search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95143"

    துறையூர் ஆருகே அரசு விடுதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலையில் பழங்குடியினர் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிடம் சேதம் அடைந்து இருந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த விடுதி கட்டிடத்தை இடித்துவிட்டு தற்போது, ரூ.2கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் விடுதியின் முதல்தளம் கட்டும் பணியில் கண்ணனூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கொத்தனார் மணிபாரதி (வயது 42) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    முதல்தளத்தில் 20 அடி உயரத்தில் நின்று மணிபாரதி குறுக்கு சுவர் கட்டிக்கொண்டிருந்தபோது, திடீரென்று சுவர் இடிந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு நின்று சுவர் கட்டிக்கொண்டிருந்த மணிபாரதியும், அவருடன் நின்று பணியாற்றிய துறையூர் நத்தகாடு விநாயகர் தெருவை சேர்ந்த சங்கீதா (32) ஆகியோரும் கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிபாரதி இறந்தார். சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமையில் பொதுமக்கள் துறையூர்-திருச்சி சாலையில் கூடினர். பழங்குடியினர் மாணவிகள் விடுதி கட்டிடம் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் தான் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. எனவே தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டவேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை எடுத்து, அவர்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடததிலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாஸ்(வயது 37), சதீஷ்(25), சுனில்(31). இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதே கம்பெனியில் சேலத்தை சேர்ந்த மகாலிங்கம்(32), அருண்குமார்(35), மன்னார்குடியை சேர்ந்த கண்ணதாசன்(37) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று மாலை ஒரு காரில் திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்றனர்.

    காரை சேலத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன்(40) ஓட்டிசென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு மும்பை- சென்னை அணிகள் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு அங்கிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு காரில் புறப்பட்டனர்.

    காலை 5 மணியளவில் அவர்கள் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் காரில் இருந்த அருண்குமார், சதீஷ், கார் டிரைவர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தாஸ், மகாலிங்கம், கண்ணதாசன், சுனில் ஆகிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் விபத்தில் இறந்த அருண்குமார், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கீச்சாங்குப்பம் வடக்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 4 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்த போது ராமச்சந்திரன் படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கினார்.

    அவருடன் சென்றவர்கள் ராமச்சந்திரனை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து நாகை கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூருவில் ரெயில் என்ஜின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார். மேலும் அவர் யார்?, எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெங்களூரு :

    பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். திடீரென்று அவர் ரெயில் என்ஜின் ஒன்றின் மீது ஏறியதோடு, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் என்ஜினில் இருந்து கீழே இறங்கும்படி அவரிடம் கூறினார்கள். ஆனால், அவர் கீழே இறங்கி வரவில்லை. இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது.

    இதைப்பார்த்த வாலிபர் தனது கைகளை அசைத்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள உயர்மின் அழுத்த வயரில் அவருடைய கை பட்டது. இதனால், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவருடைய உடலை கைப்பற்றிய சிட்டி ரெயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?, எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இருப்பினும் அதுபற்றிய எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தற்கொலை செய்வதாக ரெயில் என்ஜின் மீது ஏறி மிரட்டல் விடுத்து மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ரெயில் நிலையத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாலும், அந்த வீடியோ வெளியானதாலும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் நேற்று திருப்பூர் சந்தைபேட்டைக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு மேல் பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால் லாரி சென்றது. லாரியை பின் தொடர்ந்தே சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஒரு இடத்தில் லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர் மொக்கையனும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு முதல் அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். #srilankablast #narayanasamy

    புதுச்சேரி:

    இலங்கையில் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மி‌ஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோவில் முன்பு நடந்தது.

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அஞ்சலிக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் அது மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

    உலகம் முழுவதும் பல நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். அமைப்பை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். புதுவை அரசை பொறுத்தவரை எங்களால் முடிந்த வரை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மகளிர் காங்கிரஸ் சார்பில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு பழைய பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். #srilankablast #narayanasamy

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழந்தது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதே போல் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது.

    இந்த மழை 4.45 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் அவர்களது வாகனங்களை முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவளாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 56) என்பவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை அந்த பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அந்த மாடு செத்தது.

    இதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவர் தனது வயலில் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ஒரு பசு மாடு செத்தது. மேலும் ஒரு மாடு காயமடைந்தது.

    சங்கராபுரம்,கச்சிராயப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 10 வரை மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.15 மணி முதல் 6 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் திருநாவலூர், மயிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசாக குளிர்ந்த காற்றுவீசியது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை தூறி கொண்டு இருந்தது.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆவினங்குடி, பட்டூர், கோழியூர் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி அளவில் பலத்த சூறை காற்று வீசியது. இதில் பட்டூர்- கோழியூர் சாலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக வராததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையின் குறுக்கே மரக்கிளை விழுந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளையை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. அதன்பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசாக மழை தூறியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டாக்டர் பலியானார். தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
    புதுச்சேரி:

    சென்னை திருவான்மியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டீனாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 24). இவர் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து முடித்து அங்குள்ள விடுதியில் தங்கி பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் புதுவை பல்கலைக்கழக விடுதியில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சின்ன காலாப்பட்டில் வந்த போது கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே பெரிய காலாப்பட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உமாநாத் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக் கொண்டது.

    இதில், தூக்கி வீசப்பட்ட கோபாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உமாநாத்துக்கும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார். உமாநாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி, ஏட்டு தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த டாக்டர் கோபாலகிருஷ்ணனின் தாயும் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சங்கரநாராயணன் தம்பதியினருக்கு கோபால கிருஷ்ணன் ஒரே மகன் ஆவார்.

    கோபாலகிருஷ்ணன் பயிற்சி முடித்ததும் சென்னையில் தனியாக கிளினிக் தொடங்க அவரது பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இறந்து போனதால் அவரது உடலை பெற்றோர் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
    சென்னை ராமாபுரத்தில் பஸ்சுக்கு காத்திருந்த 3 பேர் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதியது. இதில் 3 பேரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    சென்னை:

    சென்னை ராமாபுரம் மியாட் ஆஸ்பத்திரி அருகில் நேற்று இரவு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

    அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் 3 பேர் வெளியூர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். தறிகெட்டு ஓடிய லாரி 3 பேர் மீதும் மோதியது.

    இந்த விபத்தில் 3 பேரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர்கள் கிரு‌ஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி, முரளி, சிவகுமார் என்பதும் சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

    விபத்து நடந்ததும் லாரியை டிரைவர் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    மங்கலம் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    மங்கலம்:

    மங்கலம் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி ராமச்சந்திரன் (வயது 52). மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான, இவர் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதை அவருடைய மனைவி கண்டித்தார்.

    இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இறந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமச்சந்திரன் என்பவர் சப்-காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் புளியம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் (வயது36). என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் இவர் அங்குள்ள எந்திரத்தில் வால்வுகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் எந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இன்பராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே இன்பராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இன்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     


    இதுதொடர்பாக கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த இன்பராஜுக்கு ஜெபா அன்ன பூர்ணம் என்ற மனைவியும், ஜெபிஷா, ஏஞ்சல் என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே இன்பராஜின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.

    அணுமின் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலியான இன்பராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்திற்கு ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அணுமின் நிலைய நுழைவு வாயிலில் போராட்டம் நடந்ததால் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதுகாப்பாக செல்ல அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வாய்மேடு அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாய்மேடு:

    திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகரத்தினம் (வயது 30). தொழிலாளி. இவர் வாய்மேடு கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாய்மேடு துணை மின் நிலையம் அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி முருகரத்தினம் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×