search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பி.எஸ்."

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியது 'அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள், படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில் அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. 

    ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படவேண்டும். 

    எனவே, இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்  'அம்மா உணவகம்' என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்  கூறி உள்ளார்.

    பொன்பரப்பி சம்பவம் வேதனை அளிக்கிறது என்று அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையிலும்; புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக, ஒரு சமூகத்தைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டதன் காரணமாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையிலும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு அங்கு சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்பட்டது.

    நிலைமை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

    இவ்விரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் அவ்வப்போது தெரியவருகிறது.

    அமைதி காக்க அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இச்சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
    ×