search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணசாமி"

    புதுவை அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருநாக பாம்பை பிடிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பவம் நடந்துள்ளது. #Narayanasamy
    பாகூர்:

    அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு வசந்த் (வயது 19) என்ற மகனும், சந்தியா (17) மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு ராஜா வெளியே சென்றிருந்தார். விஜயா தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே விஜயா எழுந்து விளக்கை போட்டு பார்த்தார்.

    அப்போது அங்கே 5 அடி நீளம் கொண்ட கருப்பு நிற பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தாயும், குழந்தைகளும் தவித்தனர். அக்கம் பக்கத்தினரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

    இதனால் அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டனர். அவர்கள் வனத்துறை போன் எண்ணை கொடுத்து அங்கு பேசும்படி கூறினார்கள். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு போன் செய்தனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் எந்த பலனும் இல்லை.

    அந்த நேரத்தில் பாம்பு அவர்களை பார்த்து சீறிக் கொண்டிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. அப்போது வசந்த் அவர்கள் வீட்டில் உள்ள ஒரு அரசு டைரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

    டைரியை திறந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் போன் எண் அதில் இருந்தது. உடனே நாராயணசாமிக்கு போன் செய்தார். இரவு தூக்கத்தில் இருந்த நாராயணசாமி போனை எடுத்து பேசினார். அப்போது வசந்த் எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது. அதை பிடிப்பதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை உதவியை நாடினோம். யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறினார்.


    உடனே நாராயணசாமி யாரும் பயப்படாதீர்கள். பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். நாராயணசாமி வனத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக அங்கு ஆட்களை அனுப்பி பாம்பை பிடிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

    அதன்படி விடுமுறையில் இருந்த 2 ஊழியர்களை இரவோடு இரவாக எழுப்பி அங்கு அனுப்பி வைத்தனர். கோபி, தாமரைச்செல்வன் ஆகிய ஊழியர்கள் அந்த வீட்டுக்குள் சென்று பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது கருநாகப் பாம்பு ஆகும். கடுமையான வி‌ஷத்தன்மை கொண்டது. பாம்பு பிடிபட்ட பிறகு தான் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள்.

    இன்று காலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த வீட்டுக்கு மீண்டும் போன் செய்து விசாரித்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் புதரால் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருப்பதாக கூறினார்கள். அவற்றை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று நாராயணசாமி உறுதி அளித்தார்.

    அதன்பின்னர் நாராயணசாமி, தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமனிடம் தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதனால் அனந்தராமன் இன்று காலை அங்கு சென்று அங்குள்ள புதர்களை பார்வையிட்டார். அவற்றை அகற்றுவதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக கூறினார்.  #Narayanasamy
    மேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Mekedatudam #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் 1957-ம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம், பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

    விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. புதுவையில் 26, காரைக்காலில் 8, ஏனாமில் ஒரு பள்ளி என மாநிலம் முழுவதும் 35 பள்ளிகள் உள்ளது.

    இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 568 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாதந்தோறும் இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளமாக ரூ.2 கோடியே 92 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

    பென்‌ஷனுக்காக மாதம் ரூ.58 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்திற்கு ஒரு முறை இதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

    தற்போது கவர்னர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த நிதியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்வதற்கு அரசு உதவி பெறும் பள்ளிகளும் காரணம்.

    ஏழை மாணவர்களிடம் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. பெரும்பாலும் சிறுபான்மையினர்தான் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

    இதனால் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது பொருத்தமானதுதான். அரசை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது. விதிமுறைகளை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார்.

    நிர்வாக விதிமுறைகளுக்கு மாறாகவும் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக பல முறை நான் கடிதம் எழுதி உள்ளேன். அரசின் அன்றாட நடவடிக்கையில் கவர்னர் தலையிடக்கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடக்கூடாது.



    ஆனால், கவர்னர் கிரண்பேடி நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை மிரட்டி வருகிறார். சமீப காலமாக பல அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    கூட்டுறவு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.326 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான கோப்பையும் கவர்னர் திருப்பி அனுப்புகிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

    அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அந்த சம்பளத்தையும் வழங்கவிடாமல் தடுத்து விட்டார்.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான கோப்பு 3 மாதமாக நிலுவையில் உள்ளது. இதற்கு விரைவில் முடிவு கிடைக்கும். இதன் பிறகு ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவோம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை மத்திய குழு பார்வையிட்டது. பேரிடர்துறை மூலம் ரூ.10 கோடி இடைக்கால நிவாரணமாக அனுப்பியுள்ளோம்.

    மேலும் மத்திய அரசிடம் நீண்டகால திட்டங்களுக்காக ரூ.1,342 கோடி கேட்டுள்ளோம். புதுவை பகுதியில் சாலைகளை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம்.

    கேரளா அதிரகண்டி நீர்தேக்கத்தில் இருந்து மாகிக்கு குடிநீர் வருகிறது. இதற்கு மாநில அரசு சார்பில் கேரளா அரசுக்கு பணம் செலுத்தி வருகிறோம். இத் தொகையை கேரளா அரசு திடீரென உயர்த்தியது. கேரளா முதல்வருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக்கொண்டதால் இத்தொகையை ரத்து செய்துள்ளனர். இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.2 கோடி திரும்பக்கிடைக்கும்.

    மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது என உத்தரவு உள்ளது. அதை மீறி தடுப்பணை கட்டினால் தமிழகத்தை மட்டுமின்றி புதுவையையும் பாதிக்கும். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து நீதிமன்றம் செல்வோம்.

    தமிழக அரசும் காவிரி ஆணையம் கூறியபடி காரைக்காலுக்கு நீர் வழங்க முன்வர வேண்டும். வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது புதுவையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் நிதி அளித்தனர். இந்த நிதியை அடுத்த மாதம் கேரளா முதல்-அமைச்சரிடம் நேரில் அளிக்க உள்ளேன்.

    தற்போது புதுவையில் காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் தாராளமாக நிதி வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் வார வேலை நாட்களில் தனி பிரிவு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். #Mekedatudam #Narayanasamy

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரண நிதி இன்று செலுத்தப்படும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் காரைக்காலில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மழைக்கால நிதியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. அத்துடன் சேர்த்து மேலும் ரூ.2,500 வழங்கப்படும். நிவாரண உதவியாக 9,500 விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த நிவாரண தொகை இன்று (திங்கட்கிழமை) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நான் டெல்லி சென்று உள்துறை செயலாளர், மத்திய மந்திரி அருண்ஜெட்லியிடம் புயல் நிவாரணத்துக்கு ரூ.187 கோடி கேட்டுள்ளேன். மத்தியக்குழு அறிக்கை அளித்தபின் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு இன்று பார்வையிடுகிறது. ஆய்வை முடித்து நாளை (செவ்வாய்க்கிழமை) புதுவை தலைமைச் செயலகத்தில் எங்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.  #GajaCyclone #Narayanasamy
    கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #rahulgandhi #gajacyclone
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேற்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அப்போது நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்களும், நிவாரண பணிகளும் இதுவரை சென்றடையவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முழுமையாக பார்வையிடவில்லை.

    புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கவேண்டும். புயல் பாதிப்புகளை ஒன்றாக சென்று பார்வையிட்ட முதல்- அமைச்சரும், துணை முதல்- அமைச்சரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா? கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருவார்.

    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பாரதீய ஜனதா மற்றும் மோடியை எதிர்ப்பவர்களும், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தலைமையை ஏற்பவர்களும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். இதுவரை நட்பு ரீதியில்தான் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளனர்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். thirunavukkarasar #rahulgandhi #gajacyclone
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #Narayanasamy #MKstalin
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

    அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையில் இருக்கும் புதுவை முதல்-அமைச்சருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #Narayanasamy #MKstalin
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன. #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். இவர் தனது கிராமமான பூரணாங்குப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    96 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி அம்மாள் நேற்று இரவு மரணமடைந்தார்.

    இதற்கிடையே கஜா புயல் நிவாரணம் நிதி பெற முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றிருந்தார். தாயார் இறந்த செய்தி நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து நாராயணசாமி டெல்லியில் இருந்து உடனடியாக புதுவை திரும்பினார். மறைந்த ஈஸ்வரி அம்மாளுக்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

    ஈஸ்வரி அம்மாளின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் பூரணாங் குப்பம் இடுகாட்டில் நடக்கிறது.   #Narayanasamy
    கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதில் பல ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டதால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #gajacyclone #Cyclone #rain

    காரைக்கால்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது காரைக்கால் மாவட்டத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. இதனால் காரைக்காலில் கோட்டுச்சேரி, காரைக்கால் நகரம், திருமலைராயன் பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    அந்த பகுதியில் வீதிகளில் மரங்கள் விழுந்து கிடந்தன. மேலும் சூறாவளிக் காற்றினால் நிரவி, ஊழியப்பத்து, மேலவாஞ்சூர், கோட்டுச்சேரிமேடு, டி.ஆர்.பட்டினம் ஆகிய பகுதிகளில் 200 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    காரைக்கால் மீன்பிடி துறைமுகம், பட்டினச் சேரி, கிழிஞ்சல்மேடு, காளிக்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி தலைகுப்புற கவிழ்ந்தன.

    இதில் 100 படகுகள் சேத மடைந்தன. சூறைக்காற்று வீசியதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. காரைக்கால் பட்டூர் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

    புயல் தாக்கத்தால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் காரைக்காலில் உள்ள மீனவ கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து புதிய மின்கம்பங்களை நடுவதற்காக 50-க்கும் மேற்பட்ட மின்ஊழியர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இரவு 9 மணியளவில் காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் வந்தது. ஒரு சில கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை.

    சூறைக்காற்றில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதையடுத்து ரோட்டில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராகியது. புயல் தாக்கத்தினால் புயல் பாதுகாப்பு மையங்களில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று மாலை வீடு திரும்பி விட்டனர்.


    புயல் தாக்கியபோது பலத்த மழையும் பெய்ததால் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    காரைக்காலில் புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் காரைக்கால் கடலோர கிராமத்தில் நிறுத்தி இருந்த பல படகுகள் பல 100 மீட்டர் தூக்கி எறியப்பட்டுள்ளது. மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர் பகுதியில் பல விடுகள் மீது மரங்கள் விழுந்து சேதமாகியுள்ளது. விளை நிலங்களில் மழை நீர் புகுந்தாலும் பெரும் சேதம் இல்லை.

    இருந்த போதிலும் புயல் பாதிப்பு சேதம் குறித்து கணக்கெடுக்கும் படி மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளேன். அறிக்கை வந்தவுடன் மத்திய அரசிடம் உரிய நிவாரணம் கேட்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone #Cyclone #rain

    காரைக்காலில் புயலால் பாதித்த பகுதிகளை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #narayanasamy #gajacyclone #rain

    காரைக்கால்:

    கஜா புயல் நாகை மாவட்டத்தில் கரையை கடந்தது. அப்போது கஜா புயலின் கோர தாண்டவத்தில் காரைக்கால் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதைத்தொடர்ந்து இன்று மதியம் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் காரைக்கால் சென்றனர். அங்கு அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #narayanasamy #gajacyclone #rain

    கஜா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #Gaja #GajaCyclone #Narayanasamy
    காரைக்கால்:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை காரைக்காலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை பகல் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்பதால் புதுவை மற்றும் காரைக்காலில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுவையில் இருந்து பேரிடர் மீட்புகுழு காரைக்காலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்று காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். அதிகாரிகள் யாரும் விடுமுறையில் செல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    புயல் கரையை கடக்கும் வரை கடலோர பகுதியில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், பார்வையிட செல்லுதல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.

    புயல் பாதிப்பின் போது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தொலை பேசி எண்கள் மற்றும்செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காரைக்காலை அடுத்த திருநாள்ளாற்றில் உள்ள தர்பாரணேஸ்வரர் கோவில் சார்பில் ரூ.75 லட்சத்தில் புணர் அமைக்கபட்ட எம தீர்த்தம் மற்றும் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கோவில் ஊழியர்களுக்கு கட்டபட்ட குடியிருப்பு மற்றும் கொல்கத்தா பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.1 கோடியே 50 லட்டசத்தில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலகண்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #Gaja #GajaCyclone #Narayanasamy
    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது.

    ‘கஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையில் 14-ந்தேதி கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுவையில் 12 முதல் 15-ந்தேதிவரை பலத்த காற்றும், கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையிலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுவை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக தமிழகம், புதுவையில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் நானும், அமைச்சர் ஷாஜகானும் அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தினோம்.

    அப்போது புதுவை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பொதுமக்கள் புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டோம். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், செயலாளர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, வருவாய், மீன், கல்வி, மருத்துவம், மின்சாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவையில் தாழ்வான பகுதிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை மழைக்காலத்தில் அங்கிருந்து அகற்றி சமுதாய கூடம், பள்ளிக்கூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை உடனே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச்செல்வர். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிகளில், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல்துறை மூலம் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


    அமைச்சர் ஷாஜகான் இன்றும், நாளையும் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளார்.

    புதுவை அரசு ஏற்கனவே கால்வாய்களை தூர்வாரியுள்ளது. நகர பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்ளை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் தண்ணீர் தேங்கும் இடங்களான கிருஷ்ணாநகர், பாவாணர் நகர், இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், நெல்லித்தோப்பு, சுப்பையா சிலை ஆகிய பகுதியில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை சார்பில் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மருந்துகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக புதுவை அரசு கஜா புயலை சமாளிக்கவும், பேரிடர் வராமல் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    புதுவை அரசு நிர்வாக எந்திரம் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இருப்பினும் அதிக வெள்ளம் ஏற்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை அணுகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Narayanasamy #GajaCyclone #Gaya
    புதுவை விடுதலை நாள் விழா புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். #PondicherryCM #Narayanasamy
    புதுச்சேரி:

    இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலையில் புதுவை பகுதி மட்டும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்ந்து புதுவை பிரெஞ்சு ஆட்சியின் கீழே செயல்பட்டு வந்தது.

    பின்னர் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் விடுதலை பெற்று புதுவை மாநிலம் இந்தியாவோடு இணைந்தது.

    இந்த நாளை புதுவை விடுதலை நாளாக அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

    அதன்படி இன்று புதுவை விடுதலை நாள் விழா புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாணவ- மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    புதுவை விடுதலை நாளையொட்டி இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. #PondicherryCM #Narayanasamy
    கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    யூனியன் பிரதேசமான புதுவையில் யாருக்கு அதிகாரம்? என்பதில் தொடங்கிய மோதல் முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொழில் அதிபர்களை மிரட்டி சமூக பங்களிப்பு நிதியை கவர்னர் கிரண்பேடி வசூலிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார் கூறினார்.

    அதோடு விதிமுறைக்கு உட்படாமல் வசூலிக்கப்பட்டுள்ள சமூக பங்களிப்பு நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி தரப்பில் கவர்னர் மாளிகையில் எந்த பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றும் புதுவையில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கும், கொடையாளிகளுக்கும் இடையே கவர்னர் மாளிகை இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுகிறது என்று மறுப்பு தெரிவித்தார்.

    அதோடு ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொல்வதால் பொய் உண்மையாகாது என்றும், தன் மீதான பொறாமையால் முதல்- அமைச்சர் நாராயணசாமி, தமக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.


    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் போல் நான் நாகரீகம் இல்லாமல் பொய் சொல்கிறார் என கூறமாட்டேன். ஆனால், கவர்னர் கிரண்பேடி உண்மைக்கு புறம்பாகவே பேசி வருகிறார் என்று கூறினார்.

    மேலும், அரசு சார்பு நிறுவனத்திற்கு சம்பளம் வழங்க கடன் கேட்ட கோப்பை கவர்னர் கிரண்பேடி திருப்பி அனுப்பி விட்டார். இதனால் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    இதனையும் கவர்னர் கிரண்பேடி மறுத்துள்ளார், அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை அங்கீகாரம் கொடுக்காத போது அரசு சார்பு நிறுவனத்துக்கு கடன் வழங்க கவர்னராலும் ஒப்புதல் அளிக்க முடியாது, இலவச அரிசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பயன்பாட்டிற்கு திருப்ப முடியாது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி முழுமையான தகவல்களை மக்களுக்கு தரவில்லை. இப்போது என்னையும், முதல்-அமைச்சரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த சோதனை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும், அதற்கு நான் தயார், முதல்- அமைச்சர் நாராயணசாமி தயாரா?

    இவ்வாறு டுவிட்டரில் கிரண்பேடி கூறியுள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    ×