search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95056"

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு வரும் ராகுல் காந்தியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    2019 இந்திய பொது தேர்தலில் சில பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று வைரலாகியுள்ளது.



    இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 பொது தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் சிலர் 2,11,820 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலர் 1,40,295 வாக்குகளும் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் அடங்கிய பதிவுடன் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படாமல், இப்படி ஒரே அளவிலான வாக்குகளை பெறுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் இடம்பெற்றிருக்கிறது.



    சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவில் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒரே அளவு வாக்குகளை பெற்றதாக அவர்களின் பெயர்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற ஒரே அளவு வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் பதிவிட்டு அவர்களின் பெயர் பதிவிடப்படவில்லை. 



    இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் சரியாக 2,11,820 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 1,40,295 வாக்குகளை பெற்றிருப்பதாக பதிவிடப்பட்டுள்ளது. 

    வைரல் பதிவின் படி ஏழு பா.ஜ.க. வேட்பாளர்கள் பெற்ற உண்மையான வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடிந்தது. அதில் அவர்கள் பெற்ற வாக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



    போலா சிங்: 6,77,196
    மேனகா காந்தி: 4,58,281
    உபேந்திரா நர்சிங்: 5,35,594
    ஹரிஷ் திவேதி: 4,69,214
    சத்யபதி சிங்: 5,19,631
    சங் மித்ரா மவுரியா: 5,10,343
    குன்வர் பாரதேந்திரா சிங்: 4,88,061

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி சமூக வலைதளங்களில் பகிரப்படும் பா.ஜ.க. வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் எதுவும் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.
    மத்திய மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.

    ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.


    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பா.ஜனதாவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்துவோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜனதாவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

    பா.ஜனதா சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது தான் அரசியல் நாகரீகம்.

    பா.ஜ.க.வின் அமைச்சரவையில் யார்- யார் இடம் பெற வேண்டியது என்று முடிவு செய்ய வேண்டியது பிரதமர் மோடி தான். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    மேலும் பா.ஜனதா மதவாதத்தை முன்வைத்தும், பாகிஸ்தான் பிரச்சனையை முன்வைத்தும், புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மத பெயரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    காங்கிரஸ் கட்சியான நாங்கள் எல்லா மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரம் எடுபடவில்லை.

    மத பெயரால் பிரசாரம் செய்த பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் எடுபட்டது. பா.ஜனதா சொன்ன நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்கிறேன். நதிநீர் இணைப்பு நல்லதுதான் காவிரி இணைப்பு தேவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமேதி தொகுதியில் தோல்வியடைந்தது தொடர்பாக ஆராய 2 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

    அமேதி தொகுதியில் 3 தடவை தொடர்ச்சியாக வென்று எம்.பி.யாக தேர்வான ராகுல் இந்த தடவை வயநாடு தொகுதிக்கு தாவியது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி போட்டியிட்டார். இந்த தடவை அவரது பிரசாரம் மிக தீவிரமாக இருந்தது. எனவே ராகுல் தோல்வி அடைந்து விடுமோ என்று கருதி வயநாடுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்தது.

    அதை உறுதிப்படுத்துவது போல அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார். அவரை ஸ்மிதிரி ராணி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.வயநாடு தொகுதியில் மட்டுமே அவ ரால் வெற்றி பெற முடிந்தது.



    அமேதி தொகுதியானது காங்கிரசின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு இந்த தொகுதி மிகவும் கை கொடுப்பதாக இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை மக்கள் ராகுலை கைவிட்டது ஏன் என்பது புரியாமல் காங்கிரசார் தவித்து வருகிறார்கள்.

    ராகுலுக்கும் அமேதி மக்கள் தனக்கு வெற்றியை தராதது ஏன் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு விடை காண்பதற்காக அவர் 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜூபைர்கான், ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா இருவரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் அமேதி தொகுதிக்கு செல்ல இருக்கிறார்கள். ராகுல் மீது அதிருப்தி ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது பற்றி அவர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.

    அந்த ஆய்வை அவர்கள் அறிக்கையாக தயாரித்து ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ராகுல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருப்பதால், தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அதுபற்றி ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

    ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே இடையில் வெளியேறிவிட்டார்.

    ஒரு வாரமாக கட்சியில் எந்த பணிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. மூத்த தலைவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இடையில் ஜவகர்லால் நேரு நினைவு நாள் நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கும் சென்ற அவர், அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    தற்போது காங்கிரசுக்கு 52 எம்.பி.க்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் 55 எம்.பி.க்கள் தேவை. எனவே சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை (5 இடம்) காங்கிரசோடு இணைத்து விடலாம் என்ற திட்டம் உள்ளது. இதற்காக சரத்பவாரை சந்தித்து பேசி இருக்கலாம் என்று தெரிகிறது.

    பின்னர் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.



    ஒருவாரமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் மவுனமாக இருந்து வந்த ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.

    இதன் மூலம் அவர் கட்சி பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார். இதனால் அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ராகுல்காந்தி பாராளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இது சம்பந்தமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களை கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மாநில அளவில் பல தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு வசதியாக பல மாநிலங்களின் தலைவர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, தேர்தலில் பெற்ற தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க முடியாததால் இன்று மாலை நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின.
    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மாநில அரசு தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகிறது.

    சமீபத்தில் அதிருப்தியில் உள்ள 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் இது அரசியல்ரீதியான சந்திப்பு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.



    இந்தநிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார். அப்போது குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார். இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், “கர்நாடக முதல்-மந்திரி மாநில அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார்.

    இரு கட்சிகளின் ஒத்துழைப்புடனும், நல்லுறவுடனும் மாநில அரசு சுமுகமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்றும், அவரது சேவை நாட்டுக்கு தேவை என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று மராட்டியம், பஞ்சாப் மாநில கட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராகுல் அறிவிப்பையொட்டி மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

    மாநில தலைவர் அசோக் சவான், மும்பை நகர தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ராகுல் காந்தி நாடு முழுவதும் அயராமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். உண்மையில் தேர்தல் தோல்விக்கு மாநில தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரசுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்கள் ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல் காந்தியின் தலைமையும், வழிகாட்டலும் தேவை. எனவே ராகுல் காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    முதல்- அமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை புதுவை மாநில காங்கிரசார் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்அமைச்சர் நாராயணசாமிக்கு இன்று பிறந்தநாள். 1947-ம் ஆண்டு மே 30-ந்தேதி பிறந்த அவருக்கு இன்றோடு 72 வயது பூர்த்தியாகிறது. நாராயணசாமியின் பிறந்த நாளை புதுவை மாநில காங்கிரசார் மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடினர்.

    மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் நாராயணசாமி நீடூழி வாழ வேண்டும் என வேண்டி தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

    மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு,

    நிர்வாகிகள் சிவ. சண்முகம், சரவணன், காசிலிங்கம், உமாசங்கர், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் ஞானசேகரன், ராதா ரெட்டியார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பிறந்தநாளையொட்டி பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். இதேபோல புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் வட்டார காங்கிரஸ் சார்பில் கோவில்களில் விசே‌ஷ பூஜை, அபிஷேகம் போன்றவை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர். முதியோர் இல்லம், மன வளர்ச்சி குன்றியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றிலும் மதிய உணவு வழங்கினர்.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது. மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

    பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது. 
    கார்த்தி சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி உள்ளார். எனவே, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் நடைபெறும். இதற்காக வழக்கை இன்று சிறப்பு நீதிமன்றத்திற்கு சிபிஐ மாற்றி உள்ளது. 
    கேரளாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி. இவர், கடந்த 1999 முதல் 2004 வரை கண்ணூர் தொகுதி எம்.பி. யாக இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்துல்லா குட்டி, பாரதீய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடி யையும் அடிக்கடி பாராட்டி வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே காரணம்.

    காந்திய கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டமும் மக்களின் பாராட்டை பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா யாரும் எதிர் பார்க்காத வெற்றியை பெற்றது. இதனை எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியில் உள்ளவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியை பாராட்டியதும், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதும் கேரள காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


    இது தொடர்பாக அவர்கள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து கட்சி மேலிடம் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மோடியை புகழ்ந்ததால் இப்போது சிக்கலில் சிக்கி உள்ள அப்துல்லா குட்டி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை பாராட்டி பேசினார்.

    இதற்காக கடந்த 2009-ம் ஆண்டே அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது இங்கும் அதே சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

    ×