.1 அல்லது ஐ.டி.ஆர்.4 (சுகம்) படிவங்களில் வருமானவரி கணக்கை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாக்கல் செய்யலாம்.

    முந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மொத்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் தங்களது வருமானவரி கணக்கில் திரும்ப கிடைக்க வேண்டிய தொகை கோராதவர்கள்.

    வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை இலக்கம் 121-ல் செயல்படும் ஆயக்கர் பவன் வளாகத்தில் வருமானவரி கணக்கு முன் தயாரிப்பு கவுண்ட்டர்கள் செயல்படும். இந்த கவுண்ட்டர்கள் அனைத்து வேலை நாட்களிலும் 16-ந் தேதி முதல் 2018 ஆகஸ்டு 3-ந் தேதி வரை செயல்படும். வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    அமெரிக்காவில் பிரபல நிறுவனத்தின் முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்க்கு அந்த நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
    வாஷிங்டன்:

    பெண்கள் அழகுக்கு அழகு சேர்க்க முகப் பவுடர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த நிலையில், பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்று, தயாரித்து வழங்கும் முகப்பவுடரில் சேர்க்கப்படுகிற ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்னும் பொருள், சினைப்பை புற்றுநோயை ஏற்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இது தொடர்பாக மிசவுரி மாகாணத்தின் செயிண்ட் லூயிஸ் நகரை சேர்ந்த 22 பெண்களும், அவர்களது குடும்பத்தினரும் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அங்குள்ள சிவில் கோர்ட்டு விசாரித்தது.

    விசாரணையின்போது, தனிப்பட்ட சுகாதாரத்துக்காக தாங்கள் பயன்படுத்திய முகப்பவுடர்தான் தங்களுக்கு சினைப்பை புற்றுநோயை வர வைத்து விட்டது என்று வழக்குதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    ஆனால் அந்த முகப்பவுடர் நிறுவனம், குற்றச்சாட்டை மறுத்தது. “எங்கள் முகப்பவுடரில் ஆஸ்பெஸ்டாசும் இல்லை, எங்கள் முகப்பவுடர் புற்றுநோய் தாக்க காரணமாகவும் அமையவில்லை” என்று கூறியது.

    இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 6 வாரங்கள் நடைபெற்றன.

    அதன்முடிவில் அந்த முகப்பவுடர் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 550 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,740 கோடி), அபராதமாக 4.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27 ஆயிரத்து 880 கோடி) செலுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்து சம்மந்தப்பட்ட முகப்பவுடர் நிறுவனம் சார்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த தீர்ப்பு, எங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கி உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைமுறை, அடிப்படையில் நியாயமற்றது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்” என்று கூறியது. 
    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவனின் முடியை வெட்டி மானபங்க படுத்தியதற்காக ஒடிசா அரசு 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவன் முறையாக முடியை பராமரிகாததை கண்டித்து ஜெயஸ்மிதா சா என்ற ஆசிரியை மாணவனின் முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

    இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்ச ரூபாயை மாணவருக்கு வழங்குமாறு தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, அபராதத்தொகை  வழங்கப்படாத நிலையில், இன்னும் 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    திருவனந்தபுரத்தில் சாலை விதியை மீறி வேகமாகச் சென்ற கவர்னர் அலுவலக ஊழியர்கள் பயன்படுத்திய காருக்கு அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் கவடியார்- வெள்ளையம்பலம் இடையேயான சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

    வாகன நெருக்கடி காரணமாக அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடப்பது வழக்கம். எனவே போக்குவரத்து போலீசார் இச்சாலையில் வாகனங்கள் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    ஆனாலும் சிலர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்வதால் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து இச்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் வேகத்தை கண்டு பிடிக்கும் தானியங்கி கண்காணிப்பு கருவியை பொருத்தினர். கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி இந்த கருவி செயல்பாட்டுக்கு வந்தது.

    அதன்பிறகு இச்சாலையில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லும் அனைத்து வாகனங்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி இந்த சாலையில் சென்ற கவர்னரின் காரும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் கவர்னர் அலுவலகத்துக்கு இத்தகவலை தெரிவித்து அபராதம் கட்டுவதற்கான செல்லானையும் அனுப்பி வைத்தனர்.

    கடந்த வாரம் தான் இந்த தகவல் கவர்னர் சதாசிவத்தின் கவனத்திற்கு சென்றது. அந்த காரை கவர்னர் பயன்படுத்துவதில்லை. அது கவர்னரின் செயலாளர் பயன்படுத்தும் காராகும். இருந்தும் போக்குவரத்து விதியை மீறி இருப்பதால் அபராதத்தை உடனடியாக செலுத்தும்படி அலுவலக ஊழியர்களுக்கு கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டார். அதன்படி அபராதமும் செலுத்தப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் வேகமாகச் சென்ற ஐகோர்ட்டு நீதிபதிக்கும் இது போல அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் அபராதம் செலுத்தினார்.

    கவடியார்- வெள்ளையம்பலம் சாலையில் தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட பின்பு தினமும் 3 ஆயிரம் வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி செல்வது தெரிய வந்துள்ளது. இதனை கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் கண்டு பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இதுவரை அபராத தொகையாக ரூ. 1 கோடியே 10 லட்சம் வரை வசூலாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சுவிட்சர்லாந்து வீரர்கள் இருவருக்கு ரூ.6¾ லட்சம் அபராதமாக விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டது. #GranitXhaka #XherdanShaqiri
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து வீரர்கள் கிரானிட் ஷக்கா, ஷகிரி கோல் அடித்த போது, அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டினர். அல்பேனியாவுடன் சீரான உறவு இல்லாத செர்பியாவுக்கு வீரர்களின் செயல் ஆத்திரமூட்டியது. அவர்கள் இருவரையும் செர்பியா கால்பந்து சங்கம் கடுமையாக விமர்சித்தது.

    இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷக்கா, ஷகிரி இருவருக்கும் ரூ.6¾ லட்சம் அபராதமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று விதித்தது. இதே போல் செர்பியா கால்பந்து சங்க தலைவர், அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 3½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. #GranitXhaka #XherdanShaqiri
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மீண்டும் தவறு செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayStation #Selfie #Fine
    சென்னை:

    இளைஞர்களிடம் செல்போன் மூலம் ‘செல்பி’ எடுக்கும் மோகம் அதிகரித்தப்படி உள்ளது.

    ‘செல்பி’ எடுத்து அவற்றை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்பவர்கள், ஓடும் ரெயிலிலும் வாசலில் நின்று பயணம் செய்து கொண்டே செல்பி எடுக்க தவறுவதில்லை.

    சில பயணிகள் ரெயில் நிலையங்களில் தூரத்தில் ரெயில் வரும் போது, அந்த காட்சியை பின்னணியாகக் கொண்டு செல்பி எடுக்கிறார்கள். இத்தகைய செல்பி மோகத்தால் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    இந்த செல்பி விபத்துகளை தடுக்க தென்னக ரெயில்வே சில திட்டங்களை அமல்படுத்தியது. அதற்கு பலன் கிடைக்காததால், ஓடும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் பெட்டிகளின் வாசல்களிலும், ரெயில் என்ஜின் முன்பும் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. சேலம் டிவிசனில் இந்த அபராத திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்களும் கூட செல்பி மோகத்தில் சிக்கியுள்ளனர்.

    ரெயில் பயண நினைவுகளை படமாக்க சிலர் செல்பி எடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். முதலில் பயணிகளை எச்சரிக்கை செய்யவும், பிறகு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரே பயணி மீண்டும், மீண்டும் செல்பி எடுத்து பிடிபட்டால் அவருக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த சுற்றறிக் கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக் கையைத் தொடர்ந்து நேற்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

    முதல் நாள் என்பதால் நேற்று செல்பி எடுத்த பயணிகள் எச்சரித்து விடுக்கப்பட்டனர். இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.#RailwayStation #Selfie #Fine
    நகரின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் வரை அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு சட்டசபையில் பேசும்போது, சுத்தத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பொது இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கொட்டி அசுத்தப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இதையடுத்து பொது சுகாதார சட்டத்தின் கீழ், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை உயர்த்தப்பட்டது.

    இதற்கான கொள்கை குறிப்புகளும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு கண்டிப்புடன் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, தெருக்களில் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் குப்பை கொட்டினால் ரூ.1,000, வணிக வளாக உரிமையாளர் குப்பை வீசினால் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.

    இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் குப்பைகளை வீசினால் ரூ.25 ஆயிரம், சாலையோர வியாபாரிகள் குப்பை போட்டால் ரூ.100, சாலையோரங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 என அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    நகரின் தூய்மையை கருத்தில் கொண்டு இதனை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. #RailwayStation #Selfie #Fine
    மதுரை:

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

    இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.  #RailwayStation #Selfie #Fine
    ஆட்டோ டிரைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை மூலக்கொத்தலம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். ஆட்டோ டிரைவர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது வீட்டின் அருகே கிடந்த குப்பையை அகற்றுவது சம்பந்தமாக எனது மனைவிக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. எனது மனைவியை அவதூறாக திட்டியது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சகோதரர் கொடுத்த புகார் அடிப்படையில் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கடுமையாக தாக்கினார். இதில், எனது காது கேட்கும் திறன் முழுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    தனக்கு எதிராக பாலியல் புகார் செய்த மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர் குமாரவேல். இவர், அவரது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த மாணவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் பேராசிரியரிடம் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குமாரவேல் கல்லூரி தலைவரிடம் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில், அந்த மாணவி தனக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்று தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். இதை எதிர்த்து குமாரவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் தந்தால் விசாரணை மேலும் தாமதமாகும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார்.

    பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘புகார் கொடுத்த மாணவியை கல்லூரியைவிட்டு வெளியே செல்ல தடை விதிக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார்.

    எனவே, மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை புதுச்சேரி மாநில சட்டப்பணி ஆணைக்குழுவிடம் 2 வாரத்துக்குள் செலுத்தவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    இந்திய ரெயில்களில் சரியான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்தில் சுமார் 42.15 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. #CentralRailways #TicketlessTravellers

    புதுடெல்லி:

    இந்திய ரெயில்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ரெயில்களை பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் இந்திய ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர அனுமதிப்பட்டதை விட அதிக அளவில் உடைமைகளை கொண்டு வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.



    இந்நிலையில், ரெயிலில் சரியான டிக்கெட் மற்றும் அதிக அளவிலான உடைமைகளை கொண்டு சென்ற குற்றங்களுக்காக கடந்த ஏப்ரல்-மே இடையிலான ஒரு மாத காலகட்டத்தில் 7.59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்மூலம் 42.15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இதுபோன்று 7.25 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதன்மூலம் 41.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    ஆள்மாறட்டம் செய்து பயணம் செய்ததாக 1,517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.12.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #CentralRailways #TicketlessTravellers
    அரூர் பகுதியில் விதிமுறையை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 283 பேரின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் ரத்து செய்தனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 328 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

    அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அதிக பாரம், ஆட்களை ஏற்றி வந்த வாகன டிரைவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 283 பேருக்கு 3 மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர். 
    ×