search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி தொழிலாளர்கள்.

    நேற்று இரவு இவர்கள் தக்கோலம் அருகே உள்ள சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சுகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.

    ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திரா வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ் மகன் வேமண்டு சீனு (வயது 38). இவர் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாபநாசம் அருகே மேல செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேமண்டுசீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தங்கி வேலை பார்க்க கூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வேமண்டு சீனு மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வேமண்டுசீனு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த சுரேசை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகனின் திருமணத்தன்று சீர்வரிசைகளை வீட்டில் வைத்துவிட்டு வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பள்ளிவிடை கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி (வயது 55), விவசாயி. இவர் தனது 2-வது மகன் மதியழகனுக்கு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சீர்வரிசை பொருட்களை தனது வீட்டுக்கு பூராசாமி ஒரு வாகனத்தில் எடுத்து சென்றார். பின்னர் பள்ளிவிடை கிராமத்தில் இருந்து மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    திருமண மண்டபத்தின் அருகே வந்தபோது, ரேஷன் கடை எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பூராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூராசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் திருமணத்தன்று விவசாயி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    விளாத்திகுளம் அருகே கல்லூரி பஸ் மோதி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தேவாரம் (வயது 7). அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலையில் மேல்மாந்தை கிராமத்தில் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் ஒரு வண்டியில் விற்றுக்கொண்டு இருந்த சப்போட்டா பழத்தினை வாங்கிய தேவராம், சாலையை கடக்க முயன்றுள்ளான். அப்போது வேம்பாரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் தேவாரம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி டிரைவர் தூத்துக்குடி செவலை சேர்ந்த காசி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடை பகுதியில் தண்டவாள பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த ரெயில் பயணிகள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இலங்கையில் கனமழை தொடரும் என்றும், 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. ரத்தினபுரி, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், திரிகோணமலை, பதுளைகாலி, கேகாலை, நுவரெலியா, பதுளை ஆகிய 13 மாவட்டங்கள் மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தன. வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

    பதுளை, கொழும்பு, காலி, கருத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, ரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் கறம்பக்குடியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்த்திகா ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சுப்பிரமணியன் சம்பவத்தன்று கறம்பக்குடியில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ராங்கியன் விடுதிக்குச் சென்றார். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு அவர் மட்டும் ஆட்டோவை ஓட்டி கொண்டு கறம்பக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பிள்ளகுறிச்சி சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை, அப்பகுதி மக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பயணத்திற்கு ஏற்றபடி இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம், கீழ்பக்கம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், இரவில் கடைக்குச் சென்று உணவு அருந்தியுள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    ராமகிருஷ்ணாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அவர் வந்தபோது குண்டும், குழியுமான சாலையால் தவறி கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் அங்கு ராஜபாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் சந்திரசேகர் சிக்கிக் கொண்டார். சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நகமங்கலத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (15 ). இவர் வீட்டிலிருந்து அச்சங்குளம் சென்று கொண்டிருந்த போது கூனம்குளம் கண்மாய் கரையில் இருந்த இலுப்பை மரம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (57), சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்களான இவர்கள் 3 பேரும் மதுவிருந்துடன் கொண்டாட முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபான பாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய விடிய மதுகுடித்ததாக தெரிகிறது.

    பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்திபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்து அவர்களது குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், 3 பேரும் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.

    ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    3 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்து இருக்கலாம் என்று அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனையில், 3 பேரும் அதிக போதைக்காக விஸ்கியில், பெயிண்டுக்கு கலக்கும் தின்னரை கலந்து குடித்தது தெரியவந்துள்ளது. இதனால் தொண்டையில் இருந்து வயிறு வரை அரிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ராமநாதபுரம் அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கேணிக்கரையில் ஸ்டூடியோ நடத்தி வந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது37). இவரது நண்பர் குயவன்குடியை சேர்ந்த பிரகாஷ் (41). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

    நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் காரிக்கூட்டம் சென்று விட்டு மாலை குயவன்குடி செல்வதற்காக ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர்.

    அப்போது ராமேசுவரத்தில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ் ராஜேஷ் கண்ணன், பிரகாஷ் மீது மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்து கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார். இதையடுத்து அவரது உடல் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டார வாடை லெட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி (வயது 60). இவர் பண்டாரவாடை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக சென்ற விரைவு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து அவருடைய மகள் ராஜகுமாரி (34) கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    சென்னை :

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 31). பி.இ.எம்.பி.ஏ. படித்த பட்டதாரியான இவருக்கும், சென்னை பீர்க்கன்காரணையை சேர்ந்த எம்.பி.பி.எஸ். டாக்டரான கார்த்திகா (30) என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் சென்னையில் தங்கி இருந்த மனோஜ்குமார், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி கார்த்திகாவுடன் சென்னையில் இருந்து தனது ஊரான அரக்கோணம் நோக்கி காரில் சென்றார்.

    திருவள்ளூரை அடுத்த கூவம் சாலையில் சென்றபோது, எதிரே சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி சென்ற கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் மீது சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு இருந்த லாரி கவிழ்ந்தது. லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    காருக்குள் இருந்த புதுமண தம்பதி மனோஜ்குமார்-கார்த்திகா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பிய லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த மப்பேடு போலீசார், சுமார் 5 மணி நேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிய காரை வெளியே எடுத்தனர். பின்னர் காரின் பாகங்களை வெட்டி எடுத்து, இடிபாடுக்குள் சிக்கி கிடந்த கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×